நேரில் கேட்ட எங்களுக்கெல்லாம் கண்கள் கலங்கிவிட்டன! பாபாநாசம் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் உருக்கம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 17 இன் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது! நடப்பில்? அன்றைக்கு ெஜகஜீவன்ராம்– இன்றைக்கு மல்லிகார்ஜுன கார்கே!
‘‘அதனால்தான் உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகிறேனே!’’
என்று தந்தை பெரியார் சாகும் தருவாயிலும் கவலைப்பட்டார்!

பெரியார் உலகத்திற்கு ஒரு லோடு செங்கல்லுக்கு உரிய தொகை ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது!

பாபநாசம், செப்.10 தந்தை பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், ‘‘ஆரிய வந்தேறிகள் இந்தியாவுக்குள் நுழைந்த போது பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், கையோடு மனுஸ்மிருதியைக் கொண்டு வந்தார்கள். அதுதான் நால்வருணத்தை நம்மீது திணித்தது. அதைத்தான் கிருஷ்ணன், ‘சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்’ என்று சொல்லியிருக்கிறார். இதை மாற்றுவதற்குத்தான் பாபாசாகேப் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 17 ஆம் பிரிவில், தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. அது எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும் குற்றம் என்று ஆக்கப்பட்டு விட்டது. ஆனால், நடப்பில் அப்படியில்லையே. அன்றைக்கு ெஜகஜீவன்ராமுக்கு நடைபெற்றது; இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் தந்தை பெரியார், ‘உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகிறேனே’ என்று 95 ஆம் வயதிலும் கவலைப்பட்டார். இதைக்கேட்ட எங்களைப் போன்றவர்கள் கண் கலங்கிவிட்டோம்’’ என்று உருக்கத்துடன் சுட்டிக்காட்டி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – பொதுக்கூட்டம்

கும்பகோணம் மாவட்டம், பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில், தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று (9.9.2026) மாலை 6 மணிக்கு பாபநாசம் மேலவீதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாபநாசம் ஒன்றியத் தலைவர் தங்க.பூவானந்தம் தலைமையேற்க, பாபநாசம் ஒன்றியச் செயலாளர் சு.கலியமூர்த்தி அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். குடந்தை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்டக் காப்பாளர் வை.இளங்கோவன், குடந்தை பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம், மாவட்ட துணைச் செயலாளர் துரை.சரவணன், பாபநாசம் ஒன்றியத் தலைவர் மு.சேகர், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் வி.மோகன், குடந்தை மாவட்ட துணைத் தலைவர் வ.அழகுவேல், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் க.திருஞானசம்பந்தம், பாபநாசம் ஒன்றியத் துணைத் தலைவர் க.ஜனார்த்தனம்,  பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், பொதுக்குழு உறுப்பினர் ஆ.தமிழ்மணி, தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார், எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர் க.குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இணைப்புரையை குடந்தை மாவட்டச் செயலாளர் சு.துரைராசு மேற்கொண்டார்.

தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

முன்னதாக, திண்டுக்கல் ஈட்டி கணேசன் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சியை செய்துகாட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கழகத் தலைவருக்கு முன்பு, தலைமைக்கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் உரையாற்றினார். கழகத் தலைவர் நிகழ்விடத்துக்கு 7.15 மணிக்கு வருகை தந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் அவருக்கு எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டது.  மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மேடை நிகழ்வுகளை ஒருங்கிணைத்தும், இயக்கப் புத்தகங்களை அறிமுகம் செய்தும், அவற்றை வாங்கும்படியாக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் உரையாற்றினார்.

பெரியார் உலகத்திற்கு ஒரு லோடு செங்கல் தொகை ரூ.50 ஆயிரம் தமிழர் தலைவரிடம் அளித்தனர்!

தொடர்ந்து, கழகத் தலைவர், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தும், 80 வயதுக்கு மேற்பட்ட கழகத் தொண்டர்களைச் சிறப்பித்தும் உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு கழகத் தலைவர் சிறப்பு செய்தார். ஒன்றியச் செயலாளர் கலியமூர்த்தி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக, கழகத் தலைவருக்கு ஆடையணிவித்து சிறப்பித்தார். தொடர்ந்து, மாவட்ட மகளிரணித் தோழர்கள் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்புச் செய்தனர். திருநெல்வேலி, திருச்சியை அடுத்து, பாபநாசம் ஒன்றியம் சார்பில், பெரியார் உலகத்திற்கு ஒரு லோடு செங்கல் தருகிறோம் என்ற அடையாளத்துடன் அதற்கான தொகை ரூ.50,000/- த்தை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பொறுப்பாளர் இணைந்து வழங்கினர். அதைத் தொடர்ந்து, கழகத் தலைவர் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

அவர் தமது உரையில்,  பெரியார் உலகம் நன்கொடைக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, “செப்டம்பர் 17 ஆம் தேதி நடத்த வேண்டிய பெரியார் பிறந்தநாளை பாபநாசம் தோழர்கள் முந்திக்கொண்டு கொண்டாடுகிறார்கள்” என்றும், “அதற்கு தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்” என்றும், உற்சாகத்துடன் வாழ்த்தினார். தொடர்ந்து, “இந்தப் பகுதியில் இயக்கத்துக்குத் தூணாக இருந்த இராஜகிரி தங்கராசு அய்யா அவர்களையும், எல்லா மக்களும் மதிக்கும்படியாக வாழ்ந்த அவரது குணத்தையும் நினைவு கூர்ந்தார். மேலும் அவர், பாபநாசம் இயக்க வரலாற்றில் தான் சம்பந்தப்பட்ட ஒரு தகவலையும் பகிர்ந்துகொண்டார். அதாவது, பெரியார் அய்யா மறைவுக்குப் பிறகு, தான் பொறுப்பேற்ற புதிதில் கலந்துரையாடல் கூட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் இதே பாபநாசம்தான்’ என்பதுதான் அது. தந்தை பெரியாரின் 100 ஆவது ஆண்டு பிறந்தநாளுக்கு 100 பவுன் கொடுக்க வேண்டும் என்று முடிவானதும் இதே பாபநாசத்தில்தான்! 1948 இல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் மணியம்மையார் கலந்துகொண்டு கைது செய்யப்பட்ட போது, சார்நிலை (Sub jail) சிறையில்தான் அடைக்கப்பட்டது இதே பாபநாசத்தில்தான்! என்று, பாபநாசம் பகுதிக்கான இயக்க வரலாற்றுச் சிறப்பை அடுக்கினார்.

அடுத்து, தந்தை பெரியார் பற்றி கூறவந்த அவர், ”நான் காங்கிரசில் சேர்ந்ததும், பிரிந்ததும், எதிர்த்ததும், காமராசருக்காக ஆதரித்ததும் எல்லாவற்றுக்கும் அடிப்படை சமூகநீதிதான்” என்று சொல்லி, பெரியார் தனது நிலைப்பாடுகளில் மாறியது போலத் தோன்றினாலும், அவரது நோக்கம் மக்கள் முன்னேற்றம்தான் என்பதை விளக்கினார். தொடர்ந்து, தந்தை பெரியார் அப்படி போராட வேண்டியதன் காரணம் என்ன என்பதை விளக்க முற்பட்டவர், அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய, ‘இந்து மதம் எங்கே போகிறது?’ எனும் புத்தகத்தையும், மனுஸ்மிருதி புத்தகத்தையும் கையில் வைத்துக்கொண்டு பேசினார். அதாவது, ஆரியர்கள் வந்தேறிகளாக இந்தியாவுக்குள் வந்தனர் என்பதை

