சென்னை, செப். 1- பன்னாட்டு சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதில், சமையல் எரிவாயு உருளை விலையானது ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியன்றும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், புதிய மாதத்தின் முதல் நாளான இன்று (செப்டம்பர் 1), சமையல் எரிவாயு உருளைகளின் புதிய விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
வணிக பயன்பாட்டு உருளை (19 கிலோ): சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான உருளை விலை ரூ.10.50 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக உருளை (14.2 கிலோ): பொதுமக்களின் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட உருளை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது வழக்கம்போல் ரூ.957.50-க்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வணிக பயன்பாட்டு உருளையின் விலை உயர்ந்துள்ளதால், உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் மத்தியில் சற்று கூடுதல் செலவினம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
