சென்னை, ஏப்.23 பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருந்து வெப்பக் காற்று மேற்கு நோக்கி பயணிக்கும் காரணத்தால் வங்கக் கடல் பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். அதனால் தமிழ்நாட்டில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இயல்பைவிட 4 டிகிரி செல்சியசை விட வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வறண்ட வானிலை காரணமாக தமிழ்நாட்டில் தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் நேற்று (22.4.2026) மழை பெய்துள்ளது. பிற இடங்களில் வறண்ட வானிலை நிலவியது. வெப்பநிலையை பொருத்தவரையில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருந்தது. மற்ற இடங்களில் இயல்பை ஒட்டியே இருந்தது.
ஒரு சில இடங்களில் வேலூர் உள்பட 106 டிகிரி வெயில் கொளுத்தியது. வெப்பநிலையை பொருத்தவரையில் 26ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு. இருப்பினும் தற்போதுள்ள நிலையில் இருந்து சற்று உயரவும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியசை விட அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வெப்பநிலை அதிகரித்து 101 டிகிரி வெயில் நிலவும் வாய்ப்புள்ளது. அதிக வெப்பமும், ஈரப்பதமும் உள்ள நிலையில் சென்னையில் வசதி குறைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது என வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தல் எதிரொலி
சென்னையில் இருந்து
1.88 லட்சம் பேர் பயணம்
1.88 லட்சம் பேர் பயணம்
அதிகாரிகள் தகவல்
சென்னை, ஏப்.23 தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் நடை பெறுவதையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் சேர்த்து 10,663 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கோயம்பேடு, மாதவரம் போன்ற போக்குவரத்து வழித்தடங்களில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன் தினம் (21.4.2026) வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1339 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. ஒட்டு மொத்தமாக 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டு 1,88,705 பயணிகள் பயணம் மேற்கொண்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (22.4.2026) தினசரி பேருந்துகளுடன் 5,662 சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம் உட்பட பிரதான 4 பேருந்து முனையங்களில் இருந்து இயக்கப்பட்டன. இதில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டதால் ஜி.எஸ்.டி சாலை போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டன. போக்குவரத்து காவல்துறையினர் உதவியுடன் சரிசெய்யப்பட்டு வாகன ஓட்டிகள் இடையூறுயின்றி கடந்து சென்றனர். மேலும், பேருந்துகளில் மட்டுமல்லாது பொதுமக்கள் தங்களுடைய கார்,பைக் போன்ற வாகனங்களில் பலர் சொந்த ஊர்களுக்கு படை எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

