ஜனநாயகன்

இணையவழி கையெழுத்து இயக்கம்

‘பன்னாட்டு ஜனநாயக நாள்’ ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 15 அன்று உலகம் முழுவதும் 2008-ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. மக்களாட்சியின் கொள்கைகளை உலகளவில் ஊக்குவிக்கவும், நிலை நிறுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுவதாக அய்.நா. மன்றம் அறிவிக்கிறது. 1997-இல்   பொது வாழ்வில் பங்கேற்கும் உரிமை, கருத்து சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற ஜனநாயகக் கோட்பாடுகளை வரையறுத்த ‘ஜனநாயகம் குறித்த உலகளாவிய பிரகடனத்’தை நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தால் (IPU) ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளைக் குறிக்கும் வகையில் இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த நாளை “ஜனநாயக நாளாகக்’’ கொண்டாட இன்னொரு மிக முக்கியமான பொருத்தம் உண்டு. ஏனெனில், இன்று அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். நீதிக்கட்சியால் ஈர்க்கப்பட்டு, பொதுவாழ்க்கைக்கு வந்து, தந்தை பெரியாரின் மாணாக்கராக அவரது ஈரோட்டுக் குருகுலத்தில் இணைந்து, தந்தை பெரியாரின் தளபதியாக உயர்ந்தவர் அறிஞர் அண்ணா.

அதுவரை இருந்து வந்த மன்னராட்சி, பிரபுக்களின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளில் நெடுங்காலமாகப் பேசப்பட்டு வந்தாலும், கடந்த இரு நூற்றாண்டுகளில் மெல்ல மெல்ல உலக நாடுகள் அனைத்திலும் நடைமுறைக்கு வரத் தொடங்கிய, மக்களாட்சி என்னும் ஜனநாயக முறையைப் புரிந்துகொண்டு, அந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்று அடியெடுத்து வைத்தவர். குறிப்பாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின் மாறி வந்த உலக ஒழுங்கைப் புரிந்து, மக்களின் கருத்துக்கு ஓரளவேனும் மதிப்புத் தரக் கூடிய முறையாக ‘ஜனநாயகமே’ இருக்கக் கூடும் என்ற அடிப்படையிலேயே அதனைக் கையில் எடுத்துக் கொண்டார்.

தந்தை பெரியார் சுயமரியாதைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றால், அதற்கொரு அரசாட்சி அவசியம் என்பதைப் புரிந்து கொண்ட காரணத்தால்தான், அதில் படிப்படியாகக் காலூன்றி, வெற்றிக் கோட்டையைத் தொட்டார். இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் மாநிலம் என்னும் பெருமையைத் தமிழ்நாடு பெற்றிருப்பதற்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு, ‘மாநில சுயாட்சி’  என்னும் கொள்கையை முன்னிறுத்தி, அதற்கான நியாயத்தைப் புரியவைத்து, அதை முழக்கமாக மட்டுமல்ல, அரசுத் தத்துவமாகவே மாற்றிக் காட்டியவர் அறிஞர் அண்ணா.

‘மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களிடமிருந்து கற்றுக் கொள்’ என்ற அவரது பார்வையை ஆணையாகவே ஏற்ற காரணத்தால்தான், அவர் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் இயக்கமாகவே இயங்கிவருகிறது.

ஜனநாயகம் என்பது ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கான வழிமுறை அல்ல; மக்கள் அனைவரும் தங்கள் கருத்துகளைச் சொல்லுவதற்கான ஆயுதம். தங்கள் மாற்றுக் கருத்துகளை, எதிர்ப்புகளைத் தெரிவிப்பதற்கான உரிமையை வழங்கும் சாசனம். எவர் ஒருவருக்கும், எதையும் ஏற்றுக் கொள்ளவும், ஏற்க மறுக்கவுமான உரிமையைத் தரும் பெரு வாய்ப்பு! இந்த ஜனநாயகம் குடும்பத்திலும், மதத்திலும், பாலினத்திலும், சமூகத்திலும், அரசியலிலும், வாழ்விலும் இருக்க வேண்டும் என்பதே இக் காலத்தின் பெரிய இலக்காக இருக்க முடியும்.

உலகமே ஒரு சுருங்கிய வலைப் பின்னலாக மாறியிருக்கும் இன்றைய அறிவியல் உலகில், அதற்கு முற்றிலும் முரணாக அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக மலர்வதற்கான சவால்களும் ஏராளமாக இருக்கின்றன. நாடுகள், அரசியல், மதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்களை அடக்கியாளவும், மாற்றுக் கருத்துகளைக் கொண்டோரை அடிமைப்படுத்தவுமான முயற்சிகள் திசைதோறும் நடக்கின்றன. உலகெங்கும் வலதுசாரிகளின் ஆதிக்கம் ஆட்சியதிகாரங்கள் வழியாக ஓங்கி வளர்ந்திருக்கிறது. முதலாளித்துவமும், ஜனநாயகத்தின் வழி ஆட்சியைப் பிடித்துவிட்ட பாசிசமும் உலகின் பல நாடுகளில் நிலைப் பெற்றிருக்கின்றன.

இந்தச் சூழலில் தான், நம்பிக்கையை வளர்க்கவும், அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மீள்திறன் கொண்ட சமூகங்களை உருவாக்கவும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும் இந்த ஆண்டின் நோக்கம் என்று அய்.நா. மன்றம் கூறுகிறது.

‘‘ஒவ்வொரு குரலும் முக்கியத்துவம் பெறும்போதே, ஜனநாயகம் சிறப்பாகச் செயல்படுகிறது” என்ற அதன் முழக்கத்தை, ஜனநாயகம் பற்றிப் பேசும் எல்லோரும் புரிந்துகொள்வதும், அங்கீகரிப்பதும், அதற்கான உரிமையை வழங்குவதும் அரசாளுவோர் கடமை. குரல்களை நசுக்குவதையே தங்களின் ஆளுமையின் அடையாளமாகக் கருதுவோரால் ஜனநாயகத்தை முழுமையாகத் தர முடியாது.

மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, அவர்களின் கருத்துகளை மதித்து, ஜனநாயக வழியில் ஆட்சியை நடத்தமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்து, அதன்வழி நாட்டை வழிநடத்திய, மாபெரும் மக்கள் தலைவராகத் திகழ்ந்த ‘ஜனநாயகன்’ அண்ணாவின் பிறந்தநாளில், இதனை முன்னிறுத்துவது முக்கியம்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *