தந்தை பெரியாரை, அண்ணல் அம்பேத்கரைப் படித்தேன்
கலைஞரின் அருமை புரிந்தது
கலைஞரின் அருமை புரிந்தது
விஜய்பாஸ்கர்
| த |
ூத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களில் பரவி இருக்கும் நாடார் உறவி னர்களின் வழி வந்த குடும்பத்தை சேர்ந்தவன் நான்.
நான் பிறந்த சூழ்நிலை எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள். பிறக்கும் போதே திமுக வெறுப்பு பேச்சையும், கலைஞர் கருணாநிதி பற்றிய அவதூறையும் கேட்டு கேட்டு வளர்ந்தவன் நான்.
கல்யாணம் காட்சியில் சொந்த பந்தங்கள் பேசும் போதே கலைஞரை திட்டியும் அவதூறு வதந்திகளை சொல்லியும்தான் பேசுவார்கள். பல முறை அதை கேட்டே வளர்ந்திருக்கிறேன். எங்கள் வீட்டில் ரெகுலராக தினமலர்தான் வாங்குவோம்.
சின்ன பிள்ளையிலேயே நான் துக்ளக் படிப்பேன். சித்தப்பா தவறாமல் துக்ளக் வாங்கி வருவார். அதில் உள்ள சோ ராமசாமியி;d கேள்வி பதில்களை படிப்பேன். அவரது வேடிக்கையும் நையாண்டியுமான பதில்கள் பிடித்து போக, சோ சொல்வது அத்தனையும் உண்மை என்று 23 வயது வரை நம்பி இருக்கிறேன்.
சோ எப்படி திமுக வெறுப்பையும், திராவிடத்தின் மேல் அவதூறையும், கலைஞர் ஒவ்வாமையையும் கட்டமைப்பார் என்பது நாம் அறிந்ததே.
அதில்லாமல் விகடன் குமுதம் படிப்பேன். விகடனும் குமுதமும் எப்படி திராவிட கொள்கைகளை திரித்து எழுதும் என்பதும் நாம் அறிந்ததே.
பாலகுமாரன் வாசித்தேன். அவரும் திராவிட கொள்கை பற்றி ஒரு வார்த்தை எழுதி இருக்கிற மாட்டார். சில இடங்களில் அதை சாடியே எழுதி இருப்பார்.
பாலகுமாரனுக்கு அடுத்து தி.ஜானகிராமன்… தி.ஜா எழுத்துக்களை படித்தால் அக்காலத்தில் திமுக என்று ஒரு கட்சி இருந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் சமகாலத்தை புறக்கணித்தே எழுதி இருப்பார்.
தி.ஜாவுக்கு அடுத்தபடியாக அதிகம் வாசிக்க விரும்பியது, வாசித்தது சுந்தர ராமசாமி.
அவரும் பெரிய திராவிட விரும்பி கிடையாது. பெரிய அளவில் சமூகநீதி புரிதல் இல்லாத எழுத்தாளர்தாம் சு.ராவும். அடுத்து அசோகமித்திரன். இவரைப் பற்றி சொல்லவே வேண்டாம். இவரும் அப்படித்தான்.
திராவிட இயக்கம், திமுக. கலைஞர் கருணாநிதி பற்றிய புரிதல் ஒரு இளைஞருக்கு வர எத்தனை தடைகள் பாருங்கள். வெகு ஜன மீடியாக்கள் அனைத்தும் அதற்கு எதிராக இருக்கின்றன.
அதை தாண்டி கொஞ்சம் அறிவுப்பூர்வமான எழுத்தாளர்கள் என்று நினைத்து படித்தால் அவர்களும் திராவிட உணர்வு மக்களுக்கு போய் சேர்ந்து விடக் கூடாது என்று கவனமாக எழுதி வைத்திருக்கும் தந்திரசாலிகளாக இருக்கிறார்கள்.
இப்படி இருந்த எனக்கு திமுக பற்றி கலைஞர் பற்றிய தெளிவை கொடுத்தது, பாபா சாஹேப் அம்பேத்கர் எழுதிய புத்தகங்களை வாசித்த பிறகே.
நான் முதலில் படித்தது அம்பேத்கர் புத்தகங்களை தாம். பிறகே பெரியார் புத்தகங்களை படித்தேன்.
அம்பேத்கரையும் பெரியாரையும் படித்த பிறகு, இந்த கருத்துக்களை எல்லாம் செயல்முறையில் சமூகத்திடம் கொண்டு சேர்க்க முயன்ற தலைவர்கள் மீது மரியாதை ஏற்பட்டது.
விபிசிங், கே.ஆர் நாராயணன் இப்படி பல தலைவர்களை நான் மீண்டும் மிக மரியாதையாக பார்க்க ஆரம்பித்தேன். அந்த வகையில் அண்ணா செய்த அரசியல் புரட்சி பற்றி படிக்க மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து கலைஞர் மேல் பெரும் போற்றுதலே வந்தது. அந்த போற்றுதல் உணர்வுக்கு பிறகுதான் கலைஞர் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள் எல்லாம் வாசிக்க தொடங்கினேன். கலைஞர் என்னும் எழுத்தாளர் மீது இன்னும் மரியாதை வந்தது. பாபா சாஹேப் அம்பேத்கரையும், தந்தை பெரியாரையும் படித்தே நான் கலைஞரின் அருமையைப் புரிந்து கொண்டேன் என்றேன்.
அப்படி அம்பேத்கரையும் பெரியாரையும் வாசிக்க எனக்கு உதவியதும் கலைஞர்தான்.
அவர் கட்டிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்தான் நான் அம்பேத்கரையும் பெரியாரையும் வாசித்தேன்.
சமூகநீதி கருத்துக்களை என்னை அடைய விடாமல் செய்த உறவினர்கள், தினமலர், சோ, பாலகுமாரன், தி.ஜா. சு.ரா, அசோகமித்திரன், விகடன், குமுதம், பாலசந்தர் வகையறா சினிமாக்கள் என்று அனைத்தையும் தாண்டி சமூகநீதி அறிவை பெற கலைஞர் கட்டிய கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகமே காரணமாக இருந்தது.
அப்படிப்பட்ட ஒப்பற்ற மனிதரை, கலைஞர் அரசியல் நிர்வாகியை அவரது நினைவு தினத்தில் அன்போடு நினைத்துக் கொள்கிறேன்.
