சாதனை நடனங்களுக்கிடையே காணாமல் போகும் இளைய தலைமுறையின் எதிர்காலம்!-பாணன்

7 Min Read

தனது தவறுகளை மறைக்க அடால்ப் ஹிட்லர் நடத்திய ஆடம்பர கலை நிகழ்ச்சிகள்

ஏழை, எளிய மாணவர்களுக்கு நிதி இல்லை!

ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது உள்கட்டமைப்பிலும், கடைக்கோடி குடிமகனுக்கும் சென்று சேரும் தடையற்ற கல்வி மற்றும் சுகாதாரத்திலும்தான் அடங்கியிருக்கிறதே தவிர, ஆடம்பரமான பெரும் பொருட்செலவில் செய்யும் நிகழ்ச்சிகளிலோ அல்லது விளம்பரப் பிம்பங்களிலோ அல்ல.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ள சூழலில், அரசின் முன்னுரிமைகளும் நிதி ஆதாரங்களும் எதை நோக்கிப் பயணிக்கின்றன என்பது இன்றைய முதன்மையான விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.

ஒருபுறம், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி நாட்டின் எதிர்காலத் தூண்களான அரசுப் பள்ளிகள் மூடப்படுவதும், ஏழை எளிய மாணவர்களுக்கான கல்வி நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவதும் கவலையளிக்கும் யதார்த்தமாக நிலவுகிறது. மறுபுறம், கின்னஸ் சாதனைகள், விளம்பர நிகழ்வுகள் மற்றும் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் விரயம் செய்யப்படுவதோடு, பல்லாயிரக்கணக்கான மாணவிகளின் கல்வியும் பொன்னான நேரமும் அரசியல், அழகியல்மயமாக்கலுக்குப் பலியாக்கப்படுகின்றன.

கட்டுரை, ஞாயிறு மலர்

மாணவர்கள் போராட்டம், அசாம் பெருவெள்ளம் பாதிப்பில் இருக்கும்போது ஆயிரக்கணக்கான மாணவிகளை ஆடவைத்து மோடி நடத்திய ரோடு ஷோ.

மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் அரசாங்கத்தின் விளம்பர மோகத்திற்கும் இடையிலான இந்த முரண்பாடான இடைவெளி, மக்களாட்சி, மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. கல்விச் சரிவு, ஆடம்பரச் செலவினங்கள், போலி அங்கீகாரங்கள் மற்றும் விளம்பர அரசியலின் பின்னால் உள்ள நிஜங்களை ஆழமாக ஆராய்கிறது இக்கட்டுரை.

இந்தியக் கல்வியின் தற்போதைய நிதி நிலை

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியளவை ஆராய்ந்தால், அது தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதைக் காண முடிகிறது.

மொத்த வரவு – செலவுத் திட்டத்தில் கல்விக்கான பங்கு:

2013-2014  — 4.6%

2025-2026  — 2.5%

நிதி ஒதுக்கீடு குறைவு: 2013-2014ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த வரவு – செலவுத் திட்டத்தில் (Budget) கல்விக்காக 4.6% ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2025-2026இல் அது 2.5 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, போதிய நிதியின்மை, பராமரிப்பின்மை காரணமாக, கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 93,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு, அருகில் உள்ள பள்ளிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

பள்ளி இடைநிற்றல் (Drop out): அதே பத்தாண்டுகளில் சுமார் 2.25 கோடி (இரண்டேகால் கோடி) குழந்தைகள் முறையான பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல் பாதியிலேயே வெளியேறியுள்ளனர். கல்வித் துறைக்கான நிதியைக் குறைப்பது, குறிப்பாக ஏழை, கிராமப்புற மாணவர் களின் எதிர்காலத்தைப் பெருமளவில் பாதிக்கிறது.

சாதனை முயற்சிகளும், பாதிக்கப்படும் கல்வியும்!

ஒருபுறம் அடிப்படை கல்வித் தேவைக்கு நிதி நெருக்கடி நிலவும் சூழலில், கின்னஸ் சாதனை களுக்காகவும், தலைவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி களுக்காகவும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகள் பயன்படுத்தப் படுகின்றனர். நிகழ்ச்சியின் ஆடல் நிகழ்ச்சிக்காக மட்டும் ஆந்திர மாநிலம் முழுவதிலுமிருந்து 2,400  மாணவிகள் வரவழைக்கப் பட்டனர். இவர்களை 50, 50 பேராக 48 குழுக்கள் அமைக்கப் பட்டன. இவர்களை மட்டும் அழைத்துச் செல்ல 450 பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன. இதுமட்டுமல்லாமல் இசைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களை அழைத்து வர மொத்தம் 3,000 பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன.