ஜாதி இன்னும் ஒழியவில்லை

ஆதாரத்துடன் அப்புத்தகத்தில் இருப்பதைப் படித்துக்காட்டி, ஆரிய வந்தேறிகள் இந்தியாவுக்குள் நுழைந்த போது பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், கையோடு மநுஸ்மிருதியைக் கொண்டு வந்தார்கள். அதுதான் நால்வருணத்தை நம்மீது திணித்தது. அதைத்தான் கிருஷ்ணன், ‘சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்’ என்று சொல்லியிருக்கிறார். இதை மாற்றுவதற்குத்தான் பாபாசாகேப் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சட்டப் பிரிவு 17 இன்படி, தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. அது எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும் குற்றம் என்று ஆக்கப்பட்ட பின்னரும், அன்றைக்கு ெஜகஜீவன்ராமுக்கு என்ன நடைபெற்றதோ, அதேதான் இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஜாதி இன்னும் ஒழியவில்லை. தொடர்ந்து சமூகநீதிக்காக நாம் போராடிக்கொண்டே இருக்கிறோம். இன்றைக்கும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பில், ஜாதி – வகுப்பு என்று திரிபு செய்து வருவதைச் சுட்டிக்காட்டி, ‘‘பார்ப்பனரின் தந்திரம் என்பது எப்போதும் சூழ்ச்சிதான்” என்பதை நினைவூட்டி, “நாம் கொஞ்சம் ஏமாந்தால் பழையபடி ஜாதி நிலைபெற்றுவிடும். அதனால்தான் தந்தை பெரியார், ‘உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகிறேனே’ என்று, தனது கடைசிக் கூட்டத்தில், 95 ஆம் வயதிலும் கவலைப்பட்டார். இதைக்கேட்ட எங்களைப் போன்றவர்கள் அன்றைக்குக் கண் கலங்கிவிட்டோம்” என்று உருக்கத்துடன் பேசினார்.

அடுத்து, ”வாழ்நாளெல்லாம் நம் உரிமைகளுக்காக நாம் போராடிக்கொண்டே இருப்பதா? மக்களுக்கு உணர்ச்சி வரவேண்டாமா? பெரியாரை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பது, பெரியாருக்காக அன்று, உங்களுக்காக! உங்கள் பிள்ளைகளுக்காக! உங்கள் பேரப்பிள்ளைகளின் மான வாழ்வுக்காக!” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறி, தமது உரையை நிறைவு செய்தார். நிறைவாக பாபநாசம் நகரத் தலைவர் வெ.இளங்கோவன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

தொடர்ந்து, மேடையிலேயே ஊடகவியலாளர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களை அளித்தார். நிகழ்வில், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், மாவட்ட ப.க. செயலாளர் பேரா.சேதுராமன், தில்லையம்பூர் முதியோர் காப்பக நிறுவனர் நடராசன், பெரியார் கண்ணன், பாபநாசம் உ.நாகராஜ், ஒன்றிய மகளிரணித் தலைவர் பொம்மி கணேசன், திரிபுரசுந்தரி, ஒன்றிய மகளிரணிப் பொறுப்பாளர் மதுரவள்ளி பூவானந்தா, மாவட்ட கழகப் பொறுப்பாளர் சரவணன், மாவட்ட இளைஞரணித் தோழர் லெனின் பாசுகர், சோழபுரம் ஜில்ராஜ், பட்டுக்கோட்டை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் தீபக், மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளை முதல்வர் முருகானந்தம், கணபதி அக்ரகாரம் நிருவாகி நெப்போலியன், வலங்கைமான் ஒன்றியத் தலைவர் பவானி சங்கர், ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன், திருநாகேஸ்வரம் தோழர்கள் சிவக்குமார், குருமூர்த்தி, பாபநாசம் ஒன்றியத் தோழர்கள் கை.ராஜராஜன், இராவணன், உள்ளிக்கடை குணசேகரன், மகாளிபுரம் சதாசிவம், கரிகாலன் – மரகதம், திராவிடர் சமுதாய நல அறக்கட்டளை சா.வரதராசன், க.கலியமூர்த்தி, குடந்தை ஒன்றிய கழகத் தலைவர் மகாலிங்கம், திருவையாறு ஒன்றிய கழகத் தலைவர் கண்ணன், அசூர் செல்வம் போட்டோ மகாதேவன் கோவிந்தகுடி உத்தமன் காமராஜ் ஆகியோரும், அனைத்துக்கட்சிகளையும் சார்ந்த தோழர்களும், பொதுமக்களும் இறுதிவரையிலும் இருந்து கழகத்தலைவரின் உரையை செவிமடுத்துச் சென்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *