‘நீட்’ தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை வரவேற்று கலந்து கொள்ளும் தலைவர்கள் அறிக்கை!

சென்னை, மே 15 இந்தியா முழுவதும் நீட் தேர்வை முற்றாக இரத்து செய்ய வேண்டி 16.5.2026 சனிக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும், பொறுப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர். இது குறித்து கட்சித் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கைகள் பின்வருமாறு:

தி.மு.க.

மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 16.05.2026 ஆம் தேதி திராவிடர் கழகம் ஒருங்கிணைக்கும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செய்தித் தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங் கோவன் கலந்து கொள்வார் என்று தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுக

மருத்துவக் கல்விக்கான தகுதித் தேர்வு என்ற பெயரில் ‘நீட்’ என்ற தேர்வை ஒன்றிய அரசு திணித்து அதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் பலநூறு மாணவ, மாணவியர்கள் உயிர்ப்பலி ஆகியுள்ளனர். இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதை ஒன்றிய அரசே ஏற்றுக் கொண்டு இந்த ஆண்டு நீட் தேர்வை இரத்து செய்துள்ளது. கடந்த காலத்தில் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளும் முறைகேடாகவே நடந்து அதன் காரணமாக மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

எனவே நீட் தேர்வினை முற்றாக இரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் வலியுறுத்தும் தீர்மானத்தை இன்று நடைபெற்ற மறுமலர்ச்சி திமுக நிர்வாகக் குழு நிறைவேற்றியுள்ளது.

இதனையே வலியுறுத்தி இந்தியா முழுமையும் நீட் தேர்வினை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் திராவிடர் கழகம் 16.05.2026 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளதை மறுமலர்ச்சி தி.மு.கழகம் வரவேற்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்களும், சமூகநீதியில் அக்கறை கொண்டுள்ள இளைஞர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

இளநிலை மருத்துவக் கல்விக்கான ( எம்பிபிஎஸ்) நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த மே -03 ஆம் நடைபெற்றது. ஆனால் அந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே கசிந்தது என்னும் புகாரினையொட்டி அந்தத் தேர்வு செல்லாதென கடந்த மே-13 அன்று தேசியத் தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. அதனையடுத்து அதேதேர்வு ஜூன்21 அன்று மீண்டும் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வே வேண்டாமென தொடக்கத்திலிருந்தே விசிக வலியுறுத்தி வருகிறது. அரியலூர் அனிதாவைப் போல ஏராளமான இளம் தலைமுறையினர் நீட் தேர்வால் பலியாகியுள்ளனர். அத்துடன் இத்தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதும் தொடர்கிறது.

தற்போது நடைபெற்ற வினாத்தாள் கசிவு என்னும் முறைகேட்டினால், நடந்த தேர்வு செல்லாதென அறிவிக்கும் சூழல் எழுந்துள்ளது. இதனால் தேசம் முழுவதும் 22இலட்சம் மாணவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.  இந்நிலையில்,  இதனைக் கண்டித்தும், நீட் தேர்வு முறையை முற்றாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்தியும் தமிழகம் தழுவிய அளவில் திக ஒருங்கிணைக்கும் ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கிறது.  சென்னையில் விசிக சார்பில் நான் கலந்து கொள்கிறேன்.

இயக்கத் தோழர்கள் அவரவருக்கான சொந்த மாவட்டங்களில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 16.05.2026 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி பங்கேற்கும்.

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய ‘நீட்’ தேர்வு முறை தமிழ்நாடு மாணவர்களை கடுமையாக பாதித்து வருகிறது. அரியலூர் அனிதா தொடங்கி பல மாணவ, மாணவியர் உயிரைப் பறித்து வரும் துயரமும் தொடர்கிறது

இந்த நிலையில் அண்மையில் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்து விட்டதாகக் கூறி, நடந்து முடிந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, 22 லட்சத்துக்கும் அதிகமானோர் எதிர்காலத்தை நிலை குலைத்துள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் கழகம் ஒருங்கிணைத்து 16.05.2026 சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கலந்து கொள்ளும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் அறிக்கை விடுத்துள்ளார்.

சிபிஅய்(எம்)

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் 16.05.2026 அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஅய்(எம்) பங்கேற்பு!!

ஏழை, எளிய, மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை தமிழ்நாட்டில் முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. சமீபத்தில் கூட இத்தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று பல லட்சக்கணக்கான மாணவர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். நீட் தேர்வை நாடு முழுவதும் ரத்து செய்ய வேண்டும், மருத்துவப் படிப்புக்கான தேர்வுமுறையை முன்புபோல் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமே ஒப்படைக்க வேண்டும் என வலுவான குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், நீட் தேர்வை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் 16.05.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆதரவு தெரிவிப்பதுடன், மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், தோழர்கள் கலந்து கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு சிபிஅய் (எம்) கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

சமூக நீதிக்கு எதிரான நீட் என்னும் கொடுமையை ஒழிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மேலும், சமூகநீதி சக்திகளுடன் இணைந்து நீட் என்ற தேர்வு திணிப்பை எதிர்த்து இ.யூ.முஸ்லிம் லீக் பல்வேறு நிலைகளில் தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் 16.05.2026 சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றோம். நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை நிலையச் செயலாளர் கே.எம்.நிஜாமுதீன் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்ற உள்ளார் என்பதையும், சென்னை மாவட்டத்தில் உள்ள இ.யூ.முஸ்லிம் லீகினர் ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாகப் பங்கேற்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்பதையும் மிகுந்த அன்புடன் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.   இவ்வாறு இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

மே 16, 2026 (சனிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் “நீட்”  ரத்து கோரி நடக்கும் ஆர்பாட்டத்தில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பங்கேற்கும்.

சென்னையில் நடக்கும் ஆர்பாட்டத்தில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு பங்கேற்கிறார். சென்னையில் உள்ள அமைப்பினர் பங்கேற்பாளர்கள். மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அமைப்பைச் சார்ந்தவர்கள் பங்கேற்பாளர்கள் என்று அவ்வமைப்பின் தலைவர் முனைவர் பி. இரத்தின சபாபதி தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *