பெங்களூரு, செப்.14- உப்பள்ளியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் 30 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது. இதையடுத்து காவல் துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சிலை ஊர்வலம் கருநாடக மாநிலத்தில் இன்று (14.9.2026) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதைையொட்டி மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகிறார்கள். ஊர்வலமும் நடத்தி வருகிறார்கள். அதுபோல் நேற்று முன்தினம் (12.9.2026) தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் பல்வேறு இந்து அமைப்பினர் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினர்.
அதில் மராட்டிய மக்கள் அதிகம் வாழும் மராட்டா பகுதியில் இருந்து ஒரு விநாயகர் சிலையும், மேதார் ஒணி மற்றும் கலால் ஒணி பகுதிகளில் இருந்தும் 2 விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
3 விநாயகர் சிலை ஊர்வலமும் ஒரே நேரத்தில் அதாவது இரவு 9.30 மணியளவில் சி.பி.டி. சாலையை வந்தடைந்தன. இதனால் அந்த சாலையில் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கானோர் அந்த சாலையில் திரண்டிருந்தனர். 3 ஊர்வலத்தினரும் டி.ஜே. இசையை ஒலிக்கச் செய்து ஆட்டம் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுடி வந்தனர்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்த நிலையில் கலால் ஒணி பகுதியில் இருந்து வந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்றிருந்த பெண்களுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் அந்த பெண்கள் சத்தம்போட்டுக் கூச்சலிட்டனர்.
இதைடுத்து கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை இன்னொரு தரப்பினர் தாக்கத் தொடங்கினர். இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெரும் பதற்றமும் உண்டானது. வன்முறை ஏற்படும் சூழலும் உருவானது. இதையடுத்து காவல் துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தினர்.
இதுதொடர்பாக காவல் துறையினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஒரே நேரத்தில் சி.பி.டி. சாலைக்கு 3 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் வந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதை பயன்படுத்தி சிலர் பெண்களுக்கு பாலியல் தொல்லைகொடுத்துள்ளனர். இதுவரை 30 பெண்கள் தங்களுக்கு மர்மநபர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்திருக்கிறார்கள். பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகிறோம்’ என்றனர்.
