சட்டத்துறையில் பாலின நீதி சாத்தியமாகுமா?

4 Min Read

வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகத்தில்
பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவு

இந்திய நீதித் துறையில் பெண்களின் பங்கேற்பு என்பது போராட்டங்களாலும் அசாத்திய உறுதியினாலும் கட்டமைக்கப்பட்டது. இன்றைக்கு நாம் காணும் நிலையை அடையப் பல கட்டங்களைக் கடந்து வர வேண்டியிருந்தது. 1879ஆம் ஆண்டு சட்டத் தொழிலாற்றுநர் சட்டம் ஆண்களுக்கு மட்டுமே வழக்கு நடத்தும் உரிமையை வழங்கியது. அந்தக் காலக்கட்டத்தில், பெண்கள் நீதிமன்றத்தில் நிற்கவே தகுதியற்றவர்கள் என்கிற மனநிலை நிலவியது.

இந்த அநீதியை வேரறுக்க 1919இல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ரெஜினா குஹா தொடர்ந்த வழக்கு ஒரு மாற்றத்தின் தொடக்கமாக அமைந்தது. 1921இல் பிரிட்டனில் பாலினப் பாகுபாட்டை ஒழிக்கும் சட்டம் இயற்றப்பட்ட பின்னர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கார்னேலியா சொராப்ஜி இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞராகப் பதிவுசெய்யப்பட்டார். தமிழ்நாட்டில் ஆனந்தா பாய் ‘மதராஸ் உயர்நீதிமன்ற’த்தின் முதல் பெண் வழக்கறிஞராக வரலாற்றில் இடம்பெற்று, தென்னிந்தியாவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தார்.

சமத்துவத்தின் அடிப்படை

இந்திய அரசமைப்புச் சட்டம் பாலினச் சமத்துவத்தை மய்யக் கோட்பாடாகக் கொண்டுள்ளது. சட்டக்கூறு 14 அனைத்துக் குடிமக்களும் சட்டத்தின் முன் சமம் என்பதை உறுதிசெய்கிறது. சட்டக்கூறு 15 பெண்களுக்காகச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது. 16ஆம் சட்டக்கூறு பொதுப் பணிகளில் சமவாய்ப்பை உறுதிசெய்கிறது. இந்த அரசமைப்பு அடித்தளம் சட்டத் துறையில் பெண்களின் பங்கேற்பைச் சட்டபூர்வமாக உறுதிசெய்வதோடு, அவர்களுக்கு எதிராக நிலவும் பாகுபாட்டைக் களைவதற்கான கருவியாகவும் திகழ்கிறது. தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்தி, உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்தி நல்ல முன்னுதாரணமாக விளங்குகிறது.

கடக்க வேண்டிய தொலைவு

தமிழ்நாட்டில் பெண் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு தசாப்தத்தில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. உயர்ந்துவரும் பெண் கல்வி விகிதமும், சட்டக் கல்லூரிகளில் அதிகரித்துவரும் மாணவிகளின் எண்ணிக்கையும் இந்த வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணங்கள் எனலாம். சட்டக் கல்லூரிகளில் ஏறக்குறைய 40 சதவீத மாணவர்கள் பெண்கள்; இந்நிலையில், எதிர்காலத்தில் சட்டத் துறையில் பெண்களின் இடம் மேலும் வலுப்பெறும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது. எனினும், வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகத்தில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்திய அளவில் பார் கவுன்சில்களில் வெறும் 15 சதவீதம் மட்டுமே பெண் பிரதிநிதிகள் இருக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரம் நாம் இன்னும் கடக்க வேண்டிய தொலைவை நினைவூட்டுகிறது.

மறுக்க முடியாத உண்மைகள்

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வு, சட்டத் துறையில் நிலவும் பாலினச் சமத்துவமின்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. குழந்தை பராமரிப்பு முழுவதும் பெண்களின் பொறுப்பாக இருக்கும் நிலையில், தொழில்முறை வளர்ச்சி கட்டுப் படுத்தப்படுகிறது. நீதிமன்ற வளாகங்களில் பெண்களுக் கான சமத்துவப் பணிச்சூழல் கேள்விக்குறியாகவே உள்ளது. ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்கிற காலாவதியான மனநிலை இன்றும் பலரது மூளைகளில் வேரூன்றியுள்ளது. இவை தனிப்பட்ட நிகழ்வுகள் அல்ல – நிறுவனமயமான சமூகப் பாகுபாட்டின் வெளிப்பாடாகவே இவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தச் சவால்களை நேரடியாகவும் உறுதியாகவும் சரிசெய்யாமல் உண்மையான சமத்துவம் சாத்தியமில்லை.

நீதி பரிபாலனத்தில் பெண்களின் பங்கு நீதித் துறையை மனிதநேயமிக்கதாக மாற்றும் ஆற்றல் வாய்ந்தது. குடும்ப வழக்குகள், பாலியல் வன்முறை வழக்குகள், குழந்தை பாதுகாப்பு வழக்குகளில் பெண் வழக்கறிஞர்களின் பங்கு மிகவும் பயனுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களும் குழந்தைகளும் பெண் வழக்கறிஞர்களிடம் தங்கள் வலியை வெளிப்படையாகவும் நம்பிக்கையுடனும் பகிர்ந்துகொள்கின்றனர். இது வழக்கு நடத்தும் தரத்தையும் நீதி வழங்கும் திறனையும் கணிசமாக மேம்படுத்துகிறது.

மாற்றம் அவசியம்

பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளைக் காக்க, பெண் வழக்கறிஞர்கள் பணி நீதிமன்ற அமைப்பைச் சமநீதியை நோக்கி முன்னேற்றும் சக்தியாக இயக்குகிறது. தமிழ்நாட்டில் வழக்கறிஞர் சங்கங்கள் சட்டத் துறையின் ஜனநாயக முகமாகச் செயல்படுகின்றன. இந்தச் சங்கங்களில் பெண் வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, சங்கங்களின் நிர்வாகத்திலும் முடிவெடுக்கும் அமைப்புகளிலும் அவர்களுக்கான இடம் அதற்கேற்ப உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இது வெறும் நியாயத்தின் அடிப்படையிலான கோரிக்கை அல்ல; நீதித் துறையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கான அவசியம். பெண் வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புச் சவால்கள், தொழில்முறை வாய்ப்புகளில் நிலவும் சமத்துவமின்மை, திறன் மேம்பாட்டுக்கான வழிகாட்டுதல் இன்மை ஆகியவற்றை வழக்கறிஞர் சங்கங்கள் உடனடியாகவும் உறுதியாகவும் கவனிக்க வேண்டும்.

சட்டத் துறையில் பாலின நீதி என்பது கனவு அல்ல; அது நம் அரசமைப்பின் வாக்குறுதி. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற, வழக்கறிஞர் சங்கங்கள் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். பெண் வழக்கறிஞர்களின் குரல் நீதிமன்றத்தில் மட்டுமல்ல, அதை நிர்வகிக்கும் சங்கங்களிலும் அதிகாரத்துடன் ஒலிக்க வேண்டும். அதுவே உண்மையான சமத்துவம்; அதுவே நீடித்த நீதி!

நன்றி: இந்து தமிழ்திசை’ 28.4.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *