குடியுரிமைச் சான்றுகளும், குடிமக்கள் சந்திக்கும் நெருக்கடிகளும்

4 Min Read

‘‘இந்திய அரசு வழங்கும் கடவுச் சீட்டு (Passport) என்பதை இந்தியக் குடிமகன்/குடிமகள் என்பதற்கான ஆதாரமாகக் கொள்ள முடியாது’’ என்று இந்திய அரசின் வெளியுறவுத் துறை நேற்று (25.6.2026) அறிவித்துள்ளது. ஏற்கெனவே குடிமக்கள் என்பதற்கான சான்றாக ஆதார் அட்டையைக் கருத முடியாது; குடும்ப அட்டையைக் (ரேஷன் அட்டை) கருத முடியாது. நிரந்தரக் கணக்கு எண்ணைக் (Pan card) கருத முடியாது. வாக்காளர் அடையாள அட்டையைக் கருத முடியாது என்று ஏறத்தாழ தான் வழங்கிய எல்லா அடையாள அட்டைகளையும் நிராகரித்த வரிசையில், அடுத்ததாக கடவுச் சீட்டையும் சேர்த்துள்ளது இந்திய அரசு.

கடவுச் சீட்டைக் குடிமக்களுக்கான சான்றாகப் பல நாடுகள் பயன்படுத்துகின்றன. குடியேற்றப் பிரச்சினை மிகுந்துள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட முக்கியமான பல நாடுகளும் கடவுச் சீட்டை குடிமக்கள் சான்றாக ஏற்கின்றன. ஆனால், இந்தியாவுக்கு ஏன் குடியுரிமைக்கான சான்றாக அதை ஏற்பதில் தயக்கம்?

ஆர்ப்பாட்டமாக வழங்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்ட அமர்வு வரை விவாதிக்கப்பட்டது ஆதார் அடையாள அட்டை! ஆதார் அறிமுகப்படுத்தப்படும்போது, “ஆதார் – சாதாரண மனிதனின் அதிகாரம்” என்று அந்த அட்டையில் அச்சிட்டிருப்பார்கள். எல்லாவற்றுக்கும் ஆதார் அட்டை போதும் என்னும் வகையில் அப்போது சொல்லப்பட்டது. படிப்படியாக, “எனது ஆதார்; எனது அடையாளம்” என்று அதிகாரம், அடையாளமாகி, பின்னர் அதுவும் கூட ‘முகவரிக்கான சான்று மட்டுமே, வயதுக்கான சான்று அல்ல’ என்றாகிவிட்டது. ஒன்றுக்குப் பத்தாகப் பல்வேறு அட்டைகளை வைத்துக் கொண்டு, எதற்கு எது சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று குழப்பத்தில் இருக்கிறார்கள் இந்தியக் குடிமக்கள்! ஏன் இவ்வளவு நெருக்கடிகள் தரப்படுகின்றன?

நிற்க. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் வாக்குரிமைக்கும் இப்படி ஒரு சந்தேகம் கிளப்பப்பட்டது. எஸ்.அய்.ஆர் என்ற பெயரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் மறுஆய்வு செய்யப்பட்டதன் மூலம் பல லட்சக் கணக்கானோர் வாக்குரிமை இழந்துள்ளனர். எஸ்.அய்.ஆருக்குக் கண்டனம் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘‘அரசியலமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்களின் படி இது செல்லத்தக்கதல்ல என்று சொன்னதுடன், நாளையே இது குடியுரிமையைப் பறிப்பதற்கான அடித்தளமாக அமைந்துவிடும்’’ என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கை எவ்வளவு முன்னோக்குடன் கூடியது என்பது தற்போது மேற்கு வங்கப் பா.ஜ.க. அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை மூலம் உறுதியாகியுள்ளது.

கடந்த மாதம் நடந்த மேற்குவங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜ.க. அரசின் உணவு மற்றும் வழங்கல் துறை ஜூன் 4 அன்று ‘மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR), 2026-இன் முடிவுகளின் அடிப்படையில் தகுதியற்ற பொது விநியோகத் திட்டப் பயனாளிகளைச் சரிபார்த்தல் மற்றும் நீக்குதல்’ என்ற தலைப்பில் ஓர் உத்தரவை வெளியிட்டது. எஸ்அய்ஆர் 2026-இன் முடிவுகளின் அடிப்படையில், வரைவுப் பட்டியல் தயாரிப்பின் போது ‘வருகைதராதவர்கள், இடம் மாறியவர்கள், இறந்தவர்கள் மற்றும் நகல் பதிவுகள்’ கொண்ட வாக்காளர்கள்; வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு செயல்முறையின் போது அடையாளம் காணப்பட்டு, விசாரணைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டவர்கள்; வரைவுப் பட்டியல் வெளியான பிறகு இரண்டாவது பட்டியலில் நீக்கப்பட்டவர்கள்; தீர்ப்புக்குப் பிறகு நீக்கப்பட்டவர்கள்; மற்றும் எஸ்.அய்.ஆர்.க்குப் பிறகு வாக்காளர் தகவல் சீட்டு விநியோகத்தின் போது அந்த முகவரியில் இல்லாதோர், இடம்பெயர்ந்தோர், இறந்தோர், நகல் பதிவுகள் என கண்டறியப்பட்ட வாக்காளர்கள் ஆகிய அய்ந்து வகைகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் வருவதால் தகுதியற்றவர்களாகக் கண்டறியப்பட்ட பொது விநியோகத் திட்டப் பயனாளிகளைச் சரிபார்த்து நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளத் துறை முடிவு செய்துள்ளதாக அந்த ஆணையில் தெரிவித்தது.

இதை எதிர்த்து, விவசாயத் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் ஆகியோரை உள்ளடக்கிய ‘பச்சிம் பங்கா கேத் மஜூர் சமிதி’ (Paschim Banga Khet Majoor Samity) என்ற தற்சார்புத் தொழிற்சங்கம் இந்த அறிவிப்புகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

மே 27, 2026 அன்று வழங்கப்பட்ட பீகார் எஸ்.அய்.ஆர். வழக்கின் தீர்ப்பில், உச்சநீதிமன்றம் எஸ்.அய்.ஆர். நட வடிக்கையை உறுதி செய்த போதும், ‘குடியுரிமை குறித்த வரை யறுக்கப்பட்ட விசாரணையை மேற்கொள்ள மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது’ என்று கூறியிருந்தது.

“அத்தகைய விசாரணை என்பது சட்டப்பூர்வமான அல்லது முழுமையான அர்த்தத்தில் குடியுரிமையைத் தீர்மானிப்பதாக அமையாது; அதன் அடிப்படையில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் தேர்தல் தொடர்பான விளைவுகளுக்கு மட்டுமே உட்பட்டது” என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியிருந்தது. ஆனால், மேற்கு வங்க அரசின் உணவு மற்றும் வழங்கல் துறை இந்த வரம்பை மீறி, பொது விநியோகத் திட்டம், அன்னபூர்ணா யோஜனா போன்ற நலத் திட்டங்களுக்கும் விரிவுபடுத்த முயன்றுள்ளது. எஸ்.அய்.ஆர் மூலம் 91 லட்சம் பெயர்கள் அம் மாநிலத்தில் நீக்கப்பட்டிருந்தன. அதில் 34 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் தான் மேற்கு வங்க அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

குடியுரிமை குறித்து இவ்வளவு அதீத நடவடிக்கைகளும், விவாதங்களும், தீர்ப்புகளும், அறிவிப்புகளும் ஒரே நேரத்தில் தொடர்ந்து இந்தியாவில் வெளிவந்து கொண்டிருப்பதற்குக் காரணம் யாருக்கும் புரியாததல்ல! குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) என்று பா.ஜ.க. அரசு தொடங்கியதன் தொடர்ச்சியும் அதை நோக்கிய கட்டாய நகர்த்தலுமே இவையெல்லாம்! பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியலுக்கு எதிரானவர்கள் இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டவர்களை ஒடுக்க, அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்கச் செய்யப்பட்டுள்ள சூழ்ச்சிகளுள் இதுவும் ஒருவகை! வெளிப்படையாக, நோக்கங்களை அறிவித்துவிட்டுச் செயல்படும் நேர்மையை ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிசவாதிகளிடம் நிச்சயம் எதிர்பார்க்க முடியாது! ஆனால், பாசிசத்தை எதிர்த்து நிற்க முடியும் – அதைத் தான் செய்ய வேண்டும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *