சத்தியமங்கலம், ஆக.16 கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் குண்டாங்கல் பாறை புத்தர் நகர் பகுதியில் நடந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற மாணிக்கம் (31) என்பவர், 4 வயது சிறுமியை பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. நடந்ததை சிறுமி பாட்டியிடம் தெரிவித்ததை அடுத்து, குழந்தை உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
தன் பேத்திக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அறிந்த பாட்டி ஆவேசமடைந்து, குற்றவாளியைத் தேடிச் சென்றார். தேவதானம் பகுதி யில் அவரைக் கண்டறிந்த பாட்டி, அவரைக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது அவர் தப்பியோட முயன்றார். இதனால் கோபமடைந்த பாட்டி, அரிவாளால் அவரை நடுரோட்டில் ஓடஓட விரட்டி வெட்டியுள்ளார்.படுகாயமடைந்த மாணிக்கம் முதலில் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, பின்னர் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டார்.
பாட்டியைக் காவல்துறையினர் கட்டுப்படுத்தி அரிவாளைப் பறி முதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.4 வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் அதைத் தொடர்ந்து பாட்டி நடத்திய தாக்குதல் சம்பவம் குளித்தலை வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை இரு தரப்பிலும் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகிறது.
