திருத்தணி, செப். 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆக. 26ஆம் தேதிமுதல் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று வந்தது.
இதன் நிறைவுப் பொதுக்கூட்டம் 30.8.2026 அன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.சண்முகம் பங்கேற்றுப் பேசியதாவது:
வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு ஆட்சியாளர்களுடைய தவறான அரசியல், சமூக பொருளாதார கொள்கைகளைத் தவிர வேறு காரணங்கள் கிடையாது.
தமிழ்நாடு மட்டு மல்லாமல், நாடு முழுவதும் விலை ஏற்றத்தால் பொருட்களை வாங்க முடியாத நிலையில் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அண்மையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, “ரேசன் அரிசியை வாங்கி ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனமாக வழங்குகின்றனர். யாரும் சோறு செய்து சாப்பிடவில்லை” என்றார்.
மற்றொரு அமைச்சரோ, “ரேசன் அரிசியில் இட்லி, தோசை செய்து சாப்பிடுகிறார்கள்” என்றார். தமிழ்நாட்டு மக்களின் முக்கிய உணவே அரிசிதான்.
ரேசன் கடைகளில் வழங்கும் அரிசியை மக்கள் யாரும் சாப்பிடுவதில்லை என்று சட்டப்பேரவையில் தவறான காரணங்களைச் சொல்லி ரேசன் கடையில் இனி அரிசி போட மாட்டோம் என்ற முடிவை நோக்கி அரசு போகிறதோ என்ற அச்சம் உள்ளது. இலவச அரிசியை நம்பித்தான் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. ரேசன் அரிசி மீது கை வைத்தால் தவெக ஆட்சி பொறுப்பை இழக்கும் என்றார்.
