எஸ்டிபிஅய் நடத்திய பேரணியில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை உரிய காலத்தில் முடிடுத்திடுக!
முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்துக!!
இறுதிவரை போராடுவோம், வெற்றி கிட்டும் வரையில் போராடுவோம்!

சென்னை, செப்.13  ஜாதிவாரிக் கணக்கெடுப்பை உரிய காலத்தில் முடித்திடவும்,  முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்த வலியுறுத்தியும் இறுதிவரை போராடுவோம்! வெற்றி கிட்டும் வரையிலே போராடுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

Contents

முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்த வலியுறுத்தி எஸ்.டி.பி.அய்.
கட்சியின் பேரணி – பொதுக்கூட்டம்!

நேற்று (12.9.2026) முற்பகல் 11.30 மணிக்கு, சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கின் அருகே ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்தவும், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்தவும் வலியுறுத்தி, தலைமைச் செயலகம் நோக்கி எஸ்டிபிஅய் கட்சியினரின் மாபெரும் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பேரணியைத் தொடங்கி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

தலைவர் அவர்களே, தோழர்களே, நம்முடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; இங்கே  நம்முடைய தலைவர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, நம்முடைய உரிமைகள், வெறும் சலுகைகள் அல்ல; பிச்சைகள் அல்ல; உரிமைகள் என்று வலியுறுத்தக்கூடிய இந்த அற்புதமான ஆர்ப்பாட்டம் – பேரணியைத் துவக்கி வைப்பதிலே எல்லையற்ற மகிழ்ச்சியை நாங்கள் அடைகின்றோம். ஏனென்றால் இங்கே இஸ்லாமிய சகோதரர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அவர்களுக்குத் துணையாக எல்லோரும் இருக்கிறோம். இங்கே வந்திருக்கக்கூடிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்களே,  பொறுப்பாளர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கே அநீதி இருக்கிறதோ அப்போதுதான் நீதி வேண்டும் என்று கேட்போம்!

மிகத் தெளிவாக வரவேற்புரையிலும், எனக்கு முன்னால் பேசிய உரையிலும், எஸ்.டி.பி.அய். நடத்தும் பேரணியின் நோக்கம் என்ன என்பதை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். நான் அதிக நேரம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பொதுவாக சமூக நீதி,  இட ஒதுக்கீடு என்பது இருக்கிறதே, அதைப் பொறுத்தவரையிலே, ஏன் சமூக நீதி கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது?  எப்போது நீதி வேண்டும் என்று கேட்போம் என்றால், எங்கே அநீதி இருக்கிறதோ அப்போதுதான் நீதி வேண்டும் என்று கேட்போம்.

எனவே, நமக்குக் காலங்காலமாக இழைக்கப்பட்டி ருப்பது முழுக்க முழுக்க அநீதி. இந்த நாட்டினுடைய மக்கள் வந்தேறிகள் அல்ல; ‘ஒண்டவந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டியது’ என்று சொல்வதைப் போல, வந்தேறிகள் இங்கே நுழைந்துகொண்டு, மக்களைப் பிரித்து, ஜாதிகளாக, பிரிவுகளாக ஆக்கியது மட்டுமல்ல, பேதத்தை உருவாக்கினார்கள்.

மனிதர்களுக்குள்ளே இன்னார் படிக்கலாம்; இன்னார் படிக்கக் கூடாது; இவர் உத்தியோகத்துக்கு போகலாம்; இவர் உத்தியோகத்துக்குப் போகக்கூடாது. இவரைத் தொடலாம்; இவரைத் தொடக்கூடாது; இவர் வந்தால் தீட்டாகிவிடும் என்றெல்லாம் அன்று ஆரம்பித்தது, இன்றுவரையிலே தொடரக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறதே, இதை ஒழிப்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு கேட்கிறோம். சமத்துவத்துக்காக, சமவாய்ப்புக்காகத்தான் கேட்கிறோமே தவிர, இது மக்களைப் பிரிப்பது அல்ல; மக்களைச் சமப்படுத்துவது. இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மதத்தால் இஸ்லாமியர்கள்
இனத்தால் திராவிடர்கள்!

இட ஒதுக்கீட்டினுடைய தத்துவத்தை ஆங்கிலத்திலே அழகாக ஒரே வார்த்தையிலே சொல்லுகிறார்கள் இப்போது  ‘Compensatory Justice’ என்று. காலங்காலமாக நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்குகிறோம். நாம் இந்த நாட்டுக் குடியுரிமை உள்ளவர்கள். அது மட்டுமல்ல, நாட்டைப் பார்க்கும்போது சில மதவெறி அமைப்புகள், ‘இஸ்லாமியர்களா, அவர்கள் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள்’ என்ற ஒரு வெறுப்புணர்ச்சியைச் சொல்கிறார்கள். இஸ்லாமிய சகோதரர்கள் இருக்கிறார்களே, அவர்கள் யாரும், எங்கோ ஒரு நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல; மேலே இருந்து ‘பூதேவர்கள் போல’ கீழே வந்தவர்கள் அல்ல. இந்த மண்ணின் மைந்தர்கள். மதத்தால் இஸ்லாமியர்களாக இருக்கலாம். ஆனால், இனத்தால் திராவிடர்கள், நாட்டால் இந்தியர்கள் என்ற  உணர்வை யாரும் மறக்க முடியாது.  எல்லோருக்கும் உரிமை உண்டு என்று சொல்லும்போது ‘We the People of India’ என்றுதான் அரசியலமைப்புச் சட்டம் தொடங்குகிறது. ‘இந்திய மக்களாகிய நாம்’ என்றுதான் அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதி இருக்கி றார்கள். ஆகவே, ‘‘எல்லோருக்கும் எல்லாம்.’’ இதுதான் சமூக நீதி. தந்தை பெரியார் மொழியிலே சொல்ல வேண்டுமானால், ‘‘அனைவருக்கும் அனைத்தும்.’’ இங்கு அனைவருக்கும் அனைத்தும் கிடைத்துவிட்டால், நமக்குள்ளே போட்டி கிடையாது. நமக்குள்ளே சண்டை கிடையாது. விமானத்தில் பயணம் செய்கிறவர்கள் யாரும், அடித்துப் பிடித்து ஓடுவதில்லை. யாரும், விமானங்களில் ஏறுகிறவர்களைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைவதில்லை. காரணம், எல்லோருக்கும் இடம் அங்கே இருக்கிறது என்று தெரிந்ததனால்தான்!  ‘ரிசர்வ்டு’ (Reserved) என்று சொன்னாலே,  ஒரு ஆள் வர வில்லை என்றாலும், விமானி விமானத்தை எடுக்க மாட்டார். அவர் யார்? எங்கே இருக்கார்? என்று தேடிக் கண்டுபிடிப்பார்கள். அதுதான் இட ஒதுக்கீடு – சமூக நீதி – சமவாய்ப்பினுடைய தத்துவம். அதைத்தான் இன்றைக் குக் கேட்கிறார்கள்கள் இஸ்லாமிய சமுதாயத்தவர்கள்.

அரசியல் பார்வையோடு பார்க்கக் கூடாது; சமூகப் பார்வையோடு பார்க்க வேண்டும்!

இந்த நேரத்திலே, ஒன்றைச் சொல்ல வேண்டும். இஸ்லாமிய சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு  இல்லாத நேரத்திலே, நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர்தான் இதைப் பற்றி எங்களிடத்தில் ஆலோசித்தார்கள். இந்த வர லாற்றை உங்களுக்குச் சொல்ல வேண்டும்; இதை அரசி யல் பார்வையோடு பார்க்கக் கூடாது; சமூகப் பார்வையோடு பார்க்க வேண்டும்.  அப்படி மத ரீதியாகக் கொடுக்க முடியாது என்று சிலர் சொன்ன போதுதான், ஒரு கருத்தை நாங்கள் முன்வைத்தோம். ஜஸ்டிஸ் ஜனார்த்தனம் ஆணையம் அமைக்கப்பட்டது.  அது என்னவென்று சொன்னால், இஸ்லாமிய சமுதாயத்தவர்கள் எல்லாம், வேறு எங்கோ இருந்து வந்தவர்கள் அல்ல; இங்கே தீண்டாமைக் கொடுமை, ஜாதிக் கொடுமை, அக்கிரமம், அநீதி, மனுநீதி இவற்றால்தான் இஸ்லாமியர்கள் ஆனார்கள். இன்னுங்கேட்டால், பழைய சொற்றொடர் ஒன்று உண்டு. என்ன அந்த சொற்றொடர் என்றால், ‘‘இஸ்லாம் ஆனவர் எங்கே இருக்கிறார்?’’ என்று கேட்டார்கள். அந்தச் சொற்றொடரே ‘‘இஸ்லாம் ஆனவர்கள்’’ என்று விளங்க வைக்கும். அதுதான் மிக முக்கியம்.

வகுப்பு வேறு; ஜாதி வேறு; என்று புதுக் கரடியை விட ஆரம்பித்திருக்கிறார்கள்!

ஆகவேதான், முதன் முதலாக பிற்படுத்தப்பட்டோ ருக்கு வகுப்புவாரி உரிமை தந்த நேரத்திலேயே, திராவிட அரசுகள் இயங்கிய நேரத்தில், இடஒதுக்கீடு இருந்தது. அதைச் சுட்டிக் காட்டினோம்; கலைஞர் அவர்கள் நன்றாக நினைவில் வைத்துக்கொண்டு, அதற்குச் சட்ட வடிவம் கொடுத்தார்கள். அதனுடைய விளைவுதான் தோழர்களே, அன்றைய காலகட்டத்தின்படி தொடக்கக் கட்டமாக, 3.5 சதவிகிதம் என்று  வந்தது. இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. ஏன் ஜாதிவாரிக் கணக்கு எடுக்க வேண்டும்? புள்ளி விவரம் வேண்டும். நீதிமன்றத்தில் என்ன கேட்கிறார்கள், Where is the Quantifiable Data? அளவிற்குரிய புள்ளி விவரங்கள் எங்கே இருக்கிறது? என்று கேட்கிறார்கள். அதை யார் செய்ய வேண்டும்? தோழர்களே ஒன்றைச் சொல்லுகிறேன், மாநில அரசு எடுத்தாலும் அது ‘சர்வே’ என்றுதான் உச்சநீதிமன்றத்தால் கூறப்பட்டிருக்கிறதே தவிர, இப்போது சென்சஸ் என்று வருகிற நேரத்தில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதை ஒப்புக்கொண்டிருக்கிற ஒரு சூழ்நிலையில், இப்போது நடைமுறையில் அதைத் தடுக்க நினைக்கிறார்கள். அதுதான் ஆர்எஸ்எஸ், அதுதான் பிஜேபி, மோடி அரசி னுடைய தத்துவம். ஆகவே, இப்போது போட்டுக் குழப்பி, வகுப்பு வேறு; ஜாதி வேறு; என்று புதுக் கர டியை விட ஆரம்பித்திருக்கிறார்கள். அதைக் கண்டித்து நாடு முழுக்கச் சொல்ல வேண்டும்.

‘வகுப்புகள் என்றாலும், ஜாதிகள் என்றாலும் ஒன்றுதான்’ என்று, நாம் சொல்லவில்லை; இங்கே இருக்கிறவர்கள் சொல்லவில்லை; கற்பனையாகச் சொல்லவில்லை; அரசியலமைப்புச் சட்டத்தை வரை யறுத்த டாக்டர் அம்பேத்கர் அவர்களே சொன்னார்கள். பொது மேடையில் அல்ல; நாடாளுமன்றத்தில் சொன்னார்கள்; அரசியல் நிர்ணய சபையில் சொன்னார்கள். அதை ஏற்றுத்தான், முதலாவது அரசியல மைப்புச் சட்டத் திருத்தம் வந்தது. அது மட்டுமல்ல நண்பர்களே, அதே கொள்கையை ஏற்றுத்தான், உச்ச நீதிமன்றத்தினுடைய ஒன்பது நீதிபதிகள் அமர்வு வழக்கு உள்பட பல தீர்ப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதையே இன்றைக்கு பா.ஜ.க. அரசினர் குழப்பிவிட்டு, ஒரு கையிலே கொடுப்பதுபோல கொடுத்து, இன்னொரு கையிலே பறிக்கக்கூடிய அளவிலே செய்திருக்கிறார்கள்.

அரசியலமைப்புச் சட்ட முதல் திருத்தம்!

எனவே, உங்களுடைய இந்தக் கோரிக்கையிலே மிக முக்கியமாக, வகுப்பு வேறல்ல, ஜாதி வேறல்ல என்ற முழக்கத்தை நீங்கள் தெளிவாகப் பதிவு செய்ய வேண்டும். இப்போது வேண்டும் என்றே உள்ளே ஒரு புதிய குழப்பத்தை உருவாக்குகிறார்களே! தீர்ப்பு இருக்கிறது, இதோ அரசியலமைப்புச் சட்டம்! அந்த அரசியலமைப்புச் சட்டத்தினுடைய விதிமுறைகள் இருக்கின்றன.  அதுவும் முன்னால் இருந்ததை விட! நாம் கொடுத்த நெருக்கடியினாலே, டில்லி வரையிலே போராடியதினுடைய விளைவாகத்தான், எப்படி முதல் அரசியலமைப்புச் சட்ட திருத்தம், தந்தை பெரியார் அவர்களுடைய போராட்டத்தினால் வந்ததோ, 15(4) கொண்டு வரப்பட்டதோ, அதேபோலத்தான் இப்போது புதிய இரண்டு அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் வந்திருக்கின்றன. எஸ்சி என்றால் யார்?  எஸ்டி என்றால் யார்?  அதே மாதிரி ஓபிசி என்று சொன்னால், யார்? இப்பொழுது ஓபிசி என்ற வார்த்தையே தேவையில்லை. ‘ஓ’ என்ற எழுத்தை எடுத்துவிடலாம். காரணம் என்ன வென்றால், ‘அதர் பேக்வர்ட் கிளாஸ்’ இல்லை. ஏனென்றால், எஸ்சி என்று சொன்னால், பட்டியல் ஜாதி; அதே மாதிரி ஷெட்டியூல் டிரைப் என்றால் அது பட்டியல் பழங்குடியினர். அது மாதிரி  பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இல்லையே என்று அப்போது கேட்டார்கள். ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சட்டம் வந்து வரையறை (Definition) கொடுத்துவிட்டார்கள். ‘Socially Economically Backward Classes’ என்று.

1907 ஆம் ஆண்டிலேயே ‘தனித்தொகுதியை’ இஸ்லாமியர்கள் பெற்றார்கள்!

ஆகவே, மூன்றும் (SC, ST, SEBC) இருக்கிறது. எனவே, இனிமேல் ‘டெபனிஷன் இல்லை’ என்று ஏமாற்ற முடியாது. அதனால்தான் இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால்,  ‘வகுப்பு வேறு; ஜாதி வேறு’ என்கிறார்கள்.  ஜாதிவாரியாக இருப்பதுதான் வகுப்புவாரி என்று சொல்லக்கூடிய திட்டம். எனவே, இந்தக் கோரிக்கைகளை நீங்கள் வலியுறுத்த வேண்டும். வெள்ளம் போல் திரண்டிருக்கிற தோழர்களே, ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்லுகிறேன், இந்த நாட்டி லேயே இட ஒதுக்கீட்டை முதன் முதலாகப் போராடிப் பெற்ற ஒரு சமூகம் இருக்கிறது என்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான்! பல பேருக்கு, இந்தப் பழைய வரலாறு தெரியாது.  தனித்தொகுதி என்று இருக்கிறதே, அது முதலில் ஆதி திராவிடர்கள் பெறவில்லை;  1907 ஆம் ஆண்டிலேயே இஸ்லாமியர்கள் பெற்றார்கள் என்பது பழைய வரலாறு. ஆனால், சமூக வரலாற்றை சரியாக யாரும் எழுதியது இல்லை, படித்ததில்லை; மறைத்திருக்கிறார்கள்.

கட்சி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை!

இது ஒரு தனிப் பொதுக்கூட்டம் அல்ல; மற்ற தோழர்கள், மற்ற தலைவர்கள் பேச வேண்டும். உங்களுடைய கோரிக்கை என்பது நிச்சயமாக வெற்றி பெற வைக்க வேண்டிய கோரிக்கை. நியாயமான கோரிக்கை! அதனால்தான், இஸ்லாமிய சமுதாயப் பெண்களும் இங்கே திரண்டிருக்கிறார்கள், தாய்மார்கள் திரண்டிருக்கிறார்கள். இதில் கட்சி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை.

இறுதிவரை போராடுவோம்!
வெற்றி கிட்டும் வரையிலே போராடுவோம்!

நீதி இருக்கிறது, சமூக நீதி இருக்கிறது. வென்றே தீருவோம்; வென்று காட்டுவோம்! இறுதிவரை போராடு வோம்! வெற்றி கிட்டும் வரையிலே போராடுவோம்! ஒன்றுபடுவோம், உணர்வை வெளிப்படுத்துவோம்! ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைக்கிறோம்! நன்றி!

–இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *