மனித மூளையின் வியக்கத்தக்க பரிணாம வளர்ச்சியின் காரணமாக, தான் காணும் எதையும், தனக்குத் தெரிந்த வடிவங்களுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. ஒழுங்கற்ற வடிவங்களில் முகங்களையோ அல்லது பொருட்களையோ காணும் இந்த உளவியல் நிகழ்வை அறிவியலில் ’பேரிடோலியா’ (Pareidolia) என்று அழைக்கிறார்கள். மேகக் கூட்டத்தில் யானையையும், நிலவில் பாட்டியையும் காண்பது இந்த உளவியல் இயல்பின் வெளிப்பாடுதான். ஆனால், இந்த அப்பாவித்தனமான கற்பனைத் திறனுடன் ‘பயபக்தியும்’, ‘மூடநம்பிக்கையும்’ இணையும் போது, அது அறியாமையின் உச்சமாக மாறி வருகிறது.
குகைக்குள் படந்த பனி, மாதாவானது!
அய்ரோப்பிய நாடுகளில் குளிர் காலத்தில் பனி விலகும் போது குகை போன்ற பகுதியின் மேலே பனி சில நேரம் அப்படியே தங்கிவிடும்.
இது சில நேரங்களில் பல நாள்கள் அப்படியே இருந்துவிடும். இப்படி ஒரு குகையின் மேல் பகுதியில் தங்கிவிட்ட பனிக் கூட்டத்தை இயேசுவாகவும், மாதா உருவமாகவும் பார்த்தனர்.
இப்படி ஒன்றுதான், பிரான்சு நாட்டின் லூர்து நகரில் குளிர்கால இறுதியில் அங்குள்ள குகை ஒன்றில் பண்ணையில் வேலைபார்க்கும் புனித பெர்னதெத் சூபிரூஸ் என்ற பெண்ணொருவர் மாடு, குதிரைகளுக்குச் சேகரித்து வைக்கப்பட்ட வைக்கோலை எடுக்கக் குகைக்குள் சென்றபோது குகையின் மேல் பகுதியில் படர்ந்த பனி – அவர் புத்திக்கு மேரி மாதாவின் உருவம் போல் காணப்பட்டதால் அதை ‘மாதா’ என்று வழிபடத் தொடங்கினார். 1858ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வின் மூலம் உலகம் எங்கும் லூர்து மாதா என்று பல நாடுகளில் வணங்கப்படுகிறது. அப்பெண்ணிற்கு புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது.
இதையே மூலதனமாக்கிப் பெரும்பாலான ஆப்பிரிக்கக் கண்ட நாடுகளின் மக்களை ஏமாற்றிய கதை இன்றும் நடைமுறையில் உள்ளது.
இயேசு உயிர்த்தெழுந்து காட்சி தருகிறார்
2023ஆம் ஆண்டு ‘புனித வெள்ளி’ எனப்படுகின்ற நாளில் வானத்தில் நகர்ந்து கொண்டிருந்த ஒற்றை மேகம் ஒன்றை “அதோ. இயேசு நமக்காக உயிர்த்தெழுந்து காட்சி தருகிறார்” என்று எமி ராசலோ எபனேசர் என்ற மதத் தலைவர் குரல் கொடுத்துப் பெரும்பாலான மாலி நாட்டு மக்களையும் நம்பவைத்தார்.
அடுத்த சில நிமிடங்களில் காணாமல் போன அந்தக் குட்டி வெள்ளை மேகத்தைக் காட்டி அந்தப் பாதிரியார் ஈட்டிய செல்வத்தில் சொந்த விமானத்தையே வாங்கிப் பறந்துகொண்டு இருக்கிறார். இதற்கான அறிவியல் காரணத்தை எடுத்துக்கூறியும் பெரும்பாலான மக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதில் நகைச்சுவை என்னவென்றால் இந்தக் காட்சியை வைத்துத் தமிழில் இயேசு புகழ் பாடல் இன்று யூடியூபில் காணப்படுகிறது.
பிரேசிலில் உள்ள கைவிரித்து நிற்கும் உயரமான இயேசு சிலை 2022ஆம் ஆண்டு முழுமையாகப் பனியால் மூடப்பட்டது. உடனே “இயேசு உயிர்த்தெழுகிறார்” என்று கதைவிட்டு உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் விமானம் பிடித்து ரியோ நகரம் செல்வதற்கு முண்டியடித்தனர்.
இதனால் உலகின் பல நாடுகளில் விமானப் போக்குவரத்து பெரும் நெருக்கடியைச் சந்தித்தது, கேரளாவில் இருந்து கூட மூன்று விமானங்களைப் பிரபல அடகு நகை நிறுவனம் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. உண்மை என்னவென்றால் அந்த பனிமூட்டம் விலகி அடுத்த நாள் மீண்டும் தெளிவாகச் சிலை தெரிந்தது.
கான்கிரீட் குப்பைக்குக் கற்பூர ஆராதனை: அமெரிக் காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த ஒரு சம்பவம், மனிதனின் போலி பக்திக்கு மிகச்சிறந்த சான்றாகும். கோல்டன் கேட் பூங்காவில் வீசப்பட்ட ஒரு சாதாரண கான்கிரீட் பார்க்கிங் தடுப்பை (Parking Barrier), அங்கு வாழ்ந்த சில இந்தியர்கள் ‘சிவலிங்கம்’ என்று நம்பி வழிபடத் தொடங்கினர். ஒரு கிரேன் ஆபரேட்டரால் குப்பையாக வீசி எறியப்பட்ட கான்கிரீட் கல், அடுத்த சில நாள்களில் பூக்களாலும் கற்பூரப் புகையாலும் சூழப்பட்டது. தூக்கியெறியப்பட்ட ஒரு கான்கிரீட் கட்டைக்கும், தெய்வீக ஆற்றலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்ற எளிய உண்மையைக்கூட (எந்தவொரு கல்லுக்கும் இப்படித்தானே!) யோசிக்க மறுத்த கூட்டத்தின் அறியாமை, இறுதியில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாக மாறி அதிகாரிகளால் அகற்றப்பட்டது. பக்தி என்ற பெயரில் மனித சுயசிந்தனை எவ்வாறு மழுங்கடிக்கப்படுகிறது என்பதை இது காட்டுகிறது.
இயற்கையின் மாற்றங்களும் மனிதனின் கற்பனைக் கதைகளும் காலங்கள் மாறினாலும், தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மனிதர்களின் அறியாமை மனநிலை மாறவில்லை என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.
ஆக்ராவின் குளிர்சாதனப் பெட்டி பனிக்கட்டி: ஆக்ராவில் ஒரு குளிரூட்டிப் பெட்டியில் நீரின் உறைநிலை காரணமாக உருவான ஒரு சாதாரணப் பனிக்கட்டியை, ‘வீட்டிற்குள் வந்த சிவலிங்கம்’ என்று கொண்டாடி மக்கள் திரண்டனர். அறிவியல் ரீதியாக இது வெறும் இயற்பியல் மாற்றம் (Physical change) மட்டுமே.
கரையான் புற்றில் தெரிந்த கிருஷ்ணன்: உத்தரப் பிரதேசத்தில் கரையான் அரித்த ஒரு மரத்தினைச் சற்று தூரத்திலிருந்து பார்க்க கிருஷ்ணர் போலத் தெரிந்ததால், மக்கள் அங்கு ஒரு கோயிலையே கட்டிவிட்டனர். கரையான் என்பது தன் பசிக்காக மரத்தை அரிக்கும் ஒரு பூச்சியினம்; அதன் எச்சமும் மண்ணும் சேர்ந்த கலவைக்குத் தெய்வீக முலாம் பூசுவது பகுத்தறிவற்றச் செயலாகும்.
இயற்கையின் இயல்பான செயல்பாடுகளையும், அறிவியல் விதிகளையும் புரிந்து கொள்ளாமல், எல்லாவற்றிலும் அற்புதங்களைத் தேடுவது மனிதனின் உளவியல் பலவீனத்தையே காட்டுகிறது.
அமர்நாத் பனி லிங்கமும் புவி வெப்பமயமாதல் முரணும் (The Great Paradox): இங்குதான் பக்திக்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய முரண்பாடும், போலித்தனமும் வெளிப்படுகிறது. வீட்டில் இருக்கும் குளிரூட்டிப் பெட்டியின் பனிக் கட்டிக்குக் குடமுழுக்கு நடத்தும் கூட்டம், இயற்கையான சுற்றுச்சூழல் சீரழிவால் அழியும் அமர்நாத் பனி லிங்கத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
புவி வெப்பமயமாதல் (Global Warming), சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, அமர்நாத் குகையில் பனி லிங்கம் முழுமையாக உருவாகாமலேயே உருகி மறைகிறது.
இயற்கையைப் பாதுகாக்காமல் காடுகளை அழித்து, வாகனப் புகையைத் தந்துவிட்டு, உண்மையான பனிப்பாறை உருகுவதைத் தடுக்கத் துப்பில்லாத மனித இனம், வீட்டு குளிரூட்டிப் பெட்டியில் உறைந்த பனியைத் தெய்வீகம் எனப் போற்றுவது ஒரு மாபெரும் பகுத்தறிவு முரணாகும்.
அறிவியல் பார்வையைச் சிதைப்பதா?
கடவுள் நம்பிக்கை ஒருவருடைய தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்த நம்பிக்கை ஒருபோதும் பகுத்தறிவையும், சுயசிந்தனையையும், அறிவியல் பார்வையையும் மழுங்கடிக்கக் கூடாது.
கான்கிரீட் குப்பைகளிலும், வீட்டு குளிரூட்டிப் பெட்டிகளிலும் கடவுளைத் தேடுவதை நிறுத்திவிட்டு, மாசடைந்து வரும் புவியைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சுற்றியிருக்கும் இயற்கையைப் பாதுகாப்பதும், சக மனிதர்களை நேசிப்பதுமே இந்த மனித சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்!
