ஆட்சிகள் மாறும்; காட்சிகள் மாறும்; ஆனால், கொள்கைகள் என்றைக்கும் வெற்றி பெறும்!

11 Min Read

தமிழ் மண், பெரியார் மண் – இந்த மண்ணில் காவிகள்
எந்தக் காலத்திலும் வேரூன்ற முடியாது!
இங்கே எந்த ஆட்சி வந்தாலும், ‘‘பெரியார் கொள்கைதான் எங்கள் கொள்கை’’ என்று சொல்லி விட்டுத்தான் ஆட்சியில் இருக்கலாம்!

சின்னாளப்பட்டி, ஜூலை 1 ‘‘தமிழ் மண், பெரியார் மண், இந்த மண்ணில் காவிகள் எந்தக் காலத்திலும் வேரூன்ற முடியாது. இங்கே  எந்த ஆட்சி வந்தாலும், ‘‘பெரியார் கொள்கைதான் எங்கள் கொள்கை’’ என்று சொல்லி விட்டுத்தான் ஆட்சியில் இருக்கலாம். காரணம் இந்த மண் அவ்வளவு பக்குவப்படுத்தப்பட்ட மண். ஆட்சிகள் மாறும்; காட்சிகள் மாறும்; ஆனால், கொள்கைகள் என்றைக்கும் வெற்றி பெறும்’’  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சின்னாளப்பட்டி: எதிர்நீச்சலில் வென்ற
பெரியார் 80 ஆவது ஆண்டு விழா – மாநாடு

கடந்த 26.6.2026 அன்று மாலை 5 மணியளவில், சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தில், சுயமரியாதைச் சுடரொளிகள் இராமையா, போளி, சண்முகம் நினைவு அரங்கத்தில் நடைபெற்ற ‘‘எதிர் நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆவது ஆண்டு விழா – திறந்தவெளி மாநாட்டில்’’, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:.

அவருக்கும் பயன்படாது;
நமக்கும் பயன்படாது!

அய்யாவைச் சுற்றி நாங்கள் எல்லோரும் நின்று கொண்டிருந்தோம். அப்போது அய்யா அவர்கள், தனது கையிலிருக்கும் பெட்டியைத் திறந்தார்; அதிலிருந்து இரண்டு செருப்பை எடுத்துக் காட்டினார். ‘‘நான்  ரிக்‌ஷாவில் வரும்போது, என்மீது ஒரு செருப்பு வந்து விழுந்தது. அதை நான் பிடித்துக் கொண்டேன். என்ன ஒரு செருப்பு வந்து விழுகிறதே என்று நினைத்தேன். உடனே, யோசனை செய்தேன், எப்படியும், செருப்பைப் போட்டவர் இரண்டு செருப்பு வைத்திருப்பார். ஒரு செருப்பை மட்டும் எறிந்துவிட்டு, இன்னொரு செருப்பை வைத்திருந்தால், அது அவருக்கும் பயன்படாது; நமக்கும் பயன்படாது என்பதினால், ரிக்‌ஷாவைத் திருப்பச் சொன்னேன். இன்னொரு வாய்ப்பை அவருக்குக் கொடுப்போம் என்று நினைத்து, ரிக்‌ஷாவைத் திருப்பச் சொன்னேன். நான் நினைத்த மாதிரியே, இன்னொரு செருப்பையும் என்மீது வீசினார். அந்த செருப்புகள்தான் இவை’’ என்று அவற்றைக் காட்டினார்.

 ‘செருப்பொன்று போட்டால்,
சிலை ஒன்று முளைக்கும்!’

அன்றைக்குச் செருப்புப் போட்ட இடத்தில்,  அதே இடத்தில், பெரியார் சிலை எழுப்பப்பட்டிருக்கிறது. கவிஞர் கருணானந்தம் ஒரு பாட்டு எழுதினார், ‘செருப்பொன்று போட்டால், சிலை ஒன்று முளைக்கும்’ என்று.

முதலமைச்சராக கலைஞர் அவர்கள்தான் அய்யாவின் சிலையைத் திறந்தார். மூன்று அமைச்சர்கள் அந்த விழாவில் இருந்தார்கள். அய்யாவின் முன்னிலையிலே நடைபெற்றது. அப்போது நான் வரவேற்புரையாற்றும்போது சொன்னேன், அதே மைதானத்தில் கூட்டம் நடத்தி, சிலையை திறந்து வைக்கிறோம். ‘‘அய்யா, இந்த ஊர் மக்கள் தங்கள் தவறை உணர்ந்து, பெரிய அளவுக்குக் கழுவாய் தேட வேண்டும் என்று நினைக்கிறார்கள். நன்கொடை கேட்டபொழுதெல்லாம் சிலை அமைப்பிற்குப் பணம் கொடுத்தார்கள். இவ்வளவு பெரிய சிலையைத் திறந்தி ருக்கின்றோம். மிச்சமும் பணம் இருக்கிறது; அந்தப் பணத்தை இயக்கத்திற்குக் கொடுக்கிறோம். ஆகவே, செருப்பு போட்டதற்குச் சிலை வந்தாயிற்று. பாம்பு போட்டதற்கு 10 ஆயிரம் ரூபாய் உங்களுக்குக் கொடுக்கிறோம், மகிழ்ச்சியாக’’ என்று சொன்னேன். அது கடலூர். இது மாதிரி வரிசையாக எதிர்நீச்சல், எதிர்நீச்சல்தான்!

கருப்புச்சட்டைப் படை மாநாடு!

1945 ஆம் ஆண்டு திருச்சியில்  கருப்புச்சட்டை அமைப்பை உருவாக்குகிறார். 1946 ஆம் ஆண்டு கருப்புச்சட்டைப் படை மாநாடு நடந்தது, வைகை ஆற்றங்கரையில். பெரிய பந்தல் போட்டு நடக்கிறது. இயக்கத் தோழர்கள் எல்லோரும் வருகிறார்கள். நடிகர் எம்.ஆர்.இராதா  கலந்து கொள்கிறார். அம்மாநாட்டில்,  அண்ணா அவர்களும் கலந்து கொள்கிறார். நாவலர், பேராசிரியர் எல்லோரும் கலந்துகொள்கிறார்கள். அழகிரி போன்றவர்களும் கலந்துகொள்கிறார்கள்.  முதல் நாள் மாநாடு மிகச் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றது. கருஞ்சட்டைத் தோழர்கள் உற்சாகத்தோடு இருந்தார்கள் – இரண்டாம் நாள் மாநாட்டை எதிர்நோக்கி.

ஆதாரம் இல்லாத ஒன்றை கற்பனையாகச் சொன்னார்கள்!

கருஞ்சட்டைப் படை மாநாடு வெற்றிகரமாக முதல் நாள் நடந்தது என்று சொன்னவுடனே, காலிகளை விட்டு ஏற்பாடு செய்து, மதுரை வைத்தியநாத அய்யர் என்ற  பார்ப்பனர் என்ன செய்தார் தெரியுமா?  பந்தலுக்குத் தீ வைக்கச் சொன்னார். அது மட்டுமல்ல, மாநாட்டிற்கு வந்த கருப்புச் சட்டைத் தோழர்கள் ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று சென்றவர்கள்மீது,  ஒரு தவறான செய்தியை பரப்பினார்கள். ‘‘பெண்களிடம்  தவறாக நடந்து கொண்டார்கள் கருப்புச் சட்டைக்காரர்கள்’’ என்று ஆதாரம் இல்லாத ஒன்றை கற்பனையாகச் சொன்னார்கள். அது உண்மை அல்ல. முதல் நாள் வெற்றிகரமாக நடந்த மாநாட்டுப் பந்தல், இரவில் கொளுத்தப்பட்டது.  உடனே காவல் துறையினர்,  பெரியாரைச் சந்தித்தார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கக்கூடிய அத்துணைப் பேரும் பாதுகாப்பாக அனுப்பப்பட வேண்டும் என்று சொல்லி,  பெரியாரை  கொடைக்கானல் ரோடுக்கு அழைத்து வந்து, காவல் துறையினர் அனுப்பி வைத்தார்கள்.

அடுத்து மதுரையிலேயும், கடலூரிலேயும் இதே போல எதிர்நீச்சல் திறந்தவெளி மாநாடு என்று தொடர்ச்சியாக நடத்தப்பட்டது.

