சென்னை, ஆக. 12- புலன் விசாரணை என்ற பெயரில் தன்னை காவல் துறையினர் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், “விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிடக்கோரி ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. காவல் துறையினரின் புலன் விசாரணையில் பொதுவாக உயர்நீதிமன்றம் தலையிடுவதில்லை. அதேநேரம் புலன் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதை கண்டு கொள்ளாமல் இருக்கவும் முடியாது. எனவே, கீழ்கண்ட விதிமுறைகளை உருவாக்குகிறேன். விசாரணைக்கு அழைக்கப்படுபவருக்கு முறையாக அழைப்பாணை அனுப்ப வேண்டும். அதில் எந்த தேதியில், எந்த நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என குறிப்பிட வேண்டும்.
விசாரணை நடவடிக்கைகளை, காவல் நிலைய குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டும். விசாரணைக்கு அழைக்கப்படும் யாரையும் துன்புறுத்தக்கூடாது” என்று உத்தரவிட்டுள்ளார்.
