மேட்டூர், ஆக. 12– மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (12.8.2026) காலை நிலவரப்படி வினாடிக்கு 8,689 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.37 அடியில் இருந்து 79.78 அடியாக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரம் நீர் வரத்து: வினாடிக்கு 8,689 கன அடி நீர்மட்டம்: 79.78 அடி நீர் இருப்பு: 41.73 டி.எம்.சி நீர் திறப்பு: குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி மழை அளவு: அணைப் பகுதியில் 6.8 மி.மீ மழைப் பதிவு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், குடிநீர் பயன்பாட்டிற்காகத் தொடர்ந்து வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தெருக்களுக்கு
ஜாதிப் பெயர் இல்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும்!
உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக.12– தமிழ்நாட்டில் தெருக்களுக்கு ஜாதிப் பெயர் இல்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி
என்.ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் துறையினர் பதிவு செய்த குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் பிணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு நேற்று (11.8.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல் தகவல் அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட ஜாதிப் பெயரை கொண்ட தெரு என்று குறிப்பிட்டு இருந்தது. இதை படித்து பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.
“2026-ம் ஆண்டிலும் இப்படி ஜாதிப் பெயரை குறிப்பிட்ட தெரு உள்ளதா? தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கவேண்டும் என்று 1998ஆம் ஆண்டே தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பல உத்தரவுகளை உயர்நீதிமன்றமும் பிறப்பித்துள்ளன. அப்படியிருந்தும், ஒரு தெருவுக்கு குறிப்பிட்ட ஜாதிப் பெயரை வைத்து எப்படி அழைக்க முடியும்? இதனால்தான் அண்மையில், ஆதி திராவிடர் நலத்துறையை, சமூக நீதித்துறை என்று தமிழ்நாடு அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் தெருக்களுக்கு ஜாதிப் பெயர் இல்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும்” என்று கருத்து கூறினார்.
பின்னர், “தமிழ்நாடு முழுவதும் தெருப் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கிறேன். இந்த வழக்கை தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிடும்படி உயர்நீதிமன்ற பதிவாளருக்கு பரிந்துரைக்கிறேன்” என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
