ராஜபாளையம்: ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’ தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

இணையவழி கையெழுத்து இயக்கம்

 ஓர் இயக்கம் – ஒரு கொள்கை என்று சொன்னால், அது விலை பேசப்படக்கூடாது!
‘‘எந்த விலையை வேண்டுமானாலும் நாங்கள் கொடுப்போம்’’ என்று சொல்லக்கூடியவர்களாக இருக்கக்கூடியவர்கள் தான், அந்த இயக்கத்துக்கு மிகச் சிறப்பான செல்வங்களாக இருக்க முடியும்!
தந்தை பெரியாருடைய இயக்கம், மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டுகிற ஓர் அறிவுக் கொள்கை கலங்கரை வெளிச்சமாகும்!

ராஜபாளையம், செப்.4  ஓர் இயக்கம் – ஒரு கொள்கை என்று சொன்னால், அது விலை பேசப்படக்கூடாது. அந்தக் கொள்கை நிரந்தரமாக ஆக வேண்டுமானால், ‘‘எந்த விலையை வேண்டுமானாலும் நாங்கள் கொடுப்போம்’’ என்று சொல்லக்கூடியவர்களாக இருக்கக்கூடியவர்கள் தான், அந்த இயக்கத்துக்கு மிகச் சிறப்பான செல்வங்களாக இருக்க முடியும். அந்த வகையில்தான் நண்பர்களே, தந்தை பெரியாருடைய இயக்கம், மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டுகிற ஓர் அறிவுக் கொள்கை கலங்கரை வெளிச்சமாகும். அதற்காகத்தான் இந்த இயக்கம், இந்தக் கொள்கை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

Contents
 ஓர் இயக்கம் – ஒரு கொள்கை என்று சொன்னால், அது விலை பேசப்படக்கூடாது! ‘‘எந்த விலையை வேண்டுமானாலும் நாங்கள் கொடுப்போம்’’ என்று சொல்லக்கூடியவர்களாக இருக்கக்கூடியவர்கள் தான், அந்த இயக்கத்துக்கு மிகச் சிறப்பான செல்வங்களாக இருக்க முடியும்! தந்தை பெரியாருடைய இயக்கம், மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டுகிற ஓர் அறிவுக் கொள்கை கலங்கரை வெளிச்சமாகும்!ராஜபாளையத்தில் ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’!தந்தை பெரியார் என்ற மாமனிதர் இல்லாவிட்டால்…சுயமரியாதைச் சுடரொளிகளைப் பற்றிய குறிப்புகள்!எத்தனையோ சூறாவளிகள், எத்தனையோ சுனாமிகளை சந்தித்த இயக்கம்!ஒரு தனி வரலாறு உண்டு!ரகசியமான இயக்கம் அல்ல; வெளிப்படையான இயக்கம் – திறந்த புத்தகம்!மக்கள் பக்கமே நிற்கக்கூடிய இயக்கம்!‘‘எந்த விலையை வேண்டுமானாலும் நாங்கள் கொடுப்போம்!’’பெரியார் உலகம் 100 கோடி ரூபாய் திட்டம்!தந்தை பெரியாரால் பயன்பெறாதவர்கள் யாருமே கிடையாது!

ராஜபாளையத்தில் ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’!

்கடந்த 20.08.2026 அன்று மாலை 5.30 மணிக்கு, விருதுநகர் மாவட்டக் கழகம் சார்பில், ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்! 80 ஆம் ஆண்டு விழா! ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! திறந்தவெளி மாநாடு’’ ராஜபாளையம் மதுரை ராஜா கடை தெருவில், ஏ.எஸ்.ஆர்.தங்கராசா அவர்களின் நினைவாக மேடை அமைக்கப்பட்டு நடைபெற்றது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

தந்தை பெரியார் என்ற மாமனிதர் இல்லாவிட்டால்…

பெருமைக்குரிய ராஜபாளையம் நகரத்தில், இன்றைக்குச் சுயமரியாதை இயக்க வரலாற்றிலே ஓர் அற்புதமான மிக முக்கியமான  நாள் ஆகும். அப்படிப்பட்ட சிறப்புமிக்க இந்த வரலாற்றில்,  நீண்ட காலமாக இந்த இயக்கம் எதிர்ப்பையெல்லாம் சந்தித்து மிகப்பெரிய அளவிலே வளர்ந்து, அதற்கொரு வாய்ப்பாக இன்றைக்கு இந்தக் கூட்டம், இவ்வளவு சிறப்பாக நடைபெறுகின்றது. அதேபோல இவ்வளவு தோழர்கள் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, இந்த இயக்கத்தை மதிப்போடும், மரியாதையோடும் நடத்துவது மட்டுமல்ல, தந்தை பெரியார் என்ற அந்த மாமனிதர் இல்லாவிட்டால், ‘மானமும் அறிவும்’ நமக்கு வந்திருக்கக்கூடிய வாய்ப்பு இருக்காது என்பதை எண்ணித்தான், நன்றி காணிக்கையாக இன்றைக்கு எங்களை எல்லாம் ஓர் இன்ப அதிர்ச்சியிலே, ஆக்கி இருக்கிறார்கள். இதற்கு உரியவர்களான மாவட்டத் தலைவர் தோழர் திருப்பதி அவர்களும், செயற்குழு உறுப்பினர்களும், அவர்களுக்கு அன்போடு என்றைக்கும் ஆதரவு தரக்கூடிய அனைத்துக் கட்சிப் பெருமக்கள், கட்சிகளுக்கு அப்பாற்பட்டிருக்கக்கூடிய பெரியோர்கள், தோழர்கள் எல்லோருக்கும் என்னுடைய முதற்கண் அன்பான வணக்கம் – வரவேற்புத்  தெரி விக்கின்றேன்.

சுயமரியாதைச் சுடரொளிகளைப் பற்றிய குறிப்புகள்!

இது ஒரு பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  நிகழ்ச்சி. சாதாரணமான நிகழ்ச்சி அல்ல; எத்தனையோ பொதுக்கூட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், இது ஒரு திறந்தவெளி மாநாடாக நடைபெறுகிறது. இங்கே சுயமரியாதைச் சுடரொளிகளைப் பற்றி குறிப்புகளை வைத்திருக்கிறார்கள். தோழர்களே, இந்த இயக்கம், இந்த ஊரைப் பொறுத்தவரையிலே தந்தை பெரியார் அவர்கள் காலத்திலிருந்து, சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து எத்தகைய எதிர்ப்புகளை எல்லாம் சந்தித்திருக்கிறது; எவ்வளவு  எதிர்நீச்சல் போட்டிருக்கிறது; எவ்வளவு அதிகமான அளவுக்குச் சங்கடங்களை, சோதனைகளைத் தாண்டி இருக்கிறது என்பதை எல்லாம் மிகத் தெளிவாக நாங்கள் இந்த மாநாட்டில், திறந்தவெளி மாநாடு என்ற பெயராலே நடைபெறவிருக்கின்ற மாநாட்டில் சொல்லவிருக்கிறோம். இங்கே எல்லோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

எத்தனையோ சூறாவளிகள்,
எத்தனையோ சுனாமிகளை சந்தித்த இயக்கம்!

இதோ, நம்முடைய நினைவில்,  உடலால் மறைந்தா லும் உணர்வால் நிறைந்திருக்கிற சுயமரியாதைச் சுடரொளிகளான தோழர்களுடைய கடும் உழைப்புதான் இந்த மேடையை அமைத்திருக்கிறது. அவர்கள் கடுமையான சோதனைகளை, வேதனைகளை, துன்பங்களை, அவமானங்களை, துயரங்களை அத்தனையும்  தாங்கி, அதற்குப் பிறகு, பாதை போட்டார்கள். அவர்கள் போட்ட பாதையிலேதான் இத்தனைப் பயணங்கள். எத்தனையோ சூறாவளிகள், எத்தனையோ சுனாமிகள், எவ்வளவோ சங்கடங்கள் – இவற்றையெல்லாம் தாண்டி, இன்றைக்குக் குளுமையான தென்றல் வீசக்கூடிய அளவிற்கு இவ்வளவு பெரிய வாய்ப்பைத் திருப்பதி போன்ற, நம்முடைய சிவக்குமார் போன்ற, கோவிந்தனைப் போன்ற இன்னும் பல தோழர்கள் உதாரணத்துக்கு இவர்களைச் சொல்லுகிறேன், நேரத்தின் நெருக்கடியின் காரணமாக எல்லோரையும் நான் விளித்ததாகக் கொள்ள வேண்டும்.

ஒரு தனி வரலாறு உண்டு!

இந்த காலத்தில், மிகப்பெரிய அளவுக்குத் தோழர்களின் உணர்ச்சிகளைப் பார்க்கிறேன். பழைய தோழர்கள் – புதிதாக வந்த தோழர்களுக்கு, இந்தப் பெயர்களே தெரியாது. நான்தான், பல பேருக்கு நினைவூட்டி இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும், பழைய தோழர்கள் அடித்தளமிட்டவர்கள். இந்த இயக்கத்துக்கு ஒரு தனி வரலாறு உண்டு. இந்தக் கூட்டத்தினுடைய தலைப்பே ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்  80 ஆண்டுகள்’’ என்பதுதான்.  இந்த மாநாட்டி னுடைய மய்யக் கருத்து அதுதான்.

ரகசியமான இயக்கம் அல்ல; வெளிப்படையான இயக்கம் – திறந்த புத்தகம்!

எவ்வளவு பெரிய எதிர்ப்புகளைத் தாண்டி இருக்கிறோம் என்பதை எல்லாம் நினைவூட்டி, ஒரு கொள்கை, அந்தக் கொள்கையைப் பரப்பக் கூடியதற்கு ஒரு கட்டுப்பாடான இயக்கம். அதற்குரியவற்றை  ஆரம்பத்திலே புரிந்து கொள்ளாத மக்களை, புரிய வைக்கக்கூடிய வாய்ப்பைப் தொடர்ந்து உருவாக்கி, அந்த மக்களே அதனைப் பாராட்டக்கூடிய அளவிற்கு, வாய்ப்பைத் தரக்கூடிய ஒன்று.  துளி கூட இதில் இரத்தம் சிந்தாமல், அதாவது வன்முறை இல்லாமல், இரத்தம் சிந்தாமல் கூட என்பதில்லை; இரத்தம் சிந்தி இருக்கிறோம். ஆனால், வன்முறை இல்லாமல் இந்த இயக்கம், ரகசியமான இயக்கமாக இல்லை; வெளிப்படையான ஓர் இயக்கமாக, திறந்த புத்தகமாக,  அன்றும் – இன்றும்– என்றும் வளரக்கூடிய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதை இயக்கம்.

மக்கள் பக்கமே நிற்கக்கூடிய இயக்கம்!

இதனுடைய தனித்தன்மை, உலகத்திலேயே இப்படிப்பட்ட ஒரு தன்மை, பதவி ஏற்காமல், பதவியை நாடாமல், பதவிப் பக்கம் திரும்பிப் பார்க்காமல், மக்கள் பக்கமே நின்று கொண்டிருக்கக்கூடிய அந்த வாய்ப்புப் பெற்ற பெருமைக்குரியது. அதே நேரத்தில், யார் பதவியில் இருந்தால், மக்களுக்கு நலம் ஏற்படும்; கொள்கைகளுக்கு உரம் ஏற்படும்; இந்தக் கொள்கைகள் மூலமாக சமூக மாற்றம் எப்படி ஏற்படும் என்பதை எல்லாம் விளக்குகின்ற வகையிலேதான் எங்களுடைய பயணங்கள் அமைந்திருக்கும்.

தேர்தல்வாதிகள், அரசியல்வாதிகள் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திப்பதை விட, அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திப்பார்கள். ஆனால், திராவிடர் கழகம், அதனுடைய அரசியல் பிரிவாக இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும், வெறும் தேர்தலைப் பற்றி மட்டும் யோசிக்காது. அடுத்த தேர்தல் முக்கியம்தான் தான் என்றாலும், அதைவிட முக்கியம் – தெளிவானது, அடுத்த தலைமுறை. இந்தத் தலைமுறைக்கு இல்லாத புது உரிமை வரவேண்டும்.

‘‘எந்த விலையை வேண்டுமானாலும்
நாங்கள் கொடுப்போம்!’’

பெரியார் அவர்கள், தன்னந்தனியராக இந்த இயக்கத்தை ஆரம்பித்தார்கள். எதற்காக ஆரம்பித்தார்? தலைமைக்காகவா? அல்லது இருக்கின்ற கட்சியில், தனக்கு உரிய பெரிய பதவி வரவில்லை; இதைவிட பெரிய பெரிய பதவி பெறவேண்டும் என்பதற்காகவா? அல்ல; எனவேதான், எதிர்நீச்சல் அடித்த பெரியார் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்; விளக்க வேண்டும். அதன் மூலமாக இன்றைக்கு திசை தடுமாறுகிற இளைஞர் உலகம் இருக்கிறதே, அந்த இளைஞர் உலகம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால், ஓர் இயக்கம் ஒரு கொள்கை என்று சொன்னால், அது விலை பேசப்படக்கூடாது. அந்தக் கொள்கை நிரந்தரமாக ஆக வேண்டுமானால், ‘‘எந்த விலையை வேண்டுமானாலும் நாங்கள் கொடுப்போம்’’ என்று சொல்லக்கூடியவர்களாக இருக்கக்கூடியவர்கள் தான், அந்த இயக்கத்துக்கு மிகச் சிறப்பான செல்வங்களாக இருக்க முடியும். அந்த வகையில்தான் நண்பர்களே, தந்தை பெரியாருடைய இயக்கம், மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டுகிற ஓர் அறிவு கொள்கை கலங்கரை வெளிச்சமாகும். அதற்காகத்தான் இந்த இயக்கம், இந்தக் கொள்கை. அப்படிப்பட்ட இந்தக் கொள்கையை விளக்குவதற்காகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தக் கூட்டம். இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கின்ற அனைத்துத் தாய்மார்கள், பெரியோர்கள், நண்பர்கள், தோழர்கள் உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் உலகம் 100 கோடி ரூபாய் திட்டம்!

