கல்வித் துறையில் நிகழ்ந்த பெருந்திருப்பம்
தமிழ்நாட்டு மனித வளத்தைப் பெருக்கக் காரணமாக இருந்தது ஒரு முன்னோடிச் சட்டம்
இந்திய அளவில் கல்லூரிச் சேர்க்கை விகிதம் 29.5 ஆக இருக்கும் போது, தமிழ்நாட்டில் அது 52.3 ஆக இருப்பது அடிக்கடி பெருமிதமாகக் குறிப்பிடப்படுகிறது. அதற்கு அடித்தளமிட்டது எது? இது நேற்று தொடங்கி, இன்று தொட்ட இலக்கு அல்ல. தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்களில் சிலவற்றின் கல்வி வளர்ச்சியை எடுத்துக்கொண்டாலும், வளர்ந்த நாடுகளின் கல்வி வளர்ச்சியை எடுத்துக்கொண்டாலும் அதற்கான முன்னேற்பாடுகள் பெரும்பாலும் வெகு காலத்திற்கு முன்பு முன்னெ டுக்கப்பட்டவை என்பது
விளங்கும்.
சான்றாக, கேரளத்தின் கல்வி வளர்ச்சி தமிழ்நாட்டைவிட அதிகமாக இருப்பதற்கான பல காரணங்களில், 1817-விலேயே திருவனந்தபுரம் ராணி பிறப்பித்த கட்டளைக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்தக் கட்டளையின் மூலம் தொடக்கக் கல்வி அரசின் பொறுப்பாக ஆனது. அனைவருக்கும் கல்வி அளிக்கப்பட்டது. அத்தகைய ஒரு செயல் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது நீதிக்கட்சி ஆட்சியில்.
பெற்றோருக்குத்
தண்டனை
தண்டனை
1921ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பானது, சென்னை நகரின் ‘ஏறக்குறைய 50% ஆண்களும் 80% பெண்களும்’ அடிப்படை எழுத்தறிவு நிலையைக் கூட எட்டவில்லை என்பதை வெளிப்படுத்தியது. சென்னையே இப்படி என்றால், மற்ற பகுதிகளில் மிகவும் குறைவான கல்வியறிவே இருந்திருக்கும். இந்த நிலையை மாற்ற எடுக்கப்பட்ட முன்னெடுப்புகளில் ஒன்று ‘மதராஸ் தொடக்கக் கல்விச் சட்டம் – 1920′. இது நீதிக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நடைமுறைக்கு வந்தது.
இச்சட்டம், தமிழ்நாட்டின் நவீன கல்விக்குத் திடமான பாதையை இட்டது. சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டுத் தொடக்கக் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. பள்ளியில் சேர்த்த பின் பிள்ளைகளைப் பள்ளி களுக்கு அனுப்பாத பெற்றோருக்குத் தண்டனைத் தொகையும் உண்டு என்கிற அளவுக்கு அது கட்டாயமாகப் பின்பற்றப்பட்டது.
இதன் முக்கியக் கூறு, கல்வியைக் கட்டாயமாக்கும் முடிவினையும், பள்ளிகளை நடத்துவதற்கான பணத்தைத் திரட்டும் பொறுப்பையும் உள்ளாட்சி / நகராட்சி ஆகிய அமைப்பு களின் பொறுப்பில் மாவட்ட வாரியம் விட்டுவிட்டது. இதன்படி உள்ளாட்சி அமைப்புகள், சிறப்புத் தீர்மானத்தின் மூலம், பள்ளி நடத்துவதற்கான இடத்தை வழங்கத் தயாராக இருப்பதும் போதுமான பணத்தைத் திரட்ட வரி விதிக்கத் தயாராக இருப்பதையும் சட்டசபைக்குத் தெரியப்படுத்தி ஒப்புதல் பெற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் திரட்டும் வரித் தொகைக்கு இணையான தொகையை உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாகாண அரசு அளிக்க வேண்டும்.
பெண் கல்வி
1922 இல் மற்ற சில நகராட்சி அமைப்புகள் பெண் கல்வியைக் கட்டாயமாக்காத நிலையில், ஈரோடு நகராட்சி முதன்முதலாகப் பெண் கல்வியைக் கட்டாயமாக்கியது. 1924இல் மதராஸ் நகராட்சி நிர்வாகம் கட்டாயக் கல்விக்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தது. 1925ஆம் ஆண்டுவாக்கில் 18 நகராட்சிகள் தொடக்கக் கல்வியைக் கட்டாயமாக்கின; பள்ளிகளை நடத்தின.
மதராஸ் மாகாணச் சட்டசபையில், கே.வி.ஆர்.சாமியின் கேள்விக்கு ஜூலை 1929இல் அளித்த பதிலின்படி 1921-1928 காலகட்டத்தில் அன்றைய ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்தில் நீதிக்கட்சி அரசால் 19,095 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. 1920 தொடங்கி 1937 வரை (1926–1930 தவிர) நீதிக்கட்சியினர் ஆட்சியில் இருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது. உள்ளாட்சி நிர்வாகங்களிலும் பெரும்பாலும் அவர்களே தலைமைப் பொறுப்பில் இருந்தனர்.
கல்வியில்
சிறந்த தமிழ்நாடு
சிறந்த தமிழ்நாடு
தமிழ்நாட்டின் கல்விப் பாதை யில் பெருமாற்றம் நிகழ்ந்தது விடு தலைக்குப் பின்புதான் என்று பலருக்குக் வாய்வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது. ராஜாஜி பள்ளிகளை மூடியதும் அவற்றைக் காமராஜர் பின்னர் திறந்ததும்; கூடுதலாகப் பள்ளிகளைத் திறந்ததும் நல்லதங்காள் கதையைப் போலவும், மதுரை வீரன் கதையைப் போலவும் வாய்வழியாகச் சொல்லப்பட்டு வருகின்றன.
நீதிக்கட்சியினர் பெரும் எண்ணிக்கையில் பள்ளிகளைத் தொடங்கியதையும், தொடக்கக் கல்வியைக் கட்டாயமாக்கியதையும் தேடித் தேடிப் படிக்க வேண்டி உள்ளது. கட்டாய கல்விச் சட்டம் மற்ற மாகாணங்களிலும் இயற்றப்பட்டாலும் மதராஸ் மாகாணத்தில் நீதிக்கட்சியினர் நடைமுறைக்குக் கொண்டுவந்த அளவுக்கு மற்ற மாகாணங்களில் செயல்படுத்தப்படவில்லை. எனவே தான், கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது ஒரு படி முன்னே நிற்கிறது.
மேலும், பள்ளி உணவுத் திட்டம் முதன்முதலில் 1920ஆம் ஆண்டில், சட்டமன்றத்தின் ஒப்புதலுடன் சென்னை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சென்னையின் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ஒரு மாநகராட்சி பள்ளியில் காலை உணவுத் திட்டமாகத் தொடங்கப்பட்டது. பின்னர் திட்டம் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. 1960களில் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்டு, 1980-களில் எம்ஜிஆரால் விரிவு படுத்தப்பட்ட இலவச உணவுத் திட்டங்களுக்கு இதுவே முன்னோடி யாக அமைந்தது.
நெல், கோதுமையின் உற்பத்தி திறனையும் உற்பத்தி அளவையும் பெருகிய திட்டத்தைப் பசுமைப் புரட்சி என்கிறோம். பால் வளத்தைப் பெருகியத் திட்டத்துக்கு வெண்மைப் புரட்சி எனப் பெயரிடுகிறோம். கடல் உணவு உற்பத்தியைப் பெருகியத் திட்டத்தை நீலப் புரட்சி என்கிறோம். மனித வளத்தைப் பெருகிய நீதிக்கட்சி யினரின் பெருஞ்செயலை ஏன் புரட்சி என அழைக்கத் தவறினோம்?
நோபல் பரிசு பெற்ற, பொருளாதார அறிஞர் டேனியல் கான்மன், ஒரு நீண்ட நெடிய விளக்கத்தைவிட ஒரு சிறு பெயர் மனதில் நிலைத்து நிற்கும் என்கிறார். நீதிக்கட்சியின் கல்விப் பங்களிப்பைக் ‘கல்விப் புரட்சி’ என்போம்; மனதில் நிறுத்துவோம்.
– சங்கர்கணேஷ் கருப்பையா
இந்திய வருவாய்ப் பணி அலுவலர்
நன்றி: ‘இந்து தமிழ் திசை’, 13.8.2026