கட்டுரை, ஞாயிறு மலர்

 

வடமொழியில் ஒரு பழமொழி உண்டு
“ஆயிரம் எலிகளைத் தின்றுவிட்டு
பூனை ‘புனித’ யாத்திரை செல்கிறதாம்!”

எடுத்துக்காட்டாக நிகழ்ச்சி நடைபெற்ற வடகிழக்கு கடலோர மாவட்டமான விஜயநகரத்திற்கு நடனக் குழு மாணவிகளை அழைத்துச் செல்ல, மாநிலத்தின் தென்முனை மாவட்டமான குப்பத்திலிருந்தும் 63 மாணவிகள் அழைத்து வரப்பட்டனர். இந்த மாணவிகள் அனைவருக்கும் ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒரே ஒரு நபரின் விளம்பர மோகத்திற்காக, கிட்டத்தட்ட ஒட்டுமொத்த மாநிலத்தின் ஆயிரக்கணக்கான பழங்குடியின மாணவிகளின் கல்வியும், அவர்களின் பொன்னான நேரமும் வீணடிக்கப்பட்டுள்ளன. மாணவிகள் மட்டுமன்றி ஆசிரியர்கள், இதர பணியாளர்களின் உழைப்பும், அதற்காகச் செய்யப்பட்ட பெரும் பொருட்செலவும் வீணடிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய நிகழ்வுகளுக்காகப் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் திரட்டப்பட்டு வாரக்கணக்கில் பயிற்சிகள் அளிக்கப்படுவதால், அவர்களின் அன்றாடப் படிப்பும் தேர்வுக்கான ஆயத்தங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. பல நேரங்களில் மாணவர்களின் கல்வி நேரமே ஈடுகட்ட முடியாத இழப்பாக மாறுகிறது.

ஆடம்பர விழாக்களும், மக்கள் பண விரயமும்!

அரசாங்க நிகழ்வுகள் என்பவை மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவிக்கும் களங்களாக அமைவதே இயல்பு. ஆனால், 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசு விழாக்களின் தன்மையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கட்டுரை, ஞாயிறு மலர்

போபால் நிகழ்வுச் சான்று: 15 நவம்பர் 2021 அன்று மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நடைபெற்ற ‘பழங்குடியினர் பெருமை நாளுக்காக’ப் பிரதமர் கலந்துகொண்ட 4 மணி நேர நிகழ்விற்காகச் செலவழிக்கப்பட்ட தொகை ரூ.23 கோடி. இதில் மக்களை விழாவிற்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்துச் செலவு மட்டுமே ரூ.13 கோடி.

அவசரக் காலத்தில் மகப்பேறடைந்தப் பெண்களுக்கு மருத்துவ அவசர ஊர்தி வசதி கூடக் கிடைக்காத சூழல் நிலவும் அதே மாநிலத்தில், சில மணி நேர ஆடம்பர விழாவிற்கு ரூ.23 கோடி செலவிடப்பட்டது கேள்விக்குள்ளானது.

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காததற்காகச் சாதாரண மக்களிடமிருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ.25,000 கோடிக்கும் மேல் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு விளம்பரங்களுக்கும், சாலைப் பேரணி (ரோடு ஷோ)களுக்கும் செய்யப்படும் செலவுகள் குறித்த வெளிப்படைத்தன்மை உண்டா?

பயனற்ற திட்டங்களும், போலி அங்கீகாரங்களும்!

மேலைநாட்டு அமைப்புகளை எதிர்பார்க்கக் கூடாது என்று சாதாரண மக்களுக்கு வலியுறுத்தப்படும் அதே வேளையில், மக்கள் வரிப்பணத்தில் கின்னஸ் போன்ற அமைப்புகளிடம் சான்றிதழ்கள் பெறப்பட்டு விளம்பரப்படுத்தப்படுவதாக வரும் விமர்சனங்களை பா.ஜ.க அரசு கண்டுகொள்வதில்லை.

செயலிழந்த ‘உடான்’ வான்வழிப் பாதைகள்: ‘உடான்’ திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட 663 வான்வழிப் பாதைகளில் 50 சதவீதப் பாதைகள் தற்போது மூடப்பட்டுவிட்டன. உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர், அசம்கர், அலிகர், சித்ரகூட், ஷ்ராவஸ்தி மற்றும் மொராதாபாத் போன்ற விமான நிலையங்கள் செயல்படாமல் உள்ளன.

விமானமே இல்லாத ‘சிறந்த’ விமான நிலையம்: கஜுராஹோ விமான நிலையம் நுகர்வோர் திருப்தியில் மிக உயர்ந்த தரவரிசையைப் பெற்றுள்ளது. ஆனால், கடந்த ஜூலை மாதத்தில் அங்கிருந்து ஒரே ஒரு வணிகரீதியான விமானம் கூட இயக்கப்படவோ, தரையிறங்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குறுதிகளும், நடைமுறைச் சிக்கல்களும்!

அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் அளிக்கும் வாக்குறுதிகள் தேர்தலுக்குப் பின் எத்தகைய தடைகளைச் சந்திக்கின்றன என்பதற்கு டில்லி பாஜகவின் ‘மகிளா சம்ரிதி யோஜனா’ திட்டம் ஓர் உதாரணமாகச் சுட்டிக் காட்டப்படுகிறது.

தாமதமான அமலாக்கம்: 2025 டில்லி சட்டமன்றத் தேர்தலின் போது ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்றும், 2025 மார்ச் 8 முதலே தரப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டைக் கடந்தும் திட்டம் இன்னும் முழுமையான அமலாக்கத்திற்கு வரவில்லை.

நீண்ட நடைமுறைகளும் நிபந்தனைகளும்: விண்ணப் பங்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களது ஒப்புதல், மாவட்ட கண்காணிப்புக் குழு எனப் பல கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், ஆண்டிற்கு 2400 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக் கூடாது, 3 குழந்தைகள் இருக்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் பலருக்கு இப் பலன்களை கிடைக்கவிடாமல் செய்யவே திட்டமிடப்பட்டுள்ளன.

அரசியலின் அழகியல்மயமாக்கலும்,
மக்கள் திரள் மனநிலையும்!

ஜெர்மானியத் தத்துவஞானி வால்டர் பெஞ்சமின் (Walter Benjamin) 1935-இல் எழுதிய “தி வொர்க் ஆஃப் ஆர்ட் இன் தி ஏஜ் ஆஃப் மெக்கானிக்கல் ரீப்ரொடக்ஷன்” கட்டுரையில் முன்வைத்த “அரசியலின் அழகியல்மயமாக்கல்” (Aestheticisation of Politics) என்ற கோட்பாடு தற்போதைய சூழலை நன்கு விளக்குகிறது.

வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்ற நிஜமான துன்பங்கள் நிலவும் சூழலில், மாபெரும் பொருட் செலவிலான அரசு நிகழ்வுகள் மூலம் மக்களின் கவனம் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பப்படுகிறது.

அரசியலைக் கொள்கை விவாதமாக வைக்காமல், மிகப்பெரிய சடங்காகவும் காட்சிப் பொருளாகவும் மாற்றி, மக்களைக் கேள்வி கேட்கும் ‘குடிமக்களாக’ இல்லாமல் வெறும் ‘பார்வையாளர்களாக’ மாற்றுகிறது.

ஜனநாயகம் என்பது ஆடம்பர மேடைகளிலோ அல்லது விளம்பரப் பிம்பங்களிலோ வாழ்வதில்லை. மாறாக, அது அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் கேள்விகளுக்கு அளிக்கும் பதிலிலும், பொதுப் பணத்திற்கான வெளிப்படையான கணக்கிலும்தான் வாழ்கிறது.

வளர்ச்சி என்பது மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்படும் விளம்பரப் பிம்பம் அல்ல; மாறாக, அது ஒவ்வொரு குடிமகனின் வாழ்வாதாரத்திலும், கல்வி மற்றும் சுகாதாரத்திலும் ஏற்படும் உண்மையான முன்னேற்றமே ஆகும். அரசாங்கங்கள் தங்கள் முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்து, மக்கள் பணத்தை விளம்பரங்களுக்கு விரயம் செய்யாமல், நாட்டின் உண்மையான உள்கட்டமைப்புக்கும் அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த முன்வர வேண்டும்.

விளம்பர வெளிச்சமா? மக்கள் நலனா?

2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய நாட்டின் பிரதமர்  நரேந்திர மோடி பங்கேற்கும் அரசு விழாக்களும், வளர்ச்சித் திட்டத் தொடக்க விழாக்களும், பொதுக்கூட்டங்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய அளவில், அதிகமான பொருட்செலவில் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு திட்டத் தொடக்கத்தின்போதும் கட்டமைக்கப்படும் இந்த வெற்று ஆடம்பரங்கள், “உண்மையிலேயே நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள் அல்ல; அரசாங்கத்தின் பிம்பத்தைக் கட்டமைக்கும் விளம்பர உத்தியே ஆகும்.

கேள்விக்குறியாகும் பொறுப்புக்கூறல்

ஓர் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் முதன்மைப் பண்பு – அரசின் செலவினங்களில் வெளிப்படைத் தன்மையும்,  நடவடிக்கைகளுக்கான உரிய பயன் கிடைப்பதையும் உறுதி செய்வதே ஆகும். ஆனால், அதற்கு முற்றிலும் மாறான போக்கே கடந்த 12 ஆண்டுகால பா,ஜ.க. ஆட்சியில் நடந்து வருகிறது. இதற்கு காலம் அவர்களுக்குப் பதில் சொல்லும்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *