ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ அறக்கட்டளை ஒருதனியார் அறக்கட்டளை என்பதால், அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு “பொது அதிகார அமைப்பு” கிடையாது என்றும், எனவே இச்சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்கக் கடமைப்பட்டிருக்கவில்லை என்றும் தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
அயோத்தியில் ராமன் கோவில் கட்டுவதற்காக ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள், நிதி மேலாண்மை மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கோரப்பட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இருப்பினும், இந்த கோரிக்கைகளை அறக்கட்டளை நிர்வாகமும், அதைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சகமும் நிராகரித்தன.
முதன்மை விலக்குகள் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் நிலைப்பாடு இந்த விவகாரத்தில் இரு முக்கிய நிறுவன ரீதியான எதிர்ப்புகள் எழுப்பப்பட்டுள்ளன:
’ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ அறக்கட்டளையானது ஒரு தனியார் அமைப்பாகும். இது அரசு நிதியில் இயங்கவில்லை என்பதால், ஆர் டி அய் சட்டப் பிரிவு 2(h)-இன் கீழ் “பொது அதிகார அமைப்பாக” கருதப்பட முடியாது என்று கூறி, பொதுமக்களின் தணிக்கை மற்றும் கணக்கு விவரங்களை வெளியிடுவதிலிருந்து அது விலகியுள்ளது. அறக்கட்டளையை அமைப்பது தொடர்பான முழு கோப்புகளையும் “ரகசியமானது” என உள்துறை அமைச்சகம் வகைப்படுத்தியுள்ளது. ஆர் டி அய் சட்டத்தின் பிரிவு 8(1)(g)-அய் சுட்டிக்காட்டி, இந்த விவரங்களை வெளிப்படுத்தினால் அது மனித உயிர்களுக்கோ அல்லது தனிநபர்களின் பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்ற அடிப்படையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள அமைச்சகம் மறுத்துள்ளதாம்!
இந்த மறுப்புகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த ஒன்றிய தகவல் ஆணையம், உள்துறை அமைச்சகம் மற்றும் அறக்கட்டளையின் முதன்மை வாதங்களை ஏற்றுக்கொண்டது. அறக்கட்டளையின் செயல்பாடுகளையும், அதன் உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள அரசாங்கக் கோப்புகளையும் பொது ஆய்வுக்கு உட்படுத்துவதில் இருந்து பாதுகாக்கும் வகையிலான இந்த மறுப்பு முடிவை ஆணையம் உறுதி செய்துள்ளது.
இந்த முடிவானது வெளிப்படைத்தன்மை மற்றும் சட்ட வல்லுநர்களிடையே கடுமையான விவாதத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே இந்த அறக்கட்டளை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டும் தகவல் உரிமை ஆர்வலர்கள் கோடிக்கணக்கான மக்களின் நன்கொடைகளைப் பெறும் இத்தகைய ஒரு பெரிய அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் அரசாங்க ஆவணங்கள் மறைக்கப்படுவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்திற்கே எதிரானது என்பதில் அய்யமில்லை.
‘பிரதமர் நிவாரண நிதி’ என்ற பெயரில் கரோனா காலகட்டத்தின் போது அமைப்பு ஒன்று பிரதமர் நிர்மலாசீதாராமன், அமித்ஷா உள்ளிட்ட சில முக்கிய நபர்களால் ‘பிஎம்கேர்’ உருவாக்கப்பட்டது.
அதில் எத்தனைக் கோடிகள் சென்றது – எதற்கு செலவானது என்று இன்றுவரை பதில் இல்லை, இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது பிஎம்கேர் தனி நபர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்றும், அந்த பிஎம் கேர் அமைப்பை தணிக்கை வாரியமும் தகவல் அறியும் உரிமைச்சட்டமும் கேள்வி கேட்க முடியாது என்றும் கூறியது. இன்றுவரை அது பெரும் விவாதப் பொருளாகி உள்ளது தற்போது நீதிமன்ற ஆலோசனையின்கீழ் அமைக்கப்பட்ட ராமஜென்மபூமி கணக்கு வழக்கையும் கேள்வி கேட்கக்கூடாது என்று கூறிவிட்டது. இனிமேல் ராமன்கோவில் திருட்டு தொடர்பாக யாரும் பேசக்கூடாது என்று ஒன்றிய மற்றும் மாநில அரசு பாஜக அரசுகள் மறைமுகமாக கூறிவிட்டன.
எப்படி இருக்கிறது? அயோத்தி ராமன் கோயிலில் கையாடல், மோசடி, திருட்டு என்று நாளும் செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.
இந்த நிலையில், ஊழலைக் காப்பாற்ற பூண் போடுவது போல, அதுபற்றிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வரக் கூடாது என்பதற்காக – தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் வராது என்ற சூழ்ச்சி வலையைப் பின்னியுள்ளனர்.
கோயில்கள் என்றால் ‘புனித’மானவையென்றும், கடவுள் கடாட்சத்தைப் பெறக் கூடிய இடம் என்றும் கூறுவது எல்லாம் – பசப்புவது எல்லாம், கொள்ளை அடிப்பதற்குத்தானா என்ற கேள்வி எழுகின்றதா இல்லையா?
பாடுபட்டு உழைக்கும் ஏழைப் பாழைகளின் பணம் காசு எல்லாம் உயர் ஜாதிக் கும்பலின் வயிற்றில் அறுத்துக் கட்டத்தானா?
பக்தர்களே சிந்திப்பீர்!
