பெரியார் பிறந்த நாள் ஆசை!
17.9.2026 தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள்… சமூக நீதி நாள்… சமத்துவ நாள்… சுயசிந்தனையாளர் நாள்… பகுத்தறிவாளர் நாள்… சுயமரியாதைத் திருமண நாள்…
பார்ப்பனர்கள் திருமணத்திற்கு நாள் குறித்துக் கொடுப்பார்கள்! திருமணம் நடத்தி வைப்பார்கள்.! ஜோதிடர்கள் பெயர் வைப்பார்கள்! அமரபட்சம், பூர்வ பட்சம் நட்சத்திரம் இவற்றை கணக்கிட்டு இறந்தவருக்கு திதி கொடுக்க வேண்டிய நாள் என்று சொல்வார்கள். நாட்காட்டியிலும் பஞ்சாங்கத்திலும் நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், குளிகை கீழ்நோக்கு நாள், மேல்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று அச்சிடப்பட்டு மனிதன் துவங்கும் நிகழ்வுகளுக்கு-நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் நமது ஆசிரியர் அவர்கள் ராகு காலத்தில், எமகண்டத்தில், மாலை நேரத்தில் சுயமரியாதைத் திருமணத்தை தலைமை ஏற்று நடத்தி வைத்து இன்று அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அறிவியலாளர்கள் கண்டுபிடித்த வானொலி, தொலைக்காட்சி, கைப்பேசி இவற்றின் மூலமாக நாள்தோறும் ஜோதிடம், மூடநம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று மேல்ஆதனூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை ஆலயத்தில் இருந்து மணி அடிக்கும் நேரம் காலை 6 மணி. இன்று ஆவணி மாதம் 31-ஆம் நாள் வியாழக்கிழமை, இன்று நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், குளிகை எதுவரை என்று சொல்லி ஒலிபரப்புவார்கள். ஒரு மணிக்கு ஒரு தடவை மணியைச்சொல்லி இரவு வரை நினைவுபடுத்துவார்கள். இன்று மிகவும் ஆடம்பரமாக மின் ஒளி அலங்காரத்துடன் ஊர்வலமாக தெருக்களில் கடவுள் பவனி வருகிறார். வான வேடிக்கை, பட்டாசு வெடி சத்தம் இல்லாமல் தேர், சாமி ஊர்வலம் நடைபெறாது. ஆண்டின் பெரும்பாலான நாட்களில் கடவுள்கள் பாட்டு சத்தம் கேட்காத நாள் இல்லை. ஆனால், காது மருத்துவர் 45 dB வீட்டிற்கு உள்ளேயும் 55 dB வெளியேயும் ஒலியின் அளவு இருக்க வேண்டும் என்று அறிவுத்துகிறார்கள். தடை செய்யப்பட்ட கூம்பு ஒலிபெருக்கியை பயன்படுத்துகிறார்கள்.
விநாயகர் ஊர்வலத்தால் மனித உயிர்கள் இறந்தாலும் நிறுத்தாமல் ஆடம்பரமாக பொழுது போக்காக இளைஞர்கள் கொண்டாட்டிக் கொண்டி ருக்கிறார்கள்.அறிவியல் கண்டுபிடிப்புகள் பெரும் பான்மையான மக்களுக்கு மூடநம்பிக்கைகளை வளர்ப்பதற்கும், குறிப்பாக இளைஞர்களை மாணவ, மாணவிகளை ஒழுக்கக் குறைவான செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பெரியாரின் அடிச்சு வட்டில் பயணிக்கும் மானமிகு ஆசிரியர் அவர்களே.. இன்று பெரியார் பிறந்த நாள் பன்னீர் செல்வத்தின் ஆசை! ஆசை! ஆசை! பேராசை! தந்தை பெரியார் தொலைக்காட்சி ஆரம்பியுங்கள் என்று உங்களை மாணவன் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் சுயமாக சிந்திப்பார்கள். பகுத்தறிவு வளரும். மூட நம்பிக்கைகள் ஒழியும். தந்தை பெரியார் அவர்கள் விரும்பிய தமிழ்நாடு உருவாகும்.
– அ.பன்னீர்செல்வம்
நரையூர் வேப்பூர் வட்டம்,
கடலூர் மாவட்டம்