இந்த நிகழ்ச்சியை நான் எண்ணிப் பார்க்கிறேன்; தேதி கொடுத்த போது கூட, நான் நினைக்கவில்லை; விருதுநகர் மாவட்டத்தில இவ்வளவு பெரிய எழுச்சி; அதிலும் குறிப்பாக, ராஜபாளையத்தில், விருதுநகர் மாவட்டத்தில் தோழர் நல்லதம்பி, ஆதவன்,  திருப்பதி எல்லோரும் சேர்ந்து, ஏறத்தாழ ஒரு அய்ந்து, ஆறு மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நிதியளிப்புக் கூட்டத்தை விருதுநகரில் நடத்தி, நான்கு லட்சம் ரூபாயை அவர்கள் தந்தார்கள். இது முதல் தவணை என்று அன்றைக்கே சொன்னார்கள். திருச்சி சிறுகனூரில்,  பெரியார் உலகம் 100 கோடி ரூபாய் திட்டம்.  100 கோடி ரூபாய் திட்டம் என்றால், ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’ – பெரியாருடைய அந்தச் சிந்தனைகள் உலகத்தை எப்படி ஆட்படுத்தி இருக்கின்றன? சமூகத்தை எப்படி  வளப்படுத்தி இருக்கின்றன? மனிதர்களை எப்படி நெறிப்படுத்தி இருக்கின்றன? என்பதை எல்லாம் எடுத்துச் சொல்லக்கூடிய வகையிலே, உள்ளே நுழைந்து வெளியே வருவதற்கு, ஒரு நாள், இரண்டு நாள் போதாது. அவ்வளவு பெரிய அம்சங்களை எல்லாம் பெரிய நகரங்களையே உருவாக்குகிறோம். அந்தத் திட்டம், இன்றைக்கு மூன்றில் ஒரு பாகம்  நடந்து முடிந்து கொண்டிருக்கிறது.

தந்தை பெரியாரால் பயன்பெறாதவர்கள்
யாருமே கிடையாது!

தந்தை பெரியார் அவர்களுடைய 150 ஆவது பிறந்தநாள் விழா இன்னும் இரண்டு ஆண்டுகளில் வருகிறது. அதற்குள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதனுடைய பணிகள் முடியும். அப்படிப்பட்ட அந்த திட்டத்திற்கு, நாங்களே எதிர்பார்க்கவில்லை; ‘‘தேதி வாங்கினார், இன்றைக்கு இங்கே  35 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்’’ என்று சொன்னால், ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாவற்றையும் ஆதாரத்தோடு கொடுத்தார்கள். அதுமட்டுமல்ல, மனமுவந்து ஒவ்வொருத்தரும் கொடுத்திருக்கிறார்கள். ஏனென்றால் தந்தை பெரியாரால் பயன்பெறாதவர்கள் யாருமே கிடையாது. அந்த நன்றி உணர்ச்சியினுடைய அடையாளம்தான் இது. அவர்கள் கடவுள் நம்பிக்கை யாளர்களாகக் கூட இருப்பார்கள். புராண நம்பிக்கையாளராக இருப்பார்கள். ஆனால், பெரியார் இல்லை என்றால், என்னுடைய பிள்ளை படித்திருக்காது; பெரியார் இல்லை என்றால், எங்கள் உறவுக்காரர் டாக்டராக இருக்க முடியாது; பெரியார் இல்லை என்றால், எங்களுடைய பிள்ளை வக்கீலாக ஆகி இருக்க முடியாது; ‘‘பெரியார் இல்லை என்றால், நாங்கள் மானமும், அறிவும் பெற்றிருக்க முடியாது’’ என்ற நன்றி உணர்ச்சி இருக்கிறதே, அந்த நன்றி உணர்ச்சி, பலபேரை உந்தி வந்திருக்கிறது. ‘‘அய்யாதான் இன்றைக்கு எங்களை மனிதர்கள் ஆக்கினார். அதற்கு நாங்கள் ஒரு நன்றி காணிக்கை செலுத்த வேண்டாமா?’’ என்ற உணர்வோடு, நம்முடைய தோழர்கள் சென்று கேட்ட இடங்களில் எல்லாம் தவறாமல் நன்கொடை தந்திருக்கிறார்கள். அதற்காக எங்களுடைய அன்பான வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *