குடியேற்றம், செப்.15- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், செப்டம்பர் 17 தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப்போட்டி, பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா 12.09.2026 சனிக்கிழமை மாலை 03.00 மணி அளவில் குடியேற்றம், போடிப்பேட்டை சாலை, பெரியார் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு தலைமை தாங்கி, மாவட்டக் கழகம் ஆற்றிவரும் பகுத்தறிவுப் பணிகள் குறித்து பேசி நிகழ்வை தொடங்கி வைத்தார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பி.தனபால் அனைவரையும் பெருமிதத்துடன் வரவேற்றார். நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ப.ஜீவானந்தம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இவ்விழாவில் பொதுக்குழு உறுப்பினர் சி.லதா, குடியேற்றம் நகர ப.க. செயலாளர் மு.பிரகாசம், வேலூர் மாவட்ட கழகச் செயலாளர் இ.தமிழ்தரணி, குடியேற்றம் நகர கழகத் தலைவர் சி.சாந்தகுமார், வேலூர் மாநகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கே.எஸ்.அஸ்ரப் நகர திமுக துனைச் செயலாளர் ந.ஜம்புலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் தொடக்க உரையாற்றிய வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி பேச்சுப்போட்டி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய கழகத் தோழர்களை பாராட்டிப் பேசினார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் நோக்க உரையாற்றுகையில், “பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இவ்வளவு எழுச்சியோடு இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தமைக்கு எனது பாராட்டுகள். பகுத்தறிவாளர் கழகம் போதையில்லா சமுதாயத்தை உருவாக்க பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நம் சமுதாயத்தை சீரழிக்கும் கடவுள் நம்பிக்கை, மதம், ஜாதி தீண்டாமை, பெண் அடிமை போன்ற போதைகளையும் இந்த சமுதாயத்திலிருந்து அகற்ற மாணவர்களும் தந்தை பெரியார் அவர்களின் பாதையில் பயணிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
வேலூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சார்பில் 175 மாணவ, மாணவிகள் இந்தப் பேச்சுப் போட்டியில் பங்கேற்று தந்தை பெரியார் பிறந்தநாள் முன்னிட்டு வழங்கப்பட்டிருந்த தலைப்புகளில் உரைவீச்சை வழங்கினர். முன்னதாக பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி மிகச் சிறப்பாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்ட கழகத் தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட காப்பாளர் வி.சடகோபன் ஆகியோர் இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற குடியேற்றம் நகர மன்றத் தலைவர் எஸ்.சவுந்தர்ராசன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட 200 பேருக்கு உணவு வழங்கி போட்டியில் பங்கேற்ற மாணவர் செல்வங்களை நேரடியாகச் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
போட்டி நடுவர்களாக முனைவர் அ.சிவகுமார், முனைவர் மு.முரளி, கவிஞர் ஜி.என்.பாபு மற்றும் சிவகுமார் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டனர்.
பள்ளி அளவில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நடைபெற்ற போட்டியில் கொல்லமங்கலம் அரசு பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி வி.சிறீ பிரியா முதல் பரிசையும், வெ.நளினி மெட்ரிக் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி எஸ்.கே.ராகவி இரண்டாம் பரிசையும், வள்ளலார் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி அய்.ரீனா மூன்றாம் பரிசும் பெற்றார். பிரிவு இரண்டில் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெ.நளினி மெட்ரிக் பள்ளி பதினோராம் வகுப்பு மாணவர் எஸ்.வேணுமாதவ் முதல் பரிசையும், லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி மாணவி ம.பிரகல்யா இரண்டாம் பரிசையும், நேசனல் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி எஸ்.தருணிகா மூன்றாம் பரிசையும் பெற்றனர். பிரிவு மூன்றில் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக முதுகலை தமிழ் முதலாமாண்டு மாணவி செ.காயத்ரி முதல் பரிசும்,அரசு திருமகள் ஆலைக் கல்லூரி மூன்றாம் ஆண்டு வணிகவியல் மாணவி பா.ரிஹானா இரண்டாம் பரிசும், அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் ஏ.மேஷாக் மூன்றாம் பரிசும் பெற்றார்.
மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இந்த பேச்சு போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், கழகத் தோழர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். விழா முடிவில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் க.பரமசிவம் நன்றியுரை ஆற்றினார்.
