சென்னை, ஆக.20- சட்டப்பேரவையில் நேற்று (19.8.2026) நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கீழ்வேளூர் டி.லதா (மார்க்சிஸ்ட் கம்யூ.) பேசியதாவது: தமிழ்நாடு அரசு தனது வரி வருவாயில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தற்போது வழங்கி வரும் 10 சதவீத நிதி ஒதுக்கீட்டை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். 100 நாள் வேலை தற்போது ஒரு ஊராட்சிக்கு 5 அல்லது 10 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
கருவிழி மற்றும் கை ரேகை விழாதவர்களுக்கு 100 நாள் வேலை மறுக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகளாகி விட்டது. கிராமப்புறங்களில் மக்களுக்கு குடிநீர் விநியோகம், சாலை வசதி, அடிப்படை வசதி செய்வதில் பெரும் குறைபாடுகள் நிலவுகிறது. எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்தி, மக்கள் பிரதிநிதித்துவ செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கடலோர சொகுசுக் கப்பல்,
படகு சுற்றுலாத் திட்டம்
படகு சுற்றுலாத் திட்டம்
அமைச்சர் ராஜேஷ்குமார் அறிவிப்பு
சென்னை, ஆக. 20- சட்டப்பேரவையில் நேற்று (19.8.2026) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வளத்துறை, சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தபோது, சுற்றுலாத் துறை தொடர்பாக பதிலளித்து அமைச்சர் ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப் பாறை அணை ரூ.13 கோடி, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை ரூ.19 கோடி, கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பிஅணை ரூ.9 கோடி, ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணை ரூ.7 கோடியில் பூங்காமேம்பாடு மற்றும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கன்னியாகுமரி, தேங்காய்பட்டணம், குளச்சல் கடற்கரை உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா மய்யங்களில் ரூ.18 கோடி திட்ட மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதேபோல், கடலோர சொகுசுக் கப்பல் சுற்றுலா மற்றும் சொகுசுப் படகு சுற்றுலாத் திட்டம் ஆகியவற்றை சென்னை – கோவளம், பூம்புகார்-தரங்கம்பாடி நாகப்பட்டினம், ராமேசுவரம்-தூத்துக்குடி-கன்னியாகுமரி போன்ற வழித்தடங்களில் அறிமுகப்படுத்த சாத்தியக்கூறு அறிக்கைகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
ராமநாதபுரம், குற்றாலத்தில் அமைந் துள்ள தங்கும் விடுதிகள் ரூ.33.80 கோடி மதிப்பீட்டில் மறுகட்டமைக்கப்படும். படகு இல்லங்களில் பயன்படுத்தப்படும் இயந்திர படகுகள் ரூ.17.82 கோடி மதிப்பீட்டில் படிப்படியாக மின்படகுகளாக மாற்றி அமைக்கப்படும்.
மாமல்லபுரம், ராமேசுவரம், திருச்செந் தூர், கிருஷ்ணகிரி, ஏற்காடு, மதுரை ஆகிய தமிழ்நாடு சுற்றுலாத் தங்கும் விடுதிகளிலும், உதக மண்டலம், பைக்காரா ஆகிய படகு இல்லங்களிலும் இ-சார்ஜிங் நிலையங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் கடற்கரை பகுதியில் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்த சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக் கப்படும். இந்தியாவின் முன்னணி MICE நகரமாக சென்னையை உயர்த்திட‘chennai MICE promotion bureau’ என்ற அமைப்பு உருவாக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
