புதுடில்லி, மே 29 நாடு முழுவதும் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு விரைவான மற்றும் தரமான அவசர மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அடுத்த 3 மாதங்களுக்குள் ‘112’ என்ற பொதுவான அவசர உதவி எண்ணை முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துகளின் போது ‘அவசர விபத்து சிகிச்சை’ (Trauma Care) தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் கோரி, ‘சேவ் லைப் பவுண்டேஷன்’ என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் அதுல் எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இந்த முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
சாமானியர்களின் அச்சம்
சாலை விபத்துகளில் சட்ட நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்வோமோ என்ற அச்சத்தால், சாமானிய மக்கள் அவசர எண்களை அழைக்கவோ, உதவவோ தயங்குகின்றனர். இந்த அச் சத்தைப் போக்க, காய சிகிச்சைக்கான ஒரு சீரான கட்டமைப்பை உருவாக்குவதுடன், பொது விழிப்புணர்வு மற்றும் முதலுதவித் திறன்களைத் தரப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
குடிமக்களுக்குக் கிடைக்க வேண்டிய முறையான விபத்து/காய சிகிச்சை என்பது, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-இன் கீழ் (Article 21) வழங்கப்பட்டுள்ள ‘வாழ்வதற்கான உரிமையின்’ ஒரு பகுதியாகும்.
ஒருங்கிணைந்த எண்
தற்போது மாநிலங்களில் வெவ்வேறு எண்களில் செயல்படும் அவசர உதவி எண்களை ஒருங்கிணைத்து, 3 மாதங்களுக்குள் ‘112’ என்ற பொதுவான எண்ணை அமல்படுத்த வேண்டும்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் நல்லெண்ணம் கொண்டவர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும்.
இதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மாநில-மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் கூடிய ‘நல்லெண்ணம் கொண்டவர்களின் குறைதீர்ப்பு அமைப்புகளை’ 3 மாதங்களுக்குள் நிறுவ வேண்டும்.
இந்த அதிரடி உத்தரவு மூலம், நாடு முழுவதும் சாலை விபத்துகளின் போது விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காக்கப்படுவதுடன், மக்களுக்கு உதவும் மனப்பான்மையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
