தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் ஆண்டு தவறாமல் பேரணியை நடத்துவதுபோல், இவ்வாண்டும் சிறப்பாகவே நடக்கும்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

முதலில் மறுப்பது – எதிர்ப்பு வந்தால் பின்னால் ஆதரிப்பது – ஏனிந்த குழப்பம்?
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்!

சென்னை, செப்.15   முதலில் மறுப்பது – எதிர்ப்பு வந்தால் பின்னால் ஆதரிப்பது – ஏனிந்த குழப்பம்? தந்தை பெரியார்  பிறந்த ஈரோட்டில் ஆண்டு தவறாமல் பேரணியை  நடத்துவதுபோல், இவ்வாண்டும் சிறப்பாகவே நடக்கும்! என்றார் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்.

நேற்று (14.9.2026) மாலை 6.30 மணிக்கு சென்னை தேவநேய பாவாணர் நூலகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்குப் பிறகு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

செய்தியாளர்: பெரியாரை, கொள்கைத் தலைவர் என்று த.வெ.க. சொல்லுகிறது. ஆனால், ஈரோட்டில், பெரியார் பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி இல்லை என்று சொல்லி, மீண்டும் அனுமதி கொடுத்திருக்கிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: பொதுவாக, திரைப்படங்களில்தான் இரட்டை வேடங்கள் என்பது இருக்கும். ஆனால், இப்போது அரசியலிலும் இரட்டை வேடங்கள் மட்டுமல்ல, பல நிலைகள் ஏற்படுகின்றன என்பது மிகத் தெளிவாக இதன்மூலம் தெரிகிறது.

பேரணிக்கு எப்படித் தடை விதிக்கலாம்?

காலையில், கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மூலமாக எங்களுக்கு வந்த செய்தி, ‘‘அன்றைக்கு பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரில் ஹிந்து முன்னணி ஊர்வலம் இருக்கிறது; ஆகவே, உங்களுடைய பேரணிக்கு அனுமதி கிடையாது  வேறு நாளில்  பேரணியை நடத்திக் கொள்ளுங்கள்’’ என்று காவல்துறையினர் சொல்லியிருக்கிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.

‘‘பெரியார் அவர்கள் பிறந்த ஊர், ஈரோடு. அந்த ஊரில், ஆண்டு தவறாமல் நாங்கள் பேரணியை நடத்திக் கொண்டிருக்கின்றோம். இது தொடர்ந்து நடத்தப்படக்கூடிய ஊர்வலம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்தப் பேரணிக்கு எப்படித் தடை விதிக்கலாம்?

ஹிந்து முன்னணி ஊர்வலம் நடத்துவதைப்பற்றி எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் மாலையில் ஊர்வலம் நடத்துகிறார்கள். ஆனால், நாங்கள் காலையில்தான் பேரணியை நடத்துகின்றோம்.

அப்படியிருந்தும், எங்களுடைய பேரணிக்குக் காவல்துறை அனுமதி மறுத்திருப்பது என்ன நியாயம்?’’ என்று எங்கள் தோழர் மூலமாக நாங்கள் கேட்டோம். உறுதியாகப் பேரணியை   நடத்துவதற்காக நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கும் ஆயத்தமானோம்.

அதுபோல எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், இதுகுறித்துக் கருத்துகளைச் சொன்னார்கள். அந்தக் கருத்தும் வேகமாகப் பரவ ஆரம்பித்தது.

முதலமைச்சருக்குத் தெரியுமா? தெரியாதா?

இறுதியில் ஈரோடு காவல்துறையினர், வருகின்ற 17 ஆம் தேதி காலையில் அங்கே நடைபெறக்கூடிய பேரணிக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

இதிலிருந்து  அரசு எப்படி நடந்துகொண்டிருக்கிறது? என்பது தெரிகிறது. ஒரு பக்கம், கொள்கைத் தலைவர் பெரியார் என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் பெரியார் திடலில் காவல்துறையினரைக் குவிக்கிறார்கள்; பேரணிக்கு அனுமதி மறுக்கிறார்கள்.

