இந்நாள் – அந்நாள்

சிறப்பு புத்தக சலுகைகள்

மெரிக்க ராணுவ மருத்துவரும், ராணுவத்தில்  டைபாய்டு தடுப்பூசியை அறிமுகம் செய்தவருமான பிரிகேடியர் ஜெனரல் பிரெடரிக் ஃபுல்லர் ரஸல்.  அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் அபர்ன் நகரில் (17.8.1870) பிறந்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1893 இல் மருத்துவத்தில் டாக்டர் பட்டமும், 1917 இல் ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக் கழகத்தில் அறிவியலில் டாக்டர் பட்டமும் பெற்றார்.

ராணுவ மருத்துவப் பிரிவில் பணிபுரிந்த இவர், வீரர்களுக்கு டைபாய்டு வராமல் தடுக்க தடுப்பூசி வழங்கும் திட்டம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். இதையடுத்து, ராயல் மருத்துவக் கல்லூரி பேராசிரியரும், டைஃபாய்டு நோய்த் தடுப்பு மருந்து ஆராய்ச்சியாளருமான சர் அம்ரோத் ரைட்டின் ஆய்வுக்கூடப் பார்வையாளராக இவரை இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தார் ராணுவ மருத்துவப் பிரிவு தலைவர்.

அங்கு பணி முடித்து திரும்பியவர், ரைட்டின் ஆராய்ச்சி குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தார். இதை முன்மாதிரியாகக் கொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்தார். அதன்படி தடுப்பூசி ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டது. வாய்வழி மருந்து மற்றும் தடுப்பூசி மருந்தின் திறனை ஒப்பிட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். டைஃபாய்டு கிருமிகளை அழிக்கும் தடுப்பு மருந்தை மேம்படுத்தினார்.

ராணுவ வீரர்களுக்கு 1910 முதல் சிறிது சிறிதாக தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. இது நல்ல பலனைத் தந்ததால், 1911 இல் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. இதனால் உயிரிழப்புகள், நோய் பாதிப்புகள் கணிசமாக குறைந்தன. இதற்கிடையில், ராணுவ மருத்துவக் கல்லூரி, ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகம் ஆகியவற்றில் காப்பாளராக, பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றினார்.

தடுப்பூசியின் வெற்றியால் ராக்பெல்லர் உலக சுகாதார அமைப்பின் தலைவர் விக்லிஃப் ரோஸ் ஈர்க்கப்பட்டார். அந்த அமைப்பின் பொது சுகாதார ஆய்வுக்கூடப் பிரிவை மேம்படுத்துவதற்காக 1919 இல் ரஸலை அழைத்தார்.

பல மருத்துவத் திட்டங்களை இவரது பங்களிப் புடன் ராக்பெல்லர் அமைப்பு வெற்றிகரமாக செயல்படுத்தியது. நோய் கண்டறியும் பணிக்காக பல ஆய்வுக்கூடங்களை உருவாக்கினார் ரஸல்.

ராக்பெல்லர் அறக்கட்டளையில் இருந்து 1935 இல் ஓய்வு பெற்ற பிறகு, மக்களுக்கு பயன்படும் மருத்துவ ஆராய்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டார். விவசாயப் பயன்பாட்டுக்கான நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகளுக்கு தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றினார்.

பொதுநலத் திட்டங்களில் அவரது பங் களிப்பைப் பாராட்டி அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி ‘பப்ளிக் வெல்ஃபேர்’ பதக்கம் வழங்கியது. அடுத்த 4 ஆண்டுகள்  ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் நோய் த் தொற்று மற்றும் தடுப்பு மருந்து துறை பேராசிரியராக பணியாற்றினார்.

தடுப்பூசி மருந்தை ஏராளமானோரிடம் சென்றடைய வைத்ததில் மகத்தான பங்களிப்பை வழங்கியவர்.

மனிதநேயரின் புகழ் இம் மண்ணில்

என்றும் நிலைக்க வாழ்த்துவோம்.

இந்நாள் - அந்நாள்

கே. ஏ. மதியழகன் நினைவு நாள் இன்று  (17-08-1983)

மிழ்நாட்டின் முன்னணி அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க காலத் தலைவர்களில் ஒருவரும் ஆவார்.

கணியூர் அருணாசலம் மதியழகன் என்ற முழுப் பெயர் கொண்ட இவர், தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள கணியூரில் திராவிட இயக்க குடும்பத்தில் தொ.ஆ. அருணாசலனாருக்கு மகனாக 1926 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி பிறந்தார். இவர் உடுமலைப்பேட்டையில் பள்ளிப் படிப்பையும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார்.

திராவிட இயக்கக் கொள்கைகளில் பற்று கொண்டு, திராவிட இயக்க வளர்ச்சிக்காகப் பாடுபட்ட சிறந்த மேடைப் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

அண்ணாவின் அமைச் சரவையிலும், பின்னர் கலைஞர்  அமைச்சரவை யிலும் முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தார். 1962, 1967, 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்று உணவு, வருவாய் மற்றும் வணிக வரித்துறை அமைச்சராக இருந்தார். 1971 – 1972 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டபேரவைத் தலைவராகவும்  இருந்தார். 1974 இல் திமுக அரசில் திட்டக்குழுத் தலைவராகவும் இருந்தார். தமிழ்நாட்டில் உணவுத்துறை அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் உணவுப் பஞ்சம் போக்க பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். கட்சித் தொடங்கிய காலத்திலிருந்தே திராவிட இயக்க் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தார். அவரது தமிழ் பேச்சுத்திறமை அறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர் இரா.நெடுஞ்செழியன் ஆகியோர் போன்று திராவிட இயக்க வளர்ச்சிக்கு வித்திட்டது.

இவர் ‘தென்னகம்’ என்னும் இதழை 1959 ஆம் ஆண்டு சனவரி 16 ஆம் நாள் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்து வெளியிட்டு வந்தார். தமது 57 ஆவது வயதில் 1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 இல் மறைவுற்றார்.

 

முதல் பெரியார் நினைவு
சமத்துவபுரம் திறப்பு இன்று (17-08-1998)

அனைவரும் ஏற்றத்தாழ்வு இன்றி சமத்துவமாய் வாழும் வண்ணம் தமிழ்நாட்டின் முதல் பெரியார் நினைவு சமத்துவபுரம் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையில் அன்றைய முதலமைச்சர்   கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நாள் இன்று (17-08-1998).

தகவல்: பாணாவரம் பெ.வீரமணி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *