சென்னை, செப். 7- விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ததை போல், திமுக ஆட்சியில் அரசு மருத்துவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுத் தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின் போது, மருத்துவர் பணியிடங்களை 2 மடங்காக அதிகரித்தல், மருத்துவர்களின் நீண்டகால ஊதிய கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
கடந்த திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார். அதேபோல், முந்தைய ஆட்சியில் அரசு மருத்துவர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டதற்காக, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிக்க வேண்டும்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணை விரைவில் வழங்கப்படும் எனவும், அரசாணை 354இன் படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
