மேட்டூர், செப். 2- தமிழ்நாட்டில் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று (1.9.2026) தண்ணீரைத் திறந்து வைத்தார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைப்பது இது முதல் முறையாகும்.
மேட்டூர் அணை தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. அணை முழுக் கொள்ளளவை எட்டும் போது 93.47 டிஎம்சி நீரை சேமிக்க முடியும். அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், 16 மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் மேட்டூர் அணை முக்கிய ஆதாரமாக உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி நடைபெறுகிறது. ஆண்டு தோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை 230 நாட்களுக்குப் பாசனத்துக்கு மொத்தம் 330 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. முழுமையான பாசனத்துக்கு மேட்டூர் அணையில் குறைந்தபட்சம் 90 அடி நீர் இருப்பு இருக்க வேண்டும். நடப்பாண்டில் போதிய நீர் இல்லாததால் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதற்கிடையில், கருநாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டிய நிலையில், நேற்று முதல் 45 நாட்களுக்கு டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் நேற்று சேலம் வந்த முதலமைச்சர் விஜய், பின்னர் சாலை மார்க்கமாக மேட்டூர் அணைக்குச் சென்றார். காலை 11.35 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அணையின் பிரதான 8 கண் மதகுகளை இயக்கி தண்ணீரைத் திறந்து வைத்தார். அணையில் இருந்து சீறிப் பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் நெல் தானியங்களையும் மலர்களையும் தூவி வரவேற்றார்.
முதல் கட்டமாக வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, படிப்படியாக 7,000 கன அடியாக அதிகரிக்கப் பட்டது. அணையின் 93 ஆண்டு கால வரலாற்றில் கால தாமதமாகத் தண்ணீர் திறக்கப்படுவது இது 62ஆவது முறையாகும். செப்டம்பர் மாதத்தில் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படுவது 4ஆவது முறையாகும்.
அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து சுரங்க மின் நிலையம், அணை மின் நிலையம் மற்றும் 7 கதவணைகள் மூலம் மின் உற்பத்தி தொடங்கியது.
நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன், நீர்வளத் துறை செயலர் பிரசாந்த் வடநரே, ஆட்சியர் இளம்பகவத், எம்எல்ஏக்கள் சிவக்குமார், லட்சுமணன், பழனிவேல், நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ஜெயக்குமாரி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
