சென்னை, ஆக. 29- திமுக தலைவர்களை களங்கப்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களை சிபிஅய் விசாரணைக்கு மாற்றக் கோரி திமுக சட்டப்பிரிவு துணைச் செயலாளர் சந்திரபோஸ் தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எக்ஸ், முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், யூடியூப் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் திமுகவையும், அதன் தலைவர்களையும் களங்கப்படுத்தும் வகையில் ஏஅய் மூலம் உருவாக்கப்பட்ட ஒளிப்படங்கள், காணொலிக் காட்சிகளை வெளியிட்டு உள்ளதாக பல்வேறு இணையப் பக்கங்களுக்கு எதிராகவும், வாய்ஸ் ஆஃப் காமன், ரூட், போன்ற அமைப்புகளுக்கு எதிராகவும் பல்வேறு காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட 19 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனக்கூறி, திமுக சட்டப்பிரிவு துணைச் செயலாளர் சந்திரபோஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில்,சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட அவதூறு பதிவுகள் நீக்கப்படலாம் என்பதால் புகார்கள் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காதது பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுவே தவெகவின ருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யும் காவல்துறையினர் திமுகவினர் அளித்த புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யாததால், இந்த புகார்களை சிபிஅய்-க்கு அனுப்பி நியாயமாக, சுதந்திரமான விசாரணையை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறையினருக்கும், வாய்ஸ் ஆஃப் காமன், ரூட் ஆகிய அமைப்புகளுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
காமராஜர் பெயரில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!
விருதுநகரில் செப்.17இல்
தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்
சென்னை, ஆக. 29- காமராஜர் பெயரிலான விரிவாக்க காலை உணவுத் திட்டத்தை விருதுநகரில் செப்டம்பர் 17ஆம் தேதி முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.
கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் 1.45 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றனர்.
அதன்பிறகு, இந்தத் திட்டம் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அதன்பின்னர், 19.34 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
தற்போது, த.வெ.க. அரசு புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், இத்திட்டத்தை 6 முதல் 8ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 17ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்வதாக அறிவித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், திட்டத்திற்கான பெயரையும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்று மாற்றினார்.
இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 15.14 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்திற்காக ரூ.343 கோடி நிதி செலவிடப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டில் (2026-2027) ரூ.217 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் கடந்த மாதம் (ஜூலை) 22ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தை செப்டம்பர் 17-ந் தேதி விருதுநகரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கிவைக்க இருக்கிறார்.
இதற்காக விருதுநகருக்கு நேரில் செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய், காமராஜருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் படித்த கே.வி.எஸ்.நடுநிலைப் பள்ளியில், விரிவாக்க காலை உணவு திட்டத்தை தொடங்கிவைக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டு வருகின்றன.
அதிகாரிகள் ரூ.2.88 கோடி ‘வசூல்’! ஆட்சியர் முன் விவசாயிகள் தர்ணா
தஞ்சாவூர், ஆக.29- வண்டல் மண் எடுக்க நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் 2.88 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றுள்ளதாகக் கூறி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ரேவதி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஒரத்தநாடு வட்டாரத்தில் வண்டல் மண் எடுப்பதற்காக 30 யூனிட் அளவுக்கு விவசாயிகளிடம் நீர்வளத்துறை அதிகாரிகள் 10,000 ரூபாயும், தாசில்தார் 10,000 ரூபாயும் லஞ்சம் கேட்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.
இது தொடர்பாகப் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், லஞ்சம் கொடுத்தால்தான் மண் அள்ள அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தூண்டுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு விவசாய சங்கக் கூட்டியக்க மாநில துணைத் தலைவர் சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் ஆட்சியர் ரேவதி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய சுகுமாறன், “ஒரத்தநாடு வட்டாரத்தில் 72 இடங்களில் மண் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 நாட்களில் மட்டும் 2.88 கோடி ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கிக்கொண்டு மண் அள்ள அனுமதித்தாலும், அளவுக்கு மீறி அள்ளுவதாகக் கூறி காவல்துறை மூலம் வருவாய் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் விவசாயிகளைத் தடுத்து வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.