செருப்புத் தோரணம் கட்டி, ‘‘வருக, வருக’’ என்று போட்டிருந்தனர்!

சிவகங்கையில், தந்தை பெரியாரையும், அண்ணாவையும் ஊர்வலமாக அழைத்துக் கொண்டு வருகிறார்கள். காரினுடைய ‘டாப்’ மடக்கப்பட்டு, அண்ணாவும், அய்யாவும் அதில் அமர்ந்து வருகி றார்கள். அன்றைக்கு சிவகங்கையில் இருந்த காங்கி ரஸ்காரர்கள், பிஜேபியினர் மாதிரி நம்முடைய கொள்கையை எதிர்ப்பவர்களாக இருந்தார்கள்.  ஒரு பக்கத்தில் தந்தை பெரியாரை வரவேற்பதற்காக தோரணம் கட்டியிருந்தார்கள், மாவிலைத் தோரணம், தென்னந்தோரணங்களால். இன்னொரு பக்கத்தில், பழைய செருப்புகள், அதிலும் பிய்ந்து போன செருப்புகளை எல்லாம் சேகரித்து, ஊர்வலம் வரக்கூடிய பாதையில் குறுக்கே, செருப்புத் தோரணம் கட்டி, ‘‘வருக, வருக’’ என்று போட்டிருந்தனர்.

நம்முடைய கழகத் தோழர்கள் ஆத்திரப்பட்டு, அதைப் பிய்த்து எறிவதற்காகச் சென்றார்கள். உடனே அய்யா அவர்கள், ‘‘வேண்டாம், வேண்டாம்; ஒன்றும் செய்யாதீர்கள். அது அப்படியே இருக்கட்டும்’’ என்றார்.

செருப்புத் தோரணங்களைக் கட்டியவர்களை வெட்கப்பட வைத்தார்
– தந்தை பெரியார்!

மாநாட்டு மேடையில், அய்யா உரை யாற்றும்போது சொன்னார், ‘‘எனக்காக நம்முடைய தோழர்கள் தோரணம் கட்டியிருந்தார்கள். அந்தத் தோரணங்களைப் பார்த்தபோது எனக்கு  மகிழ்ச்சி இல்லை. இந்த செருப்புத் தோர ணத்தில் வரவேற்பு கொடுத்தார்கள் பாருங்கள், அதுதான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. காரணம், மாவிலை, தென்னந்தோரணங்கள் எங்கே வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால், இவ்வளவு பழைய செருப்புகளை, எங்களுக்காக மெனக்கெட்டு எல்லாரும் தேடியிருக்கிறார்கள் பாருங்கள்’’  என்று சொல்லிவிட்டு,  ‘‘செருப்பை நீங்கள் அலட்சியமாக நினைக்கிறீர்களா? இந்த நாட்டையே 14 ஆண்டுகள்  செருப்புதான் ஆண்டு இருக்கிறது. அதுதான் இராமாயணக் கதையாகும்’’ என்றெல்லாம் சொல்லி, செருப்புத் தோரணங்களைக் கட்டியவர்களை வெட்கப்பட வைத்தார்.

‘‘விஸ்வகர்மா யோஜனா’’ திட்டம்
என்கிற பெயரில்…

அப்படிப்பட்ட ஓர் இயக்கம் இன்றைக்கு வளர்ந்தி ருக்கிறது.  ஏன் வளர வேண்டும்? ஏன் இந்த இயக்கம்? வெறும் பதவிக்காக அல்ல, கொள்கைக்காக! என்ன கொள்கை? மீண்டும் குலதர்மம் எட்டிப் பார்க்கிறது, வேறு பெயரில்! ‘‘விஸ்வகர்மா யோஜனா’’ திட்டம் என்கிற பெயரில், அங்கிருந்து பி.ஜே.பி.,
ஆர்.எஸ்.எஸ். இதைக் கொண்டுவந்து, எந்தக் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தோமோ, அந்தக் குலக்கல்வித் திட்டத்தை மறுபடியும் கொண்டுவரு கிறார்கள் தைரியமாக.

அவர்கள் ஏதோ மிகப்பெரிய அளவுக்குச் சக்கரவர்த்தி மாதிரியும், மற்ற மாநிலங்களை ஆளுபவர்களை எல்லாம் ஏதோ சிற்றரசர்கள், கப்பம் கட்டக்கூடியவர்கள் என்று  நினைத்துக் கொண்டு, ‘‘எங்களுடைய மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான்,  கட்டாய ஹிந்தியை ஏற்றால்தான், உங்களுக்கு நாங்கள் ஒன்றிய அரசின் நிதியைக் கொடுப்போம்’’ என்கிறார்கள். இப்படிச் சொல்கிறவர்கள் யார்? யாருடைய பணம்? மக்களுடைய வரிப்பணம் அல்லவா! இப்படி முதுகெலும்போடு கேட்ட ஆட்சிதான், மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் இருந்த ஓர் ஆட்சி. அது மாதிரி முது கெலும்புமுன் வர வேண்டும். இன்றைக்குப் புதிதாக வந்துள்ள அரசும், ‘எங்களுக்கும் அதே கொள்கைதான்; இருமொழிக் கொள்கைதான்’’ என்று சொன்னால், அதனை வரவேற்கிறோம்.

மாநிலங்களின் உரிமைகள்,
மனித உரிமைகள் என்பது முக்கியம்!

ஆனால், அந்தக் கொள்கையில் எவ்வளவு பிடிப்போடு இருக்கப் போகிறீர்கள்? எவ்வளவு தூரம் நிலைக்கிறீர்கள்? என்ற கேள்வி எல்லாம் மிக முக்கியம்தான். அதற்கு எதிர்நீச்சல் அடிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். மாநிலங்களின் உரிமைகள், மனித உரிமைகள் என்பது முக்கியம் என்பதினால்.

‘‘நாங்கள்
ஈரோடு போனவர்கள்;
நீரோடு போக மாட்டோம்!’’

நெருக்கடி காலத்தில்,  முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியைக் கலைத்தார்கள். அப்போது, கலைஞரைப் பார்த்து, ‘‘உங்கள் ஆட்சியை இந்திரா காந்தி ஏன் கலைத்தார்கள் தெரியுங்களா? என்று காங்கிரஸ்காரர்கள் கேட்டபொழுது,

‘‘தெரியவில்லை, சொல்லுங்கள்’’ என்றார்  கலைஞர் சிரித்துக்கொண்டே!

‘‘நீங்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை என்பதுதான்  உங்கள் மேலே உள்ள குற்றச்சாட்டு’’ என்றார்கள்.

உடனே கலைஞர் சொன்னார்,  ‘‘நாங்கள் ஈரோடு போனவர்கள்; நீரோடு போக மாட்டோம்’’ என்றார்.

எப்போதும் எதிர்நீச்சல் அடித்துத்தான் எங்க ளுக்குப் பழக்கம். பெரியார் மட்டும் எதிர்நீச்சல் அடிக்கவில்லை, அந்த எதிர்நீச்சல் தான் எங்க ளுக்கும் கற்றுக் கொடுக்கப்பட்டது.

நீச்சல் அடிப்பதற்குத் திறமை தேவையில்லை. ஆற்று நீர், இழுத்துப் போய்விடும். ஆனால்,  எதிர்நீச்சல் அடிப்பதுதான் மிகவும் சிரமம்.  அப்ப டிப்பட்ட எதிர்நீச்சல் அடிப்பவர்தான் கொள்கை வீரர். அப்படிப்பட்ட ஓர் எதிர்நீச்சல் அடிப்பதற்கு என்றைக்கும் தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால், இன்றைய காலகட்டத்தில், மீண்டும் வருணாசிரம தர்மப் பாம்பு படமெடுத்து ஆடுகிறது.

எந்த ஆட்சி வந்தாலும்

மீண்டும் மாநில உரிமைகள், மனித உரிமைகள் பறிக்கப்படுவதற்கு முயற்சிகள் பல ரூபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தத் தமிழ் மண், பெரியார் மண், இந்த மண்ணில் காவிகள் எந்தக் காலத்திலும் வேரூன்ற முடியாது. இங்கே  எந்த ஆட்சி வந்தாலும், ‘‘பெரியார் கொள்கைதான் எங்கள் கொள்கை’’ என்று சொல்லி விட்டுத்தான் ஆட்சியில் இருக்கலாம். காரணம் இந்த மண் அவ்வளவு பக்குவப்படுத்தப்பட்ட மண்.

திராவிடம் ஒருபோதும் தேய்ந்து போகாது!

ஆகவேதான், வரலாறு அறியாமல்,  ‘‘திராவிடம் தேய்ந்து போய்விட்டது’’  என்று சிலர் புரியாமல் சொல்கிறார்கள். திராவிடம் ஒருபோதும் தேய்ந்து போகாது. திராவிடம் என்றால், என்னவென்று முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’  என்றால்,  திராவிடம், மானிடம்.

பெரியார் தேவைப்படுகிறார்!
திராவிடம் தேவைப்படுகிறது!

எங்களது பண்பாட்டில், தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என்று சொல்வதற்கு இடமில்லை.  இன்னமும் ஜாதி ஆணவக் கொலைகள்; இன்னமும் ஜாதி வெறியர்கள்; இன்னமும் ஜாதியை முன்னாலே வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால்,  பெரியார் தேவைப்படுகிறார்! திராவிடம் தேவைப்படுகிறது! அது ஒரு தலைமுறையை பொருத்ததே தவிர, ஒரு தேர்தலைப் பொருத்தது அல்ல. அதை நன்றாக, தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவேதான், இளைஞர்கள் வரும்போதே, என்ன பதவி கிடைக்கும்? என்று எந்த இயக்கத்திற்கும் போகாதீர்கள். பதவிக்கு அலைபவர்கள்தான் வேறு கட்சிகளுக்கு ஓடுவார்கள். அதிலும் சில பேரைப் பார்த்தீர்களேயானால்,  இந்தப் பசியிேலயே பயங்கரமான பசி எது என்று சொன்னால், பதவிப் பசிதான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மனுதர்மத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறார்கள்!

‘‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’’ என்று ஒரு பழமொழி உண்டு. பத்து இல்லை, எல்லாமே பறந்து போகும், பதவிப் பசி வந்தால். தமிழ்நாட்டில் இன்றைக்கு அதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், இந்தத் திராவிடர் கழகம், இந்த இயக்கம் இளைஞர்களை அழைக்கிறது, பக்குவப்படுத்துகிறது. இந்த தலைமுறையிலே நமக்குக் கிடைத்த உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டாமா? நமக்குக் கிடைத்த உரிமைகளைப் பறிக்கக்  கூடிய அளவில் இருக்கிறார்களே!  நீட் தேர்வு என்ற பெயரில், நம்முடைய பிள்ளைகளை டாக்டர்களாக  முடியாத அளவிற்குத் தடுக்கிறார்கள். அதே மாதிரி பெண்களுக்கு உரிமை இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு. பெண்களை மீண்டும் பழைய கருப்பனாகவே, பழைய காட்சிகளாக எங்கும் நடைபெற வேண்டும் என்று மனுதர்மத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆகவேதான், நண்பர்களே இந்த இயக்கம், மக்களுக்குத் தேவையான இயக்கம். இது ஒரு மூச்சுக் காற்று. பெரியார் ஏன் தேவை? என்று சொன்னால், அவர்களுக்குத் தெரியாது பெரியாருடைய பெருமையும், அருமையும். சில பைத்தியக்காரர்கள் உளறுவார்கள்; உளறுகிறப் பைத்தியக்காரர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

‘‘மானமும், அறிவும் மனிதருக்கு அழகு’’ – பெரியார்!

மிக நீண்ட காலமாகவே எந்த ஆட்சி வந்தாலும், ‘பெரியாரைத் துணைக்கொள்’,  ‘துணைக்கோடல்’, ‘பெரியாரைப் பிழையாமை’ அவையே மிக முக்கியமானவை. அந்த அடிப்படையை வைத்து  கொள்கைகளைச் சொல்லும்போது, ‘‘மானமும், அறிவும் மனிதருக்கு அழகு’’ என்று சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.  மானம் இருந்தால், அறிவு இருந்தால், நாம் தவறு செய்ய மாட்டோம்.  அறிவிலேயே கூர்மையான அறிவு பகுத்தறிவு. அதைச் சொல்லுவதுதான் இந்த இயக்கம். அதனால்தான் நம்முடைய பிள்ளைகள் இன்றைக்கு நன்றாகப் படித்திருக்கிறார்கள். இன்றைக்கு அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகளாக வந்து கொண்டிருக்கிறார்கள். சமூக நீதிக்காக பிறந்தததுதான் இந்த இயக்கம்.