இது, முதலமைச்சருக்குத் தெரியுமா, தெரியாதா? அல்லது அதிகாரிகளுடைய அரசாங்கம் நடக்கிறதா? என்பது கேள்விகுறிதான்.

பல செய்திகள் இப்படித்தான் தொடர்ந்து கொண்டி ருக்கின்றன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும். ஏனென்றால், எந்தக் கேள்விக்கும், முதலமைச்சர் அவர்கள், சட்டமன்றத்தில் நேரிடையாக, உடனடியாக பதில் சொல்வதில்லை என்பது ஒரு பக்கத்தில் இருந்தாலும், இதுபோல முதலில் ஒரு முடிவை அறிவிப்பது – பிறகு, நீதிமன்றங்களுக்குச் சென்றாலும், அல்லது செல்லப் போகிறோம் என்று சொன்னாலும், உடனே அனுமதி தருகிறார்கள் என்றால், இது மக்களாட்சியில்  மாட்சிக்குரிய, மாண்புக்குரிய ஒன்றல்ல.

எனவேதான், ஆட்சி ஆட்சியாக நடக்கவேண்டும்; காட்சியாக நடக்கக் கூடாது.

செய்தியாளர்: புதிய சட்டமன்றம் பட்டினப்பாக்கத்தில் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு மக்களின் ஆலோசனையைக் கேட்காமல் முடிவெடுத்திருக்கிறதே?

தமிழர் தலைவர்: ஒரு பக்கத்தில் வெள்ளை அறிக்கை. ஏராளமாக கடன் இருக்கிறது, ரூ.10 இலட்சம் கோடிக்கு மேலே இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் ஒரு புதிய சட்டமன்றத்தை உருவாக்குகிறோம் என்று சொல்வது – அதற்கு என்ன அவசியம்?

சாதாரணமாக, கிராமங்களில் ஒன்றைச் சொல்வார்கள், ‘‘குடிப்பதோ கூழ் கொப்பளிப்பதோ பன்னீரா?’’ என்று சொல்வார்கள்.

தலைமைச் செயலகம் அங்கே கட்டுவதற்குக் காரணம், ஜோதிடர் சொன்னார் என்று செய்திகள் வருகின்றன. அது எவ்வளவு தூரம் உண்மை என்பது ஒரு பக்கத்தில் இருந்தாலும்,  கடற்கரை ஓரத்தில், மீனவர்கள் பாரம்பரியமாக இருந்த இடத்தையெல்லாம் மாற்றுவது சரியல்ல; அவர்களுடைய உணர்வுகளை மதிக்கவேண்டும்.

பரந்தூர் விமான நிலையம் அமையவிருந்த நிலையில், எந்தக் காரணத்திற்காக அந்தத் திட்டத்தை நாங்கள் நிறுத்துகிறோம் என்று சொன்னீர்களோ, அதே காரணம், இதற்கும் பொருந்தாதா?

பேரிடர்களிலிருந்து தப்ப முடியுமா?

அதைவிட கூடுதலாக இன்னொரு செய்தி இருக்கிறது.

கடற்கரையோரம், தலைமைச் செயலகம் அமைத்தால் என்னாகும்?   உரிய பாதுகாப்பு உண்டா? ஏற்கெனவே சுனாமி வந்தபோது, அந்தப் பகுதி எப்படி பாதிக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.

இப்பொழுது எல்–நினோ, சூப்பர் எல்–நினோக்கார் வரவருக்கின்றன என்ற செய்திகள் வருகின்றன. அந்தப் பேரிடர்களிலிருந்து எப்படி தப்ப முடியும்? என்ற தொலைநோக்கு இருக்கவேண்டும்.

தொலைநோக்கெல்லாம் இல்லை என்று சொன்னாலும், பொது நோக்காவது இருக்கவேண்டும். நிதிநிலை நிலவரத்தையாவது பார்க்கவேண்டும்.

ஆகவேதான், இப்போது புதிய தலைமைச் செயலகத்திற்கு என்ன அவசியம்? என்று எல்லோரும் கேட்கிறார்கள்; அந்தப் பகுதி மக்களும் கேட்கிறார்கள்.

ஆகவே, தமிழ்நாடு அரசின் முடிவு எந்தக் காரணத்திற்காகவும் ஏற்கக் கூடியதாக இல்லை.

நிதி நிலை சரியாக இருந்து உண்மையான தேவையும்  இருந்து  மக்களுடைய கருத்துகளை அறிந்து அதைச் செய்யட்டும். அதுதான் ஜனநாயகம். அப்படி இல்லாமல், நான் நினைத்ததை முடிப்பேன் என்று சொன்னால், அது ஜனநாயகம் அல்ல.

செய்தியாளர்: இப்போது இருக்கின்ற தலைமைச் செயலகத்தில் உள்ள அறை 6 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படுகிறதே?

தமிழர் தலைவர்: அதுவும் அதே வழியைச் சார்ந்ததுதான். சிக்கன நடவடிக்கைகளில் சிறப்பான நடவடிக்கையா? நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பது ஓர் நல்ல எடுத்துக்காட்டு.

முதலமைச்சர் கூட்டத்திற்கு செய்தியாளர் அனுமதி உண்டா?

செய்தியாளர்: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் லண்டன் பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: என்ன முதலீடு வந்தது என்று கணக்குப் பார்க்கவேண்டும். முதலீடுக்கு என்ன ஆதாரம் என்று பார்க்கவேண்டும். உங்களைப் போன்ற செய்தியாளர்கள், எங்களிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்கிறீர்கள். ஆனால், முதலமைச்சருடைய கூட்டத்திற்கு, செய்தியாளர்களுக்கே அனுமதியில்லையே!

எங்களிடம் எப்போது வேண்டுமானாலும் கேள்வி கேட்கிறீர்கள். இதே மாதிரி கேட்கக்கூடிய சூழல் உங்களுக்கு எப்போது முதலமைச்சரிடம் உருவாகிறதோ, அப்போது இதற்குப் பதில் சொல்கிறோம்.

செய்தியாளர்: தமிழ்நாட்டில், அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: மின்சாரத் துறைக்கென ஓர் அமைச்சர் இருக்கிறார். மின்வெட்டு என்பது இப்போது தமிழ்நாட்டில் சர்வசாதாரணமாக இருக்கிறது.

ஆனால், இப்போது மின்வெட்டு இல்லை என்று அந்த அமைச்சர் சொல்லிக் கொண்டிருக்கிறார். மின்சாரத் துறையைத் தவிர, மீதி எல்லா வேலைகளையும் அவர் செய்து கொண்டிருக்கிறார்.

ஆகவே, உண்மைக்கு மாறான பல செய்திகளையெல்லாம் அவர் சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர, அவருடைய துறையை அவர் சரியாகப் பார்த்ததாகத் தெரியவில்லை.

மின்சாரம் 2000 யூனிட் வந்துவிட்டது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு பெரிய சாதனை என்னவென்றால், முன்பெல்லாம் மின்வெட்டுகள் குறைந்த நேரத்தில் இருக்கும். இப்போது தொடர் மின்வெட்டு என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது.

இதுதான், நான்கு மாதங்களுக்குமேல் நடைபெறக்கூடிய ஆட்சியின் சாதனை!

இப்படிப் பல பிரச்சினைகள் இருக்கையில் தேவையில்லாமல் பல கற்பனைகள்; நடந்ததை இல்லை என்பது. மிசா காலத்தில், மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்று சொல்வது போன்ற வீண் வேலைகளில் ஈடுபடாமல், முதலில், மின்சாரம் சீராகக் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

மின்சாரத் துறை ப்யூஸ் போன பல்பு போல இருக்கக்கூடாது.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே நேற்று கூறினார்.

 

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *