சேலம், ஆக. 16- அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அணைகள் பாதுகாப்பினை மேற்கொள்வதற்காக விரிவான திட்ட மதிப்பீடு மேற்கொள்வதற்கு ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய நீர்வள ஆணையத்தின் ஓய்வு பெற்ற தலைவர் சந்திரசேகர் தலைமையில் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் தமிழ்நாடு நீர்வளத்துறையின் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் செல்வம், திருச்சி என்.அய்.டி. கல்லூரியின் புவியியல் தொழில்நுட்ப வல்லுநர் முத்துக்குமரன், நீரியல் வல்லுநர் மஞ்சுளா ஆகி யோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் நேற்று மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து நிபுணர் குழு வின் தலைவர் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அணைகள் பாதுகாப்பிற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்காக மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டோம்.
அணையின் கட்டுமானம், நீர் வெளியேற்ற மதகுகள், அணையின் முக்கிய பகுதிகள் மற்றும் அணை யின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கருவிகளை ஆய்வு செய்தோம்.
மேலும் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பாலத்தை ஆய்வு செய்தோம். அவசர கால நீர் போக்கியான அணையின் மண் கரையையும் ஆய்வு மேற் கொண்டோம். இதுகுறித்து விரிவான திட்ட அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்வோம் என்றார்.
