தொடுபுழா, ஆக.16 முல்லைப் பெரியாறு அணையில் 999 ஆண்டுகளுக்கு போடப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என ‘கேரள மக்கள் பாதுகாப்பு சமிதி’ தொடு புழாவில் நகல் எரிப்பு போராட்டத்தை நடத்தினர். இதனால் கேரளாவில் மேலும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீரை தமிழ்நாடு பயன்படுத்திக் கொள்வதற்கும், அதன் நீர்த்தேக்க பகுதிகளுக்கும் சேர்த்து 999 ஆண்டுகளுக்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையே ஒப்பந்தம் 1886 அக்.,29இல் போடப்பட்டது. ஏக்கருக்கு ரூ.5 வீதம் மொத்தமுள்ள 8256 ஏக்கருக்கு குத்தகைத் தொகையை ஆண்டுதோறும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
குத்தகைத் தொகை காலப்போக்கில் உயர்த்தப்பட்டு தற்போது ஏக்கருக்கு ரூ.40 வரை வழங்கப்பட்டு வருகிறது. அணை பலவீனம் அடைந்து விட்டது, புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்த கேரளாவில் தற்போது புதிய பிரச்சினையை கையில் எடுத்து போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
கேரளாவில் இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களை அடக்கிய ‘கேரள மக்கள் பாதுகாப்பு சமிதி’ சார்பில் அதன் தலைவர் ராய், பொது அமைப்பாளர் சிறீகுமார் கொண்ட குழுவினர் கோட்டயத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
திருவிதாங்கூர் சமஸ்தானமும், மதராஸ் மாகாணமும் செய்து கொண்ட ஒப்பந்தம் சுதந்திரத்திற்கு பிறகு செல்லாததாகி விட்டது. ஆனால் 1970இல் நிபுணர்களின் ஆலோசனை களை பெறாமல் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.
இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குத்தகை ஒப்பந்த நகலை எரித்து கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவோம்.
50 ஆண்டுகள் மட்டுமே ஆயுட்காலம் என கணக்கிடப்பட்டு கட்டப்பட்ட 131 ஆண்டுகள் பழமையான பெரியாறு அணையை செயலிழக்க செய்வதில் கேரளா அரசு அலட்சியம் காட்டுகிறது என்றனர்.
நகல் எரிப்பு போராட்டம்
இதனை தொடர்ந்து நேற்று (15.8.2026) காலை தொடுபுழாவில் ஒப்பந்த நகல் எரிக்கும் போராட்டத்தை நடத்தினர். இது போன்ற சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர்.
