கோவை, ஆக.15- கோவையில் சக மாணவர்களால் படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அமுதனின் பெற்றோரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவர் அமுதன், சக மாணவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
அமுதனின் பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட உதயநிதி ஸ்டாலின், மாணவரின் மரணத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார். இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத்தர சட்ட ரீதியாகப் போராட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அமுதனின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து ஏற்கெனவே சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ள உதயநிதி ஸ்டாலின், வரும் 17.8.2026 அன்று சட்டமன்றத்தில் இது குறித்து விரிவாகப் பேசவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில், கைப்பேசி பறிப்பு தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் மாணவர் உயிரிழந்ததாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், போதைப் பொருள் கும்பல் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததால் அமுதன் அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமுதனின் தாயார், உதயநிதி ஸ்டாலினிடம் தனது மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு உருக்கமாகப் பேசியது குறிப்பிடத்தக்கது.
வருகையில்லா ஆவணப் பதிவு ஆக.17இல் தொடக்கம்
அமைச்சர் தகவல்
கோவை, ஆக. 15- வருகையில்லா ஆவணப் பதிவு முறையை வரும் 17ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார் என, கோவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவையில் நடந்த விளக்க கூட்டத்தில் அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் பேசியதாவது:
வருகையில்லா ஆவணப் பதிவு நடைமுறை திட்டத்தை விரைவாகக் கொண்டு வர முதலமைச்சர் ஆர்வத்துடன் உள்ளார். அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சரால் வரும் 17ஆம் தேதி வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறை தொடங்கி வைக்கப்பட உள்ளது.
தற்போது ‘ஃபர்ஸ்ட் பிளாட், ஃபர்ஸ்ட் சேல்’ ஆகிய ஆவணப் பதிவுகள் இணைய வழியில் கொண்டு வரப்படுகின்றன. இன்னும் படிப்படியாக அனைத்து விதமான பத்திரப் பதிவுகளும் இணையவழியில் கொண்டு வரப்படும். பத்திரப்பதிவுத் துறையில் இடைத்தரகர்களின் தலையீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் களைந்து, ஒரு வெளிப்படையான முறையை உருவாக்க இப்புதிய நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் பத்திரப்பதிவுத் துறை தலைவர் ஜி.கே.அருண்சுந்தர் தயாளன், ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் கிரெடிட் கார்டு
கடன் நிலுவை ரூ.2.86 லட்சம் கோடி!
சென்னை, ஆக.15–- தமிழ்நாட்டில் உள்ள கிரெடிட் கார்டு பயனர்களின் கடன் நிலுவை, இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ரூ.2.86 லட்சம் கோடி என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.1.47 லட்சம் கோடியாக இருந்த கிரெடிட் கார்டு கடன் நிலுவை, 2026இல் ரூ.2.86 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
தனியார் வங்கிகள் வழங்கிய கிரெடிட் கார்டுகளின் கடன் நிலுவை கடந்த 2022இல் ரூ.1.46 லட்சம் கோடியாக இருந்து, தற்போது ரூ.2.81 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், அரசு வங்கிகளின் கடன் தொகை ரூ.1,123 கோடியிலிருந்து ரூ.5,667 கோடியாக உயர்ந்துள்ளது.
தனியார் வங்கிகளில் எச்டிஎஃப்சி (HDFC) வங்கியின் கடன் நிலுவைதான் மிக அதிகம்; அது ரூ.1.12 லட்சம் கோடியாக உள்ளது. அடுத்த இடத்தில் அய்சிஅய்சிஅய் (ICICI) வங்கி ரூ.54,865 கோடியுடனும், ஆக்ஸிஸ் (Axis) வங்கி ரூ.49,702 கோடியுடனும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
தமிழ்நாட்டில் அதிகமானோர் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதையே இது காட்டுவதாகவும், இதனுடன், பொருளாதார மேலாண்மைத் திறனும் மக்களிடையே அதிகரிக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுவதாகவும் உள்ளது என்று கூறப்படுகிறது.
