மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி
ஜெயதேபியின் ”சதி” வழக்கிற்கு அய்ந்து பார்ப்பனர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் தண்டனையடைந்த பார்ப் பனர்கள் சார்பில் மேல்முறையீடு வழக்குரைஞர் மோதிலால் நேருவால் செய்யப்பட்டது.
இரண்டு பிரிட்டிஷ் நீதிபதிகள் அமர்வு இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்தது. நீதிபதி வில்லியம் டுட்பால் தலைமையில் மற்றொறு நீதிபதி ஆல்ஃபிரெட் எட்வர்ட் ரைஸ் ஆகியோர் இந்த அமர்வில் இருந்தனர். அவர்கள் மோதிலால் நேருவின் வாதங்களால் திருப்தி அடையவில்லை. அதோடன்றி அரசு தரப்பு வாதங்களைக் கூட அவர்கள் கேட்கவில்லை. 1.11.1913 அன்று தங்கள் தீர்ப்பை அவர்கள் வழங்கினர்.
நீதிபதி வில்லியம் டுட்பால் தன் தீர்ப்பில், “மேல்முறையீடு செய்தவர்களே இந்த வழக்கில் தாம் ஆற்றிய பங்கை மறுக்கவில்லை. ராம் தயாள் மட்டும், தான் அந்தப் பெண்ணின் மீது நெய் ஊற்றவில்லை என்று மறுத்தாலும், அவர் நெய்யை ஊற்றினார் என்பது மற்ற சாட்சிகள் உறுதிப்படுத்துகின்றன” என்று தீர்ப்பை எழுதிய நீதிபதி அதற்கு அடுத்து எழுதியதுதான் வேடிக்கையாக இருந்தது. (சான்று: “சாதிப் பெருமை” – மனோஜ் மிட்டா.)
தீர்ப்பை வழங்கிய நீதிபதி டுட்பால் மேலும் எழுதுகிறார், “அனைத்தும் தயாராக இருந்தபோது அந்த விதவை நெருப்பைக் கேட்டதாகவும் ராம் தயாளும், டோட்ராஜும் அதைத் தர மறுத்ததாகவும் அவளிடம் ஏதாவது நற்குணம் இருந்தால், அவளே நெருப்பை உண்டாக்க வேண்டுமென்று கூறியதாகவும், அதைக் கேட்ட அவர் இறந்த கணவனின் காதுக்குள் ஏதோ முணுமுணுத்துவிட்டு தன் கைகளைத் தூக்கிக் கடவுளை வழிபட்ட சிறிது நேரத்திற்குப் பிறகு சிதை “குப்”பென்று தீப்பிடித்து எரிந்ததாகவும், சாட்சிகளும், குற்றம் சாட்டப்பட்டவர்களும், கூறியிருக்கின்றனர்? தாம் கூறிய கதையை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதை நிரூபிப்பதற்காகச் சம்பவம் நடந்த அன்று காலையில் கூட ஜெயதேபி சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் என்று சதியில் பங்கேற்றவர்களும், பார்வையாளர்களும் கூறியது நம்பும்படியாக இல்லை. பிரதான குற்றவாளிகள் இருவரிடமும் ஜெயதேபி தான் “சதி”யில் ஈடுபடுவதைத் தடுத்தால் அவர்களையும் எரிந்து, சாம்பலாகும்படி “சாபம்” இட்டு விடுவேன் என்று கூறியதாகக் கூறுவதும் நம்பும்படியாக இல்லை” என்பதே நீதிபதி டுட்பால் அவர்களின் தீர்ப்பில் குறிக்கப்பட்டிருந்தது. (சான்று: “ஜாதிப் பெருமை” – மனோஜ் மிட்டா.)
நீதிபதி டுட்பால், “இயல்பாகவே சாட்சிகள் குற்றம் சாட்டுகிறவர்களிடம் பரிவு காட்டுகின்றனர். உண்மையில் சிதைக்கு யார் தீ மூட்டியதென்று சொல்லாமல் அமைதி காக்கும் ஒரு சதி நடக்கிறது என்பது தெளிவு. இதற்காகத்தான் அற்புதங்கள் நடப்பதாக கதைகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.சிதை தன்னிச்சையாக எரிந்தது என்று சொல்வதும் இந்த அற்புதக் கதைகள் போல நம்பத் தகுந்ததல்ல.
இந்தச் சூழலில் சிதைக்குத் தீ மூட்டியது அந்த விதவையாவோ அல்லது ராம் தயாள்,டோட் ராஜ் ஆகிய இருவருமோ அல்லது அவர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்” என்று தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.பெண்ணை நெருப்பில் தள்ளிக் கொன்று விட்டு, அதில் அற்புதங்கள் நிகழ்ந்ததாக கதை கட்டிவிட்ட பார்ப்பனர்கள் முகத்திரை இதன் மூலம் கிழிக்கப்பட்டது.
