சென்னை, ஆக. 15- தங்கம் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் நகைத்திருட்டும் அதை அடகுக்கடைகளில் விற்பதும் அதிகரித்து வருகிறது.
எனவே, திருடப்பட்ட தங்க நகைகள் மீண்டும் விற்பனை செய்யப் படுவதைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு தங்க நகைக்கும் தனியாக வழங்கப்படும் ‘HUID’ (எச்.யு.அய்.டி.) எண்ணுடன், அந்த நகை ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டுவிட்டது என்பதையும் இணையதள பதிவில் குறிப்பிடும் புதிய முறையைக் கொண்டு வர ஒன்றிய அரசு திட்ட மிட்டுள்ளது.
திருடப்பட்ட நகைகளை உருக்கியோ அல்லது அப்படியே வேறு நபர்களுக்கோ மீண்டும் விற்பனை செய்வதை இந்தியாவில் பல ஆண்டு களாகத் திருடர்கள் செய்து வருகின்றனர். இந்த முறையை முற்றிலுமாகத் தடுக்க விரும்பும் ஒன்றிய அரசு, ஒருமுறை விற்பனையான நகையின் HUID எண் கணினியில் “விற்பனையானது” (Sold) என்று காட்டிவிட்டால், அதை மீண்டும் போலி ஆவணங்கள் மூலம் வேறு கடையில் விற்க முடியாத நிலையை ஏற்படுத்த விரும்புகிறது.
இதற்காகவே தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்வதற்காகத் தற்போது ஒவ்வொரு ஹால்மார்க் நகைக்கும் தனித்துவமான 6 இலக்க HUID எண் வழங்கப்படுகிறது.
இந்த எண்ணை அடிப் படையாகக் கொண்டு, நகையின் விவரங்களை நகைக்கடைகளால் எளிதாகக் கண்காணிக்க முடியும்.
அதனை மேலும் விரிவாக்கம் செய்யும் ஒன்றிய அரசின் புதிய திட்டப்படி, நகை விற்பனை செய்யப் பட்டதும் அந்த நகைக் கான HUID எண் ‘விற்பனையானது’ என்று பதிவு செய்யப்படும்.
இதனால் அதே எண்ணைப் பயன்படுத்தி மற்றொரு நகையை விற்பனைக்குக் கொண்டு வந்தால், அது ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்ட நகை என்பதை கணினி கண்டிப்பாகச் சுட்டிக் காட்டிவிடும்.
இதன் மூலம் திருட்டு அல்லது முறைகேடாகப் பெறப்பட்ட தங்க நகைகளை மீண்டும் விற்பனை செய்வதைத் தடுக்க முடியும் என்று ஒன்றிய அரசு நம்புகிறது.
எனவே ஒன்றிய அரசின் திட்டப்படி, ஒருவர் பழைய தங்க நகையை விற்பனைக்குக் கொண்டு வந்தால், நகைக் கடைக்காரர் அதன் HUID எண்ணைச் சரிபார்க்க வேண்டும்.
அந்த நகை ஏற் கெனவே வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாகப் பதிவில் இருந்தால், அதன் மூலத்தை விசாரிக்க முடியும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
