ஒருமுறை தேர்தலில் நின்று வெற்றி பெற்று, அதிலிருந்து பதவி விலகி, மறுபடியும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று – அதே பதவியில் அமர்வது அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுமா?
சென்னை, செப்.17 தேர்தலில் ஒருமுறை நின்று வெற்றி பெற்று, பிறகு பதவி விலகி, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதே பதவியில் அமர அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கிறதா? நாட்டின் ஜனநாயகம், பொது ஒழுக்கம், அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் வகையில் சட்ட நிபுணர்கள் பரிசீலிக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- ஒருமுறை தேர்தலில் நின்று வெற்றி பெற்று, அதிலிருந்து பதவி விலகி, மறுபடியும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று – அதே பதவியில் அமர்வது அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுமா?
- செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
- பெரியார் அனைவருக்கும் உரியார்!
- தந்தை பெரியார் மறைந்து 52 ஆண்டுகள் கடந்தும், இன எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமே!
- மதுரை மீனாட்சியம்மனுடைய குடமுழுக்கில் தமிழ்ப் புறக்கணிப்பு, ஏன்?
- தமிழ் ஓதுவார்களை அவமானப்படுத்துவதா?
- தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி விலகி, மீண்டும் அவர்களே தேர்தலில் போட்டியிடுவதுபற்றி நீதிமன்றம் என்ன சொல்லுகிறது?
- சட்ட ரீதியாக இன்னொரு நிலை என்ன?
- இந்திய அரசியலமைப்புச் சட்ட பத்தாவது அட்டவணை என்ன சொல்லுகிறது?
- ஒருமுறை பதவி விலகிவிட்டு, அதே நபர் மறுபடியும் தேர்தலில் போட்டியிட்டு, அதே பதவியில் அமர முடியாது!
- சட்ட நிபுணர்கள் ஆழ்ந்து சிந்திப்பார்களாக!
தந்தை பெரியாரின் 148 ஆவது பிறந்த நாளான இன்று (17.9.2026) காலை சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்
தமிழர் தலைவர் ஆசிரியர்
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
ஊடக நண்பர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே!
எப்போதும் மனிதநேயத்திற்காகவும், வாழ்வுரிமைக்காகவும் குரல் கொடுக்கத் தவறாத நம்முடைய மனிதநேய ஜன நாயக கட்சியின் தலைவர், அன்பிற்குரிய அருமைச் சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்கள் மற்றும் இயக்கத்தினுடைய துணைத் தலைவர், பொறுப்பாளர்கள், செய்தியாளர் நண்பர்கள் உள்பட அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்தநாளின் 148 ஆவது ஆண்டு விழாவின் வாழ்த்துகளை மிகுந்த மகிழ்ச்சியோடு அனைவருக்கும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரியார் அனைவருக்கும் உரியார்!
பெரியார் ‘‘அனைவருக்கும் உரியார்’’ என்பதற்கு அடையாளமாகத்தான் இந்த அரங்கம், இந்த பெரியார் திடல் இன்றைக்கு பல கட்சிக்காரர்களை எல்லாம் ஒன்றாக்கி, அத்துணைப் பேரும் தந்தை பெரியார் அவர்களின் தொண்டினைப் போற்றக்கூடிய அள விற்குச் செய்திருக்கிறார்கள். அதைத்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தெளிவாகச் ‘‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’’ என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட தந்தை பெரியாருடைய தத்துவங்கள் இன்றைக்கு உலகளாவிய அளவிற்குப் பரந்து கொண்டிருக்கின்றன.
சிங்கப்பூரிலே இந்த வாரம் விழா எடுக்கிறார்கள். மலேசியாவிலே விழா எடுக்கிறார்கள். அதுபோல மத்திய கிழக்கு நாடுகளிலே விழா எடுக்கிறார்கள். அமெரிக்காவிலே மட்டுமல்ல, கனடாவிலே, ஆஸ்திரேலியாவிலே இப்படி உலகம் முழுவதும் தந்தை பெரியார் ஒரு உலகப் பெரியாராக, உலகத் தலைவராக இன்றைக்கு உயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட தந்தை பெரியாருடைய கொள்கை என்பது மானுடநேயம். எங்கெங்கெல்லாம் மக்களு டைய உரிமைகள் பறிக்கப்படுகின்றனவோ, பாதிக்கப்படுகின்றனவோ, எங்கெங்கெல்லாம் சமத்துவம் சீர்குலைக்கப்படுகிறதோ, சமவாய்ப்பு மறுக்கப்படுகிறதோ, எங்கெங்கெல்லாம் பெண் அடிமை இருக்கிறதோ, அந்தப் பெண் அடிமையை எல்லாம் போக்கக்கூடிய ஒரு மாமருந்தாகப் பெரியாருடைய தத்துவங்கள் இருந்து கொண்டிருக்கின்றன.
தந்தை பெரியார் மறைந்து
52 ஆண்டுகள் கடந்தும்,
இன எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமே!
52 ஆண்டுகள் கடந்தும்,
இன எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமே!
தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்து 52 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், இந்த 53 ஆண்டுக் காலம் இன்னமும் தந்தை பெரியார், கொள்கை எதிரிகளுக்கும், இன எதிரிகளுக்கும் ஒரு சிம்ம சொப்பனமாக மிகவும் பெரிய அளவிலே இருக்கிறார்கள். அதைத்தான் ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம்.
இப்போது ஒரு பெரிய கொள்கைப் போராட்டம், நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட கொள்கைப் போராட்டத்திலே இன்னமும் பெரியார் தேவைப்படுகிறாரா? என்ற கேள்விக்கு, இப்போதுதான் அதிகமாகத் தேவைப்படுகிறார் என்று சொல்லக்கூடிய அளவிலே நிலைமைகள் இருக்கின்றன. எனவேதான், இந்த வகையில் தந்தை பெரியாரை உலகமயமாக்குவோம், உலகத்தைப் பெரியார்மயமாக்குவோம், அதன் மூலம் மாநிலத்தைக் காப்போம், மக்கள் உரிமைக்கு என்றென்றைக்கும் போராடுவோம், இதுதான் இன்றைய செய்தி, இதுதான் எங்களுடைய சூளுரை!
அடுத்து செய்தியாளர் நண்பர்களுக்கு ஒரு மிக முக்கியமான ஒரு செய்தி.
மதுரை மீனாட்சியம்மனுடைய குடமுழுக்கில் தமிழ்ப் புறக்கணிப்பு, ஏன்?
மதுரையிலே மீனாட்சியம்மனுடைய கோயில் குடமுழுக்கு என்ற பெயராலே பல நிகழ்ச்சிகள் அங்கு நடந்து, அதிலே அறங்காவலர்கள் பற்றி எல்லாம் பிரச்சினைகள் வந்திருக்கின்றன. அதை எல்லாம் தாண்டி இன்றைக்கு இன்னொரு செய்தி வந்திருக்கிறது. தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்றால், ஜாதி ஒழிப்பு நாள் என்று அர்த்தம், தீண்டாமை ஒழிப்பு நாள் என்று அர்த்தம். தமிழுக்கு முன்னிடம் கொடுக்க வேண்டும் என்பதுதான், தாய்மொழிக்கு முன்னிடம் கொடுக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது.
அப்படி இருக்கும்போது, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தலைமையிலே, மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ‘திராவிட மாடல்’ ஆட்சி சிறப்பாகப் பணியாற்றியதினுடைய முத்தாய்ப்பு சாதனை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று அதை நடைமுறைப்படுத்தி, உச்சநீதிமன்றத்திற்குச் சென்று, அன்றைக்கு நியமனங்களைச் செய்தது மட்டு மல்லாமல், தமிழ் ஓதுவார்களை எல்லாம் உள்ளே விட்டுப் பாடக்கூடிய அளவுக்குத் தமிழ் மொழியாம் செம்மொழிக்கு அதுவரையில் இருந்த தடைகளை அகற்றினார்கள்.
தமிழ் ஓதுவார்களை அவமானப்படுத்துவதா?
ஆனால், இன்றைக்குக் காலையில் வந்திருக்கிற செய்திப்படி, அங்கே ஓதுவார்களை எல்லாம் இன்றைய தமிழ்நாடு அரசு கைது செய்தது அல்லது வெளியே வரவிடவில்லை. அவர்களை அவமானப்படுத்தினார்கள். தமிழ் ஓதுவார்களுக்கு இடமில்லை என்று சொல்லுகிறபோது, தமிழையே கொச்சைப்படுத்துவது மாதிரி ஆகும். அது சரியான தகவலாக இருக்குமேயானால், நிச்சயமாக திராவிடர் கழகம், ஒத்த கருத்துள்ள அத்துணைத் தோழர்களும் இணைந்து கண்டிக்கிறோம்.
இன்னும் கேட்டால் மதுரையிலேதான், பல சங்கங்கள், தமிழ் சங்கங்கள் உருவாயின. அந்த மதுரை யிலேயே தமிழ் பேசக்கூடியவர்கள், தமிழ் பாடக்கூடிய ஓதுவார்களுக்கெல்லாம் இடமில்லை குடமுழுக்கில் என்று சொல்லுகிறார்கள். இந்த லட்சணத்தில், சமஸ்கி ருதத்தோடு, தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்றெல்லாம் நீதிமன்றங்களிலே சொல்லப்பட்டது, என்னாயிற்று அது? காற்றில் பறந்ததா? என்று தெரிய வில்லை. ஆகவே, அதைக் வன்மையாகக் கண்டிக்கி றோம்.
தந்தை பெரியார் பிறந்த நாள் என்றால், அது வேடிக்கை நாள் அல்ல. தந்தை பெரியார் பிறந்த நாள் என்றால், ஜாதி ஒழிப்புக்குத் தொடர்ந்து போராடுகிற நாள். சமத்துவத்திற்காகப் போராடுகிற நாள்.
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி விலகி, மீண்டும் அவர்களே தேர்தலில் போட்டியிடுவதுபற்றி
நீதிமன்றம் என்ன சொல்லுகிறது?
நீதிமன்றம் என்ன சொல்லுகிறது?
இன்னொரு முக்கியமான தகவல் வந்திருக்கிறது, என்னவென்று சொன்னால், தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. மேற்சொன்ன இரு தொகுதிகளிலும், ஆளுங்கட்சியின் வேட்பாளர்களாக யார் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னால், எதிர்க்கட்சியில் நின்று வெற்றிபெற்ற இரண்டு பேர், அதே வேட்பாளர்கள் தங்களது பதவி யிலிருந்து விலகி, தாங்கள் ஆளுங்கட்சியில் சேர்ந்தால், தங்களுக்குச் சில, பல பதவிகள் கிட்டக்கூடும் என்ற நோக்கில் சேர்ந்தார்கள். அது பிரச்சினையாகி, அதிமுகவிலிருந்து சென்றதால், அவர்களுக்கு ஆட்சேபணை எழுந்தது. இந்த நிலையிலே அதே வேட்பாளர்கள், அதே தொகுதியில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தலாக இருக்கிறதே தவிர, இயல்பாக நடந்த தேர்தலாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. நேற்று (16.9.2026) விசாரித்த உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ‘‘இப்படி காரணமில்லாமல், தேவையில்லாமல் இரண்டு பேர் அதே வேட்பாளர்கள் மீண்டும் நாங்கள் நிற்கிறோம் என்பது சரியா? முதலில், வெற்றி பெற்ற தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் பதவியிலிருந்து விலகுவது; மூன்று மாதத்துக்குள்ளாக, மறுபடியும் நாங்கள் அங்கேயே நிற்கிறோம் என்பது சரியா? என்று சொல்லுவது இருக்கிறதே, அது ஜனநாயகத்தினுடைய சிறப்பான அம்சம் அல்ல. இது தடுத்து நிறுத்தத் தனிச் சட்டமே கொண்டுவர வேண்டும் என்று நீதிபதிகள் தெளிவாகச் சுட்டிக்காட்டி இருப்பது வாக்காளர்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியது.
எங்களைப் போன்ற இயக்கங்கள், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தேர்தலில் நிற்காமல் ஆனால் பொது ஒழுக்கம் காப்பாற்றப்பட வேண்டும். ஜனநாய கத்தினுடைய உண்மைத் தன்மை சிதைக்கப்படக் கூடாது என்ற அக்கறையும், ஆர்வமும் உள்ள எங்களைப் போன்றவர்கள் அதைச் சுட்டிக்காட்ட வேண்டியது கடமையாகும்.
சட்ட ரீதியாக இன்னொரு நிலை என்ன?
அதோடு, சட்டரீதியாகவே இன்னொரு நிலை, நீதிமன்றம் உள்பட இந்த பகுதிக்குச் சென்றார்களா? இது உயர்நீதிமன்றத்தினுடைய கவனத்திற்குச் சென்றதா? என்று வழக்கு போட்டவர்கள் மூலமாகத் தெரியவில்லை. சட்டப்படி ஓர் அம்சத்தைச் சொல்ல வேண்டும், அதிலே கொஞ்சம் சட்டப் பிரச்சினைதான். என்னவென்றால், இந்த பத்தாவது ஷெட்யூல் என்று ஒன்று இருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், பத்தாவது அட்டவணை. கட்சித் தாவலைப்பற்றி ஒரு தனி சட்டங்கள் என்னென்ன வந்ததோ, அந்தச் சட்டங்களை எல்லாம் மய்யமாக வந்திருக்கக்கூடியதுதான் பத்தாவது அட்டவணை.
அந்தப் பத்தாவது அட்டவணையின்படியும், கூறு 164 (1B), அதேபோல கூறு 191(2) ஆகியவற்றிலும்,
Article 164: Other Provisions as to Ministers
1(B) ‘‘A member of the Legislative Assembly of a State or either House of the Legislature of a State having Legislative Council belonging to any political party who is disqualified for being a member of that House under paragraph 2 of the Tenth Schedule shall also be disqualified to be appointed as a Minister under clause (1) for the duration of the period commencing from the date of his disqualification till the date on which the term of his office as such member would expire or where he contests any election to the Legislative Assembly of a State or either House of the Legislature of a State having Legislative Council, as the case may be, before the expiry of such period, till the date on which he is declared elected, whichever is earlier.’’
Article 191: Disqualifications for membership
(2) ‘‘A person shall be disqualified for being a member of the Legislative Assembly or Legislative Council of a State if he is so disqualified under the Tenth Schedule.’’
Tenth Schedule
- Disqualification on ground of defection:
(1) Subject to the provisions of paragraphs 4 and 5, a member of a House belonging to any political party shall be disqualified for being a member of the House.
இந்திய அரசியலமைப்புச் சட்ட
பத்தாவது அட்டவணை என்ன சொல்லுகிறது?
பத்தாவது அட்டவணை என்ன சொல்லுகிறது?
பத்தாவது அட்டவணைப்படி, ஒரு தடவை ராஜி னாமா செய்துவிட்டு, அதே நபர் மறுபடியும் அந்த சட்டமன்றத்திலே உள்ளே போய் அமர உரிமை இல்லை என்று அரசியலமைப்புச் சட்டத்தினுடைய பிரிவுகள், 164(1-B), 191(2) ஆகியவை தெளிவாகச் சொல்லுகின்றன என்று வருகிறபோது, மீண்டும் அவர்களுக்கு அங்கே உட்காரக்கூடிய வாய்ப்பு கிடையாது.
எனவே, சட்டத்தைச் சரியாக ஆராய்ந்தால், இந்த வேட்பு மனுவே செல்லாத ஒன்றாக ஆக்கப்படும். அவர்களுக்கு மீண்டும் போட்டியிடக்கூடிய தகுதி இல்லை என்பது அரசியலமைப்புச் சட்டத்தினுடைய நிலை.
நீதிமன்றம் சொல்லியிருப்பதற்குக் கூடுதலாகத் தகவலை, நீதிமன்றத்திற்கும் சேர்த்து நாங்கள் சொல்லு கிறோம்.
ஆகவேதான், இந்த ஊடக வாயிலாக இந்த நிலையைச் சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் குறிப்பாக நோக்க வேண்டும். ஆளுங்கட்சியாக இருந்தா லும் சரி, நாங்கள் நினைத்ததெல்லாம் செய்வோம் என்று சொல்வதற்கு முடியாது. அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. சட்டமன்றம் ஒன்றும் சாதாரண ‘கிளப்’ கிடையாது, போய் உள்ளே உட்கார்ந்து விடுவதற்கு.
ஆகவே, சட்டமன்றம் விதிகளை வைத்து நடப்பது. அதுவும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வது – அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரால்; அந்த அரசிய லமைப்புச் சட்டத்திலே இருக்கக்கூடிய சட்ட நிலையை உங்கள் மூலமாக இன்றைக்கு விளக்கியிருக்கிறோம்.
ஒருமுறை பதவி விலகிவிட்டு, அதே நபர் மறுபடியும் தேர்தலில் போட்டியிட்டு, அதே பதவியில் அமர முடியாது!
தேர்தலில் போட்டியிடக்கூடிய அரசியல் கட்சிகள் இதனை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். சட்ட ரீதியாக இதற்கு ஒரு தீர்ப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு, தீர்வு கண்டால், அதற்குப் பிறகு இந்தத் தேர்தல் நடந்தால்தான் சரியாகும்.
இப்போது என்ன சிக்கல் வரும் என்றால், இந்தத் தேர்தல் செல்லாது, வெற்றி பெற்றால், யார் வெற்றி யும் செல்லாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு வந்தால், ஏற்கெனவே ஒரு செலவு, அதற்கு மேலே திணிக்கப்பட்ட தேர்தலுக்கு மேலும் ஒரு செலவு! இன்னொரு திணிக்கப்படக்கூடிய தேர்தலுக்குரிய ஒரு அபாயக் காலகட்டம் நெருங்குகிறது.
சட்ட நிபுணர்கள் ஆழ்ந்து சிந்திப்பார்களாக!
ஆகவேதான், பொதுவாக இருக்கிறவர்கள் சார்பாக, பொது ஒழுக்கத்தையும், ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் காப்பாற்றுகின்ற கண்ணோட்டத்தோடு, இதைப் பொதுமக்களுக்கு நாங்கள் விளக்கி இருக்கிறோம். சட்டமன்ற நிபுணர்கள் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தினுடைய கவனம் இதில் பாய வேண்டும் என்று கூறி முடிக்கிறேன்,
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
