பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்- மக்கள் எதிர்ப்பை மதிப்பதுதான் ஜனநாயகம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்து, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்!
விவசாயிகளைக் ‘‘கைது’’ செய்வதை நிறுத்துங்கள்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்து, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்றும், விவசாயிகளைக் கைது செய்வதை நிறுத்துங்கள் என்றும், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மக்கள் எதிர்ப்பை மதிப்பதுதான் ஜனநாயகம் என்றும்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்த வரை விவசாயம் என்பது அதிகம் இடர்ப்பாடு கள் உள்ள தொழில்! காலநிலை மாற்றம், திடீர் மழை, மேகவெடிப்பு, வெள்ளம், புயல், வறட்சி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள், விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து விலை உயர்வுகள், டிராக்டர் வாடகை, பணியாட்களுக்கான செலவுகள் என்று ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே செல்லும் செலவுகள், நல்ல விளைச்சல் கிடைத்தாலும் விலையில் ஏற்படும் வீழ்ச்சி என்று போட்ட முதலீட்டைத் திரும்ப எடுப்பதில் ஏராளமான சிக்கல்கள் நிறைந்தது இந்திய விவசாயம். இத்தனைச் சிக்கல்களுக்கு மத்தியிலும் பல கோடிக்கணக்கான மக்கள் இன்றும் விவசாயத்தைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கருதுகின்றனர்.

தண்ணீர் திறந்தும், விவசாயிகளுக்கு
எந்தப் பயனில்லை!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆற்றுநீர்ப் பாச னத்தில் காவிரியின் பங்கு பெரியது. ஆனால், கருநாடக அரசின் பிடிவாதம் காரணமாகவும், தமிழ்நாடு அரசின் அணுகுமுறைக் குறைபாடுகள் காரணமாகவும், ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட வேண்டிய நீர், செப்டம்பர் ஒன்றாம் தேதி தான் திறக்கப்பட்டது. இதனால், டெல்டா விவசாயி களுக்கு எந்தப் பயனும் இல்லை என்னும் நிலை ஏற்பட்டுள்ளது.

மற்றொரு புறம், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த த.வெ.க.  -ஆட்சியில் வந்து அமர்ந்ததும், 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை பெறப்பட்ட ரூ.75,000 வரையிலான கடன்கள் மட்டுமே ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது.

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி!

இதனால், முழுமையான பலன் கிட்டாது என்பதால், விவசாயிகள் கடந்த மே மாதம் முதலே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (15.9.2026) திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே காத்திருப்புப் போராட்டம் நடத்தப் போவதாக, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்த நிலையில், அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையும் நேற்று தோல்வி அடைந்தது.

போராட்டத்தைத் தொடர அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தனியார் ஒருவரின் நிலத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெய்யில் கொடுமையால் பனை ஓலையைத் தலைக்கு வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி பெரிதும் கவலைக்குரியதாகும். மேலும், பல இடங்களில் போராட்டத்திற்குக் கிளம்பிய விவசாயிகள் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் தெரி விக்கின்றன.  இது நியாயமானது அல்ல!

ஓர் அரசின் கட்டாயக் கடமையாகும்!

விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. ஆட்சிக்கு வரும் முன்னர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறுதானே கோருகின்றனர். அதற்குக் காதுகொடுக்க வேண்டியது அரசின், முதலமைச்சரின் கடமை அல்லவா? இன்னல்களுக்கு மத்தியில் அவர்கள் மேற்கொள்ளும் விவசாயம் இல்லாவிட்டால், நமது நிலைமை என்ன? மேலும், தொடங்கியுள்ள சூப்பர் எல்நினோ எத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தப் போகிறது என்ற அச்சம், அனைத்துத் தரப்பினரிடமும் இருப்பதைப் போல, விவசாயிகளிடையே அதிகம் இருக்கும் சூழலில், அவர்களின் சூழலை, நெருக்கடி யைப் புரிந்துகொள்ள வேண்டியது ஓர் அரசின் கட்டாயக் கடமையாகும்.

கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை விடு விப்பதுடன், அவர்களது போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்து பயிர்க் கடன்களை முழுமையாகத் தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பட்டினப்பாக்கத்தில்
தலைமைச் செயலகம் அவசியமா?

ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் இருப்ப தாகச் சொல்லும் தமிழ்நாடு அரசு, சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட ரூ.1,200 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இது தேவையா, இப்போது?

முதலில், தலைமைச் செயலகம் கட்டத்  தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள இடம், சூழலியல் அடிப்படையில் பொருத்தமில்லாத இடம்.

கடலில் இருந்து 500 மீட்டருக்குள் (CRZ-II) பெரிய அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டுவதற்கு 2011 ஆம் ஆண்டே தடை விதிக்கும் வகையில் கொள்கைகள் எட்டப்பட்டுள்ளன.

ஆலிவ் ரிட்லி (Olive Ridley) ஆமைகள் முட்டை யிட்டு இனப்பெருக்கம் செய்யும் ஒரு மென்மையான சூழலைக் கொண்ட பகுதியாக இந்தக் கடற்கரைப்பகுதி திகழ்கிறது. கட்டுமானப் பணிகளும், பிரகாசமான விளக்குகளும் அவற்றின் இனப்பெருக்கச் சுழற்சியைப் பாதிக்கக்கூடும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடல் மட்டத்தில் ஏற்படும் உயர்வுகள், சென்னை யின் கடலோரப் பகுதிகளைப் பாதிக்கும் ஆபத்து உள்ளதைத் தொடர்ந்து அறிவியலாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அதில், இந்தப் பகுதி கடும் பாதிப்பைச் சந்திக்கும் ஆபத்து அதிகம்.

மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்!

அது மட்டுமல்லாது, அங்கு சுமார் 12 மீனவர் குடியிருப்புகள் உள்ளன. 1500-க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள், அந்தக் கடல்பரப்பை நம்பித் தொழில் செய்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். பாதுகாப்புக் காரணங்கள், போக்குவரத்துக் காரணங்கள் உள்ளிட்டவற்றுக்காக அந்தப் பகுதி மக்கள் அப்புறப்படுத்தப்படும் ஆபத்து உள்ளது. முறையான வசதிகளுடன் கடந்த காலங்க ளில் அவர்களுக்கு அங்கேயே குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு தலைமைச் செயலகமும், சட்டமன்றக் கட்டடமும் அமைக்கப்படுவது அவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும்.

நெருக்கடி மிகுந்த சாந்தோம் சாலையில் பல பள்ளிகள் நெடுங்காலமாக நடத்தப்பட்டு வருகின்றன. தலைமைச் செயலகம், முதலமைச்சர் அலுவலகம், சட்டமன்றம் எல்லாம்  அங்ேக அமைந்தால், அதனால் ஏற்படும் போகுவரத்து, அந்தப் பகுதியை வெகுவாகப் பாதிக்கும். இப்படி பல்வேறு காரணங்களால், ஆளும் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் பல கட்சிகளேகூட இத் திட்டத்தை எதிர்க்கின்றன என்ப தைப் புரிந்துகொள்ளுங்கள்!

அவசியம் என்ன?

இவற்றையெல்லாம் ஓர் அரசு கவனத்தில் கொள்ள வேண்டாமா? தலைமைச் செயலகத்திற்கு இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, இவை குறித்தெல்லாம் யோசிக்காமலா முடிவு செய்வார்கள்? ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் திட்டமிடலாமா? புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என்று அரசு கருதியிருக்குமேயானால், அதற்குள் பல கோடி செலவில் முதலமைச்சர் அலு வலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடிக்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

பொருளாதார நிலையை உயர்த்துவதில் கவனம் செலுத்திய ‘திராவிட மாடல்’ ஆட்சி!

முறையாகத் திட்டமிட்டு, கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு  ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய பசுமை சூழ் தலைமைச் செயலகத்தையும், சட்டமன்றத்தையும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அடுத்து வந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் மருத்துவமனையாக மாற்றினார். பிறகு ‘திராவிட மாடல்’ ஆட்சி, தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்தாலும், நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, புதிய தலைமைச் செயலகம் குறித்து யோசிக்காமல், பொருளாதார நிலையை உயர்த்துவதில் கவனம் செலுத்தியது.

முந்தைய நாடாளுமன்றக் கட்டடத்தை விடுத்து, புதிய கட்டடத்தைக் கட்டி, தன் பெயரைப் பொறிக்க பிரதமர் நரேந்திர மோடி ஆசைப்பட்டது போல, இங்கேயும் தேவையற்ற செலவுகளைச் செய்யக் கூடாது. கல்வெட்டுகளில் பெயரைப் பொறிப்பதை விட, ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத் திட்டங்களின் மூலம் மக்கள் நெஞ்சங்களில் நிலைத்திருப்பதே முக்கியமாகும்.

மறுபரிசீலனை செய்க!

மீண்டும் புதிய தலைமைச் செயலகம் என்ற பேச்சு எழுந்திருப்பதும், குறிப்பாக பட்டினப்பாக்கத்தில் கட்டப்படுவதாகப் போடப்பட்டிருக்கும் திட்டமும் அவசியமற்றது, தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்து அத் திட்டத்தை நிறுத்த வேண்டும்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை        

16.9.2026       

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *