பிற்படுத்தப்பட்டோர் மானியக் கோரிக்கை கொள்கை
விளக்கக் குறிப்பேட்டில் மீண்டும் பெரியார், அம்பேத்கர் பெயர்!
சென்னை, ஆக. 31- பிற்படுத்தப் பட்டோர் மானிய கோரிக்கை-கொள்கைக் குறிப்பேட்டில் இடம்பெற்ற இட ஒதுக்கீடு வரலாற்றுக் குறிப்பில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பண்டித ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் ஏன் நீக்கப் பட்டிருக்கின்றன? என்று கடும் கண்டனம் எழுந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், அதற்குத் தானே பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினரு மான சிந்தனைச் செல்வன் தனது சமுக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
அமைச்சர் பொறுப்பேற்பு
“மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களின் ஊடக சந்திப்பை காணொலி வாயிலாகக் கண்டேன். இட ஒதுக்கீடு தொடர்பான வரலாற்றுக் குறிப்பும் நம் கொள்கைத் தலைவர்களின் பெயர்களும் தம் துறையின் அரசுக் கொள் கைக் குறிப்பில் விடுபட்டமைக்கு அவரே பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். அவரது பொறுப்புணர்வுக்கும், பெருந்தன்மைக்கும் நன்றி.
ஆயினும் தவறுக்கு காரணமானவர் களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதே எதிர்காலத்தில் இத்தகையத் தவறுகள் அல்லது கொடுமைகள் நிகழா மல் தடுக்கும் வழியென்பதை அன்புடன் சுட்டிக் காட்டிட கடமைப்பட்டுள்ளேன்.
எது எவ்வாறாயினும் தவறு சுட்டிக் காட்டப்பட்டவுடன் அதை ஏற்றுக்கொண்ட தோடு திருத்தவும் முன்வந்த மாண்புமிகு அமைச் சருக்கு மீண்டும் எமது நன்றியை உரித்தாக்குகிறேன்.
ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்டோருக்கு நன்றி
வரலாற்று இருட்டடிப்பை எதிர்த்து கருத்தியல் களத்தில் உடன் நின்ற திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி உள்ளிட்ட தலைவர் கட்கும், தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி‘‘ என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சனிக்கிழமை அன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், மானியக் கோரிக்கை கொள்கைக் குறிப்பேட்டில் தந்தை பெரியார். பாபா சாகேப் அம்பேத்கர், பண்டித நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்ததைக் கண்டித்திருந்ததுடன், கடந்த ஆட்சியில் அண்ணல் அம்பேத்கர் பெயர் சேர்க்கப்படுவதற்காகத் தான் மேற்கொண்ட முயற்சிகளைக் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
தி.மு.க. ஆட்சியில்…
“கடந்த முறை நான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட துறையின் கொள்கைக் குறிப்பேட்டை வாசித்த போது அந்த கொள்கைக் குறிப்பேட்டிலும் தந்தைப்பெரியாரின் பெயர் இடம் பெற்றதைப்போல புரட்சி யாளர் அம்பேத்கரின் பங்களிப்பு குறிப்பிடப் படவில்லை.
இதோ அரசின் அந்த கொள்கை குறிப்பு: (பக்கம் 6 மற்றும் 7)
தமிழ்நாட்டில் 1921ஆம் ஆண்டு முதல் இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. மாநிலத்தின் மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 88 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளனர். இட ஒதுக்கீட்டின் அளவு பல்வேறு காலங்களில் உயர்த்தப்பட்டது. தற்போது உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீடு மாநிலத்தில் 1990 ஆம் ஆண்டு முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய அரசமைப்பு சட்டம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் வகுப்பு வாரி பிரதிநிதித்துவ அரசாணை என்று அழைக்கப்பட்ட பல்வேறு பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் ஆணை செல்லாது என உச்ச நீதிமன்றத்தால் 1951 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் வழி நடத்திய பெருந்திரளான எதிர்ப்பு ஊர்வலங்கள் மற்றும் கண்டனக் கூட்டங்களின் விளைவாக அரசமைப்பு சட்டத்தில் பிரிவு 15 (4) சேர்க்கப்பட்டு முதல் அரசமைப்பு சட்டத் திருத்தத்திற்கு வழி வகுத்தது. பல நூற்றாண்டுகளாக அநீதிக்கு உள்ளாக்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மக்கள் கல்வி சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கான சமூக நீதிப் போராட்டத்தில் இது ஒரு வரலாற்றுச் சாதனை என போற்றப்படுகிறது.”
இந்தப் பக்கங்களை வாசித்த போது ஏன் புரட்சியாளர் அம்பேத்கரின் பங் களிப்பை குறிப்பிட வில்லை என துறைச் செயலாளரிடமும் அன்றைய துறை அமைச்சர் அண்ணன் ராஜகண்ணப் பனிடமும் கேள்வி எழுப்பினேன். மனுவாக வேண்டு கோள் விடுத்தேன்.
ஆசிரியர் கி.வீரமணி
கொடுத்த ஆதாரம்
தோழர் ரவிக்குமார், தோழர் கவுதமசன்னா, தோழர் எஸ் வி ராஜ துரை ஆகியோரை சந்தித்து வரலாற்றுத் தகவல்களை சேகரித்தேன். இன்னொரு முயற்சியாக ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களை சந்தித்தேன். அவர் தான் வெளியிட்ட மண்டல் கமிஷன் தீர்ப்பு குறித்த நூலை என்னிடம் தந்து அதை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கும்படி வழி காட்டினார். அந்த தீர்ப்புரையில் நீதிபதிகள் இந்த வரலாற்று உண்மைகளை பதிவு செய்திருந்தனர்.
முழுத் தகவலையும் சேகரித்தத் தெம்பில் சட்டப்பேரவையிலும் பேசினேன். மூன்றாண்டுகால தொடர் முயற்சிகள் பலன் தந்தது. ஒரு வழியாக அந்த கொள்கைக் குறிப்பேடு திருத்தப்பட்டது.
திருத்தப்பட்டு கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசின் கொள் கைக்குறிப்பேட்டில்….பக்கம் 9
“1951-இல் இட ஒதுக்கீடு தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த வகுப்புவாரி பிரதி நிதித்துவ அரசாணை உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் வழி நடத்திய எதிர்ப்பு ஊர்வலங்கள் மற்றும் கண்டனக் கூட்டங்களின் விளை வாக அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தில் பிரிவு 15(4) சேர்க்கப்பட காரணமாக அமைந்தது. பாரதப்பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் முன்னெடுத்து இந்த முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வழி வகுத்தனர். இந்த திருத்தம் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்கான விதிகளையும் இயற்ற வழிவகுத்தது” என்று திருத்தம் மேற் கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
