மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ‘‘ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நீக்கிட சூழ்ச்சி செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து’’ தமிழ்நாடெங்கும் ஆர்ப்பாட்டம்


சென்னை, செப்.11 ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற சமூகநீதியை ஒழித்துக் கட்ட, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியைத் தவிர்க்க ஒன்றிய பா.ஜ.க. அரசால் சூழ்ச்சித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது; மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நீக்கிட சூழ்ச்சி செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து’’ திராவிடர் கழகம் சார்பில் இன்று (11.9.2026) தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய வரலாற்றில் சமூகநீதியை ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தென்னாடு குறிப்பாக பழைய சென்னை மாகாண நீதிக்கட்சி அரசு என்ற திராவிடர்களின் அரசு, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கல்வி, உத்தியோகப் பணி வாய்ப்புகளில், அதற்கு முன் பல நூற்றாண்டுகளாகத் திறக்கப்படாத மனுதர்ம இரும்புக் கதவை அசைத்து, மெல்லத் திறந்தது!
அதனால், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோரும் கல்வி சாலைகளில் நுழைந்து, படித்து, பணித் தகுதி பெற்றனர்.
தற்போது, மக்கள் தொகையில் 100க்கு 65 விழுக்காட்டிற்கு மேல் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட ஒரு பெரும் சூழ்ச்சி திட்டத்தை மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் ‘‘சட்ட ரீதியாக’’ச் (!) செய்ய முனைப்புக் காட்டிவருகின்றனர்.
சமூகநீதியை
ஒழிக்க புதிய சூழ்ச்சி!
ஒழிக்க புதிய சூழ்ச்சி!
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை முன்பு எதிர்த்த பா.ஜ.க. கடந்த பீகார் மாநிலத் தேர்தலின்போது, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதாக ஒப்புக் கொண்டு விட்ட நிலையில், இப்போது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசும், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அதிகார வர்க்கமும் ஒரு புதிய சூழ்ச்சியை, தந்திரத்தை நுழைத்து, அதனை அறவே மறுக்க முடிவு செய்துள்ளன.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC) என்று இருப்பதால், வகுப்பு என்று தான் இருக்கிறது. ‘ஜாதி’ என்று இல்லை (அரசியலமைப்புச் சட்டத்தில் Class – Not Caste என்ற) ஒரு குயுக்தியான வாதத்தைக் காரணம் காட்டி, ஏற்கெனவே நாட்டிலுள்ள சமூகநீதி, இடஒதுக்கீட்டையே ஒழித்துக் கட்டத் தொடங்கி விட்டனர்.
கிரீமிலேயர் திணிப்புக்கு எதிராக ஒட்டு மொத்த பிற்படுத்தப்பட்ட மக்களும், ஒடுக்கப்பட்ட (எஸ்.சி., எஸ்.டி.,) மக்களும் ஒருங்கிணைந்து அறவழியில் போராட்டக் களம் அமைக்க வேண்டிய அரிய தருணம் வந்து விட்டது!
சமூக நீதிக்காகப் போராடும் இயக்கங்களும், அமைப் புகளும் இதை எதிர்த்து போராட்டக் களம் காண வேண்டிய தவிர்க்க வியலாத சூழலை ஒன்றிய அரசு ஏற்படுத்தியுள்ளது. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் களம் காணும் திராவிடர் கழகம் இந்தக் களத்தை மீண்டும் இப்போது தொடங்கி வைக்கிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், அனைத்து கழக மாவட்டங்களிலும், முக்கிய நகரங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில், ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், சமூகநீதிக்காக நீதிமன்றங்கள் கேட்கும் முழுமையான விவரங்களைத் திரட்ட வலியுறுத்தியும், அறவழி ஆர்ப்பாட்டங்கள் செப்.11–இல் நடைபெறும்’’ என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணிஅவர்கள் 5.9.2026 அன்று அறிக்கை வாயிலாக அறிவித்தார். அதன்படி இன்று(11.9.2026) தமிழ்நாடெங்கும் ஒன்றிய அரசின் சூழ்ச்சியைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
இன்று (11.9.2026) காலை 11 மணியளவில் சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நீக்கிட ஒன்றிய பா.ஜ.க அரசின் சூழ்ச்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்ட விளக்க கண்டன உரையை நிகழ்த்தினார்.
முன்னதாக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் வரவேற்புரையாற்ற, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.
திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி.
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் சு. குமாரதேவன், தெ.சே. கோபால், கழக மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் தலைவர் பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம், மாநில கழக இளைஞரணி இணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ. சுரேஷ், க.இறைவி, பேராசிரியர் வி.கே. ஆர். பெரியார் செல்வி, பசும்பொன்.
மாவட்டத் தலைவர்கள் தாம்பரம் ப. முத்தையன், எண்ணூர் வெ.மு. மோகன், புழல் த. ஆனந்தன், வே. பாண்டு, வெ. கார்வேந்தன், கரு. அண்ணாமலை, மாவட்டச் செயலாளர்கள் செ.ர. பார்த்தசாரதி, புரசை சு. அன்புச்செல்வன், ந. இராசேந்திரன், கோ. நாத்திகன், ஜெ. பாஸ்கரன், க. இளவரசன், க. தமிழனியன், க. சுப்பிரமணி ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
ஒலி முழக்கங்கள்
நிறைவாக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்திலும், நிறைவிலும் கீழ்க்கண்ட ஒலிமுழக்கங்கள் எழுப்பப்பட்டன.
l ஒன்றிய அரசே! பா.ஜ.க. அரசே! ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதில் குழப்பம் ஏன்?
l இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் யாரென்ற விளக்கம் தெளிவாய் இருக்கிறதே!
l சமூகரீதியில், கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்ட மக்களைக் கணக்கெடுக்கத் தயங்குவது ஏன்?
l அரசியல் சட்டத்திற்குப் புறம்பாகப் பொருளாதார அளவுகோல் ஏன்?
l வகுப்பு என்றால், ஜாதி இல்லாமல் வேறு என்ன? வகுப்பு என்பதே ஜாதிகளின் தொகுப்புதானே!
l அரசியல் சட்டக் கர்த்தாவாம் டாக்டர் அண்ணல் அம்பேத்கரும், நீதிமன்றத் தீர்ப்புகளும் தெளிவாய்ச் சொன்ன பின்னாலும் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கும் பா.ஜ.க.வைக் கண்டிக்கிறோம்! ஆர்.எஸ்.எஸ். சைக் கண்டிக்கிறோம்!!
l வகுப்புரிமை எங்கள் பிறப்புரிமை! இடஒதுக்கீடு எங்கள் பிறப்புரிமை! வெல்லட்டும் வெல்லட்டும்! சமூகநீதி வெல்லட்டும்!
உள்பட ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
