பேரறிஞர் அண்ணா
திராவிடர் கழகத்தாராகிய நாம் பார்ப்பனர்களுக்கு எதிராக வேலை செய்கிறோமென்றும், தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பனர்கள், திராவிடர் கழகத்தாருக்குப் பயந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதென்றும், திராவிடர் கழகத்தாரால் செய்யப்பட்டு வரும் ‘ஆபத்துகளை’ ஒழித்துப் பார்ப்பனர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும் 1-3-1949இல் நடைபெற்ற பட்ஜெட் விவாதக் கூட்டத்தின் போது தோழர் காளேஸ்வரராவ் அவர்கள் சட்டசபையில் பேசியிருக்கிறார்.
பட்ஜெட் கூட்டத்தின் போது தோழர் காளேஸ்வர ராவ் இந்த விஷயத்தை ஏன் பேசினார் என்பது தெரியவில்லை. ஒருவேளை, திராவிடக் கழகத்தாரை ஒழித்துக் கட்டுவதற்கும் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கி, அதற்காக ஒரு நிதி தனியாக ஏற்படுத்த வேண்டுமென்று கருதி இங்ஙனம் பேசினாரோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இல்லையேல், பட்ஜெட் விவாதத்தின்போது ‘கருஞ்சட்டை’ ஒழிப்பு மசோதா ஏன் வரவேண்டும்? பட்ஜெட்டுக்கும் கருஞ்சட்டைக்கும் என்ன சம்பந்தம்? என்பதுதான் நமக்குப் புரியவில்லை.
திராவிடர் கழகத்தார் பேசுவதும், எழுதுவதும் சட்டவரம்புக்கு உட்பட்டே உள்ளன என்று சட்டசபையிலே சட்டமந்திரி தோழர் கோபால் ரெட்டி அவர்கள் வெட்ட வெளிச்சமாகக் கூறிய பின்னரும், திராவிடர் கழகத்தாரை ‘ஆபத்தை விளைவிப்பவர்கள்’ என்ற பட்டியலில் சேர்த்து, அவர்களை ஒழித்துக்கட்டிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கவேண்டுமென்று கூறுவதும், கொக்கரிப்பதும், மதி சிறிதளவாவது கொண்டவர்களின் பேச்சென்று கொள்ள முடியுமா என்று கேட்கிறோம்….
நாம் பலகாலமாகவே பேசியும், எழுதியும் வருகிறோம், நமக்குப் பார்ப்பனர்களிடத்தில் எந்த விதமான பகைமையோ, பொறாமையோ கிடையாது என்று. நம்முடைய குற்றச்சாட்டுகள் எல்லாம் பார்ப் பனியத்தின் மீதேயன்றிப் பார்ப்பனர்மீது அல்ல என்பதைத் தெளிவாகவே விளக்கியிருக்கிறோம். பார்ப்பனியம் என்றால் என்ன என்பதையும் பல முறை புரிய வைத்திருக்கிறோம்.
தீண்டாமையைப் பார்ப்பனியம் என்று கூறுகிறோம்.
புரோகிதத்தைப் பார்ப்பனியம் என்று கூறுகிறோம்.
கோயில்களில் உள்ள ஏற்பாடுகளையும், அங்கு நடக்கும் அட்டூழியங்களையும் பார்ப்பனியம் என்று கூறுகின்றோம்.
ஜாதியில் உயர்வு தாழ்வு கற்பிப்பதைப் பார்ப்பனியம் என்று கூறுகின்றோம்.
நாம் எதைப் பார்ப்பனியம் என்றும், அவை ஒழிக்கப் பட்டாலன்றி நாட்டில் நல்லறிவு ஏற்படாதென்றும் கூறி வந்தோமோ, அவற்றில் சில, இன்று சர்க்காராலேயே ஒப்புக் கொள்ளப்பட்டுச் சட்டமாகவும் ஆக்கப்பட்டு விட்டன – இன்னும் சில, சட்டமாக்கப்படும் எல்லையை எட்டிப்பார்த்த வண்ணம் உள்ளன.
உடன்கட்டை ஏறும் வழக்கத்தைப் பார்ப்பனியம் என்றும், அது ஒழிக்கப்படவேண்டும் என்றும் கூறி வந்தோம். அது சட்ட பூர்வமாக ஒழிக்கப்பட்டது.
குழந்தைப் பருவத்தில் இருக்கும் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் பார்ப்பனியத்தின் விளைவு என்று கூறினோம்; அதைத்தடை செய்து சர்க்கார் சாரதாச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறை வேற்றியது.
தீண்டாமை பார்ப்பனியத்தால் ஏற்பட்ட பாதகம் என்று கூறினோம்; இது நடைமுறையில் இன்னும் சரிவரக் கையாளப்படவில்லையென்ற போதிலும், தீண்டாமையை எந்த வடிவத்திலும் இனி நடமாட விடக்கூடாதென்று, சட்டம் இயற்றப்பட்டுவிட்டது.
இவையெல்லாம் திராவிடர் கழகத்தாரால் இடை விடாது செய்யப்பட்ட பிரச்சாரத்தின் பயனாக ஏற்பட் டவை என்பதை எவராவது மறுத்துக்கூற முடியுமா?
சர்க்கார் உத்தியோகங்களுக்குப் பார்ப்பனரையே தேடித் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து சேர்ப்பதை நாம் கண்டிக்கிறோம். இதைச் சாக்காக வைத்துக்கொண்டு, சிலர், நாம் பார்ப்பனரைக் கண்டிக்கிறோம் என்று தவறாகக் கருதிக் கொண்டு நம்மீது பழி சுமத்தி விடுகிறார்கள். சர்க்கார் உத்தியோகங்களுக்குப் பார்ப்பனரைப் பார்க்கிலும் திறமையும், தகுதியும் வாய்ந்த பல பார்ப்பனரல்லாதார் இருக்கும்போது, அவர்களுக்கு அந்தப் பதவிகளைக்கொடுக்காமல், பார்ப்பனர்கள் எண்ணிக்கையின் அளவுக்கு அதிகமாக அவர்களுக்கு உயர்ந்த உத்தியோகங்களை வழங்கிச் சலுகைகாட்டுவது நீதியா? நேர்மையா? முறையா? என்று கேட்பதை, எந்தச் சொந்த அறிவுடையவனாவது பார்ப்பன விரோதத்தால் செய்யப்படும் துவேஷம், என்று இதனைக் கூறமுடியுமா என்று கேட்கிறோம்….
நாம் எந்தக் காட்சிக்கும் விரோதிகளல்ல, எந்த இனத்துக்கும் விரோதிகளல்ல என்பதை இன்னும் வலியுறுத்திக் கூறுகிறோம். எந்தக்கட்சி அதிகாரத்துக்கு வந்தாலும், அந்தக் கட்சி செய்யும் காரியங்கள் நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடியனவாக இருக்கும்பட்சத்தில் அவைகளை நாம் எப்போதுமே வரவேற்றிருக்கிறோம்; வரவேற்போம். ஆனால், அதே கட்சி நாட்டுக்குத் தீங்குபயக்கும் காரியங்களைச் செய்ய முயலுமானால், அவற்றை நாம்கட்டாயம் எதிர்த்தே தீருவோம். இதனால் நம்மை ஒரு குறிப்பிட்ட கட்சியின் விரோதிகள் என்று கூறிவிட முடியுமா? நல்லது செய்வதை வரவேற்பதும், தீயது செய்வதை எதிர்ப்பதும் ஒரு கட்சியின் மீதுகொண்டுள்ள நட்பாலும் பகைமையாலும் ஏற்படுவதல்ல. நடுவு நிலைமை தாங்கிச்செய்யப்படும் செயல் என்றே இதனை விவேகிகள் கூறுவர்….
தோட்டி வேலை செய்யும் ஒரு தொழிலாளி தெருவில் போகிறான். அதே சமயத்தில் ஒரு பார்ப்பன ஆளோ, ஒரு பார்ப்பன மாதோ எதிரில் வருகிறார்கள்; தோட்டியைக் கண்டதும் அவர்கள் தவளைபோல் குதித்துத் தொலைவில் ஓடி ஒதுங்குவதையும் பார்க்கிறோம் – பரிதவிக்கிறோம் – தீண்டாமை ஒழிப்புச் சட்டம் என்னத்தைச் சாதித்துவிட்டதென்று சஞ்சலப்படுகிறோம். முதலியார் அய்யரைப் பார்த்தவுடன், “அடியேன் சாமி தண்டம்” என்கிறார்; அய்யர் முதலியாரைப் பார்த்தவுடன், “ஏண்டா ஏகாம்பரம் சவுக்கியமா இருக்கிறாயா” என்று கேட்கிறார்; திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவன் இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் காண்கிறான் – கலங்குகிறான். இந்தப் பேதம் எப்போது ஒழியும் என்று ஏங்குகிறான் – பிரச்சாரத்தில் ஈடுபடுகிறான். ஆனால், இது பிராமணத்துவேஷம் என்று தூற்றப்படுகிறது….
“நூற்றுக்கு மூன்றுபேர்கூட இல்லாத பிராமணர் களைக் கண்டு நாம் பயப்பட வேண்டிய தில்லை”என்று 1-3-1949-இல் தாம்பரத்தில் தோழர் காமராசர் அவர்கள் பேசியிருக்கிறார். செங்கற்பட்டு மாவட்டக் கிராமங்களில் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போதுதான் இவ்விதம் பேசினார், செங்கற்பட்டுத் தொகுதிக்கு மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தோழர் முத்துரங்கம் அவர்கள் காலமானதால், அவருடைய இடத்துக்கு டாக்டர் சீனிவாச அய்யரைத் தேர்தலுக்கு நிற்கும்படி நியமித்து விட்டுத்தான்!
“நூற்றுக்கு மூன்று பேர் கூட இல்லாத பிராமணர் களைக் கண்டு நாம் பயப்படவேண்டிய தில்லை” என்று மார்தட்டிப் பேசுகிறார்….
இந்த இலட்சணத்தில் ‘கன்னடிய இராமசாமிக்குத் தமிழ் நாட்டில் என்ன வேலை’ என்று விருதுநகரார் வீராப்புடன் கேட்கிறார், நந்தி கிராமத்துக்குக் காளேஸ்வரராவ்கள் தமக்குத் துணையாக நிற்கிறார்கள் என்ற தைரியத்துடன்! “கன்னடிய நாய்க்கருக்குத் தமிழ் நாட்டில் என்ன வேலை?” என்று கேட்கும் காமராஜரை, “காஷ்மீர் நாட்டு நேருவுக்கும், பாம்பே – பட்டேலுக்கும் தமிழ் நாட்டில் என்ன வேலை?” என்று நாம் கேட்டுவிட்டாலோ கோபம் கொதித்துக்கொண்டு கிளம்புகிறது காமராசர்களுக்கு! …
தோழர் காமராசர் அவர்கள், ஒரு வகையில் பார்த்தால், அவர் உண்மையாகவே பிராமணர்களுக்குப் பயப்படத் தேவையில்லைதான். எப்படியென்றால், உண்மையாகவே பார்ப்பனரல்லாதார் வகிக்கவேண்டிய பதவியை அவர்களுக்கு வழங்காமல், பார்ப்பனர் களுக்கே கொடுக்கும்போது, அவர் ஏன் பார்ப்பனர் களுக்குப் பயப்படவேண்டும்? மாறாக அவர்களுடைய ஆசியும் அருளுமன்றோ அவருக்குக் கிடைக்கும்! ஆனால், பெரியார் இராமசாமியின் நிலை அப்படி யல்லவே! அவர், பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பதவிகள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனருக்கே, முறையும் நேர்மையும் தவறிக் கொடுக்கப்படுகிறதென்று கூறி அதற்காகப் பாடுபடுபவராயிற்றே! அவர் பார்ப்பனர்களுக்குப் பயப்படாவிட்டாலும், பார்ப்பனரின் பாதம் தாங்கி களுக்குப் பயப்பட்டுத்தான் பார்ப்பனியத்தை ஒழிக்கும் பணியைச் செய்யவேண்டியிருக்கிறது. ஏனென்றால், பார்ப்பனிய ஒழிப்பு வேலை, இன்றைய பார்ப்பனப் பாதம் தாங்கிகளான பார்ப்பனரல்லாதாருக்கும் சேர்த்தே செய்யப்படுகிறது என்ற காரணத்தால்.
எனவே, நாம் பார்ப்பனருக்கு எதிரிகளல்ல, பார்ப்பனியத்துக்கே எதிரிகள் என்பதை இனிமேலாவது நம்மை நிந்திக்கும் அன்பர்கள் உணர வேண்டுகிறோம்.
இன்றில்லா விட்டாலும் இன்னும் சில காலத்திலாவது, நாம் பார்ப்பன ஒழிப்பு வேலையில் ஈடுபட்டிருந்தோமா அல்லது பார்ப்பனிய ஒழிப்பு வேலையில் தான் ஈடுபட்டிருந்தோமா என்ற உண்மையை இப்போது நம்மைக் கடிந்துரைக்கும் அன்பர்கள் கட்டாயம் உணர்வார்கள் என்ற நம்பிக்கை மட்டும் நமக்கிருக்கிறது. நம்மால் செய்யப்பட்டுவரும் பார்ப்பனிய ஒழிப்பு வேலைகளில் சில, இப்போது நம்மைப் பார்ப்பன விரோதிகள் என்று கூறுபவர்களாலேயே, அவர்களை அறியாமலேயே செய்யப்படும் நிலைமையை நம்முடைய பிரச்சாரம் உண்டாக்கிவிட்டிருப்பது மகிழ்ச்சிக்கும் பாராட்டுதலுக்கும் உரியதாகும்.
– ‘திராவிட நாடு’ 6.3.1949
நன்றி: ‘பாசறை முரசு’ (செப்–அக். 2026)