மோதிலால் நேருவின் “அற்புத நிகழ்வின்(?)வாதங்களை நீதிபதி டுட்பால் முழுமையாக நிராகரித்தார்.நெருப்பில் ஜெயதேபி அமர்ந்த இறுதிச் செயலைத் தவிர மற்ற அனைத்துச் செயல்களையும் சுற்றி இருந்தவர்கள் தான் செய்தார்கள்.அந்தத் தற்கொலையைத் தடுப்பதற்கு எந்த முயற்சியையுமே யாரும் செய்யவில்லை.சிறிய பலப் பிரயோகம் செய்தே ஜெயதேபியை சிதையில் ஏறாமல் தடுத்திருக்க முடியும். ஆனால் யாருமே அதைச் செய்யவில்லை.
அந்தப் பெண்ணோடு சிதைக்கு அவ்வளவு அதிகாலையிலேயே நெருப்பை வைத்திருக்க வேண்டிய அவசியமு மில்லை. காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததாகக் கூறினாலும் அவர்கள் வரும்வரை ஏன் இறந்த வரின் உறவினர்கள் காத்திருக்கவில்லை?
காவல் நிலையம் 15 மைல்களுக்கு அப்பாலிருக்கும் நிலையில் அவர்கள் அங்கிருந்து சம்பவ இடத்திற்கு வர பிற்பகலாகும் என்பது சிதைக்கு அவசர, அவசரமாகத் தீ மூட்டியவர்களுக்குத் தெரியாதா?” என்பது போன்ற அறிவான வாதத்தே நீதிபதி தன் தீர்ப்பில் முன் வைத்தார்.
முதன்மை நீதிபதி டுட்பாலின் தீர்ப்பை இரண்டாம் நீதிபதி ஆல்ஃபிரெட் எட்வர்ட் ரைஸ்-ம் ஆமோதித்தார். “இயற்கையை மீறிய ஒரு சக்தி சிதைக்குத் தீ மூட்டியது நம்ப முடியாத ஒரு கதை” என்றார் அவர். அது குற்றமிழைத்தவர்கள் தங்கள் குற்றத்தை மறைக்க முயன்ற கட்டுக் கதை என்றார் அவர். குற்றத்திற்கு நேரடி சாட்சி இல்லை என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்கொலைக்குத் தூண்டினர் என்ற மோதிலால் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்று கூறிய உயர்நீதிமன்றம் தண்டனை விதிக்கப்பட்ட இருவரின் தண்டனை காலத்தை இரண்டு ஆண்டுகளிலிருந்து, நான்காண்டுகளாக மாற்றித் தீர்ப்பு வழங்கியது. அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு “சதி” பற்றிய மற்ற வழக்குகளின் தீர்ப்புகளுக்கு முன்னோடியாக இருந்தது அதிசயம் என்று கூறி சிதை தானே தீப்பிடித்தது என்று பார்ப்பனர்கள் ஏமாற்றி வந்த வழக்குகள் அனைத்தையும் நீர்த்துப் போக வைத்தது அலகாபாத் உயர்நீதி மன்ற தீர்ப்பு.
இரண்டாம் நீதிபதி ஆல்ஃபிரெட் எட்வர்ட் ரைஸ் தன் தீர்ப்பை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எழுதினாலும் வழக்குரைஞர் மோதிலால் நேருவையும், அவர் வாதத் திறமையையும் பாராட்டவே செய்தார்.ஆனால், “விளக்கெண்ணைக்குத்தான் கேடே ஒழிய, பிள்ளை பிழைத்தபாடில்லை” என்ற கதையாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.
அவர்களுக்கும் கொடுக்கப்பட்ட “தண்டனை”, “சதி” குற்றம் பெருமளவில் குறையவும் காரணமாக இருந்தது என்பது உண்மை. ஆனாலும் முழுமையாக இந்தக் குற்றம் குறையவில்லை என்பதே உண்மை.
நாடு சுதந்திரம் அடைந்தாலும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமை முழுமையாக நின்றபாடில்லை. அதற்குப் பிறகும் அங்கொன்றும், இங்கொன்றுமாய் முக்கியமாகக் கிராமப்பு றங்களில் பார்ப்பனர்களால் நடத்தப் பெற்றுக் கொண்டுதான் இருந்தது. இந்தக் கொடுமைகள் முழுதுமாய் நீங்கியது எப்போது?
(தொடரும்…)