ஆட்சிகள் மாறும்; காட்சிகள் மாறும்; ஆனால், கொள்கைகள் என்றைக்கும் வெற்றி பெறும்!

காமராசர் காங்கிரஸ்காரராக இருந்திருக்கிறார்கள்.  ஆனால், குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததன் மூலமாக, பெரியார் அவர்களுடைய திட்டத்தைதான் அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்தார். ஆகவே, ஆட்சிகள் மாறும்; காட்சிகள் மாறும். ஆனால், கொள்கைகள் என்றைக்கும் வெற்றி பெறும்! அது நேரடியாகத் தெரியாவிட்டால் கூட, பலருக்கு உணர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கும்.

நீங்கள் எல்லாம் பார்க்க வந்தவர்கள் அல்ல; கேட்க வந்தவர்கள்!

எனவே, தோழர்களே!  நீண்ட நாள்களுக்குப் பிறகு, இந்த சின்னாளப்பட்டியிலே வந்து, உங்களைச் சந்தித்து கொண்டிருக்கிற பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி! நீங்கள் ஆரம்பத்தில் இருந்து வந்து அமர்ந்திருக்கிறீர்கள், கேட்கிறீர்கள்.  நீங்கள் எல்லாம் பார்க்க வந்தவர்கள் அல்ல; கேட்க வந்தவர்கள்.

எங்களுடைய  அழகிரி சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

‘‘தோழனே கல் வீசாதே,

நீ வீசுகிற கல் ஒவ்வொன்றும்

எங்களுக்குப் பயன்படும்’’ என்று சொல்லிவிட்டுச் சொன்னார்,

‘‘ஈட்டி எட்டிய வரையில் பாயும் –

பணம் பாதாளம் வரையில் பாயும் –

ஆனால், பெரியார் இராமசாமியினுடைய கொள்கை இருக்கிறதே,

அது அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையும் பாய்ந்து, அதற்கு அப்பாலும் பாயும்’’ என்று சொன்னார்.

அதனுடைய விளைவுதான், இன்றைக்குத் தலைமுறை தலைமுறையாக நம்முடைய பிள்ளைகள் படித்திருக்கிறார்கள். இது தொடர வேண்டுமா, இல்லையா?

69% இட ஒதுக்கீடு சட்டத்தை மூன்று பார்ப்பனர்களைக் கொண்டு நிறைவேற்றியது திராவிடர் கழகம்!

நம்முடைய சமூக நீதியினால் 69% இட ஒதுக்கீடு, பார்ப்பனர் முதலமைச்சராக இருக்கிற போது, பார்ப்பனர் பிரதமராக இருக்கிற போது, பார்ப்பனர் குடியரசுத் தலைவராக இருக்கிற போது நிறைவேற்றப்பட்ட சட்டம், திராவிடர் கழகத்தாலே என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆகவே, எந்த ஆட்சி வந்தாலும், அந்த ஆட்சியானது,  இந்தக் கொள்கையைச் சொன்னால்தான் நீடிக்க முடியும் என்ற தத்துவத்தை பெரியார் இங்கு ஆழமாக வேரூன்ற வைத்திருக்கிறார்கள்.

‘‘திராவிடம் வெல்லும்,
அதை வரலாறு என்றைக்கும் சொல்லும்!’’

எனவே, இந்த இயக்கத்தைத் தோற்கடித்துவிட்டோம், தோற்கடித்துவிட்டோம்; திராவிடம் தோற்றுவிட்டது என்று நினைக்காதீர்கள்.

‘‘திராவிடம் வெல்லும், அதை வரலாறு என்றைக்கும் சொல்லும், சொல்லும்!’’

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *