சென்னை, செப்.8 ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
இந்தியா முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பில், பிற்படுத்தப்பட்டோர் விவரங்களைச் சேகரிப்பதில், குழப்பத்தை ஏற்படுத்தி, இட ஒதுக்கீட்டிற்குப் பயன்படாத வகையில் செய்திட, ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் சூழ்ச்சியைக் கண்டித்து, கடந்த 5.9.2026 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்ததுடன், வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்
அதனைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்த அறிக்கையில், ஓ.பி.சி. மக்களின் உரிமையைக் காப்பாற்றிட குளறுபடியின்றி ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்திட ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்தியதுடன், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இதனை வலியுறுத்தி, சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தமிழர் தலைவர் ஆசிரியர்
மேலும், நேற்று (7.9.2026) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர், சட்டமன்றத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றினார்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில், பட்ஜெட் கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று மக்கள் தொகை – ஜாதிவாரிக் கணக்கெடுப்பின்போது தெளிவற்ற தன்மையை உருவாக்கும் திறந்தவெளிப் பதிவு முறையை முழுமையாகக் கைவிட வேண்டுமென்று தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் வே.சம்பத்குமார் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
இன்று (8.9.2026) சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் விவரம் வருமாறு:
‘‘இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஜாதி வாரி விவரங்கள் சேகரிக்கப்படுவது விடுபட்டுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினருக்கமான சமூகநீதியை உறுதி செய்யவும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் முறைப்படி அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஜாதிப் பட்டியல்களின் அடிப்படையில், துல்லியமான விவரங்களைப் பெறுவது இன்றியமையாதது என கருதப்படுவதால், 2027 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணியில், பட்டியல் ஜாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்குப் பின்பற்றுவதைப் போலவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஜாதி விவரங்களையும் சேகரிக்கும்போது, மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் வெளியிடப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் உள்ளிட்ட அனைத்துப் பிற்படுத்தப்பட்ட ஜாதிப் பட்டியல்களைக் கணக்கெடுப்புச் செயலியில் முன்னரே பதிவேற்றம் செய்து, அதிலுள்ள பெயர்களின் அடிப்படையில் மட்டுமே விவரங்களைச் சேகரிக்கவேண்டும் என்றும், தெளிவற்ற தன்மையை உருவாக்கும் ‘திறந்தவெளிப் பதிவு முறையை’ முழுமையாகக் கைவிடவேண்டும் என்றும் ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.’’ என்ற தீர்மானத்தை அமைச்சர் முன்மொழிந்தார்.
இத்தீர்மானத்தின் மீது அமைச்சர்கள் வன்னிஅரசு, ஷாஜகான், ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், ஆர்.ராஜேந்திரன், கணேஷ்குமார், மாரிமுத்து, செல்லசாமி, நிறைவாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகி யோர் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். பின்னர், இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.
நேற்றைய (7.9.2026) முதலமைச்சரின் உரை யில் இடம்பெற்ற அவதூறான செய்திகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்திய தி.மு.க. உறுப்பினர்களை, அவைக் காவலர்கள் மூலம் அவையை விட்டு, சட்டப்பேரவைத் தலைவர் வெளி யேற்றிய காரணத்தால், தி.மு.க. இந்த நடவடிக்கை யின்போது பங்கேற்க முடியவில்லை.
முன்னதாக, ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோர் விவரங்களைக் குழப்பக் கூடாது என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனித்தீர்மானம் ஒன்றை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
