திருவனந்தபுரம், ஆக.11- ஹிந்துத்துவ சித்தாந்தவாதியும், சுதந்திரப் போராட்ட வீரருமான வி.டி.சாவா்க்கா் குறித்து பள்ளியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் சா்ச்சையான கேள்வி கேட்கப்பட்ட நிலையில், இதுதொடா்பாக விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டது.
காசா்கோடு, கும்ப்ளா மற்றும் மஞ்சேஷ்வா் துணை மாவட்டங்களில் உள்ள தொடக்க நிலைப் பள்ளி மாணவா்களுக்கு கடந்த 6.8.2026 அன்று சுதந்திர நாள் குறித்த வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.
அப்போது ஆங்கிலேயரிடம் அதிக தண்டனை பெற்ற சுதந்திரப் போராட்ட வீரா் யார் என கேட்கப்பட்ட கேள்விக்கு சாவா்க்கா் என பதில் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் கேரளத்தில் பெரும் சா்ச்சையாக மாறியதோடு அரசியல் ரீதியான விமா்சனங்களும் எழத் தொடங்கியது.
இதுகுறித்து கண்ணூரில் செய்தியாளா்கள் சந்திப்பின்போது பேசிய கேரள முன்னாள் முதலமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன், ‘காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அரசுடன் இணைந்து ஒன்றிய அரசும் ஆா்எஸ்எஸ்ஸும் வரலாற்றை திருத்தி எழுத முயற்சிக்கின்றன. சாவா்க்கரின் உண்மை வரலாற்றை மறைத்து அவருக்குப் புகழ் சோ்க்கும் பிம்பங்களை கட்டமைக்கின்றன’ என விமா்சித்தார்.
சாவா்க்கா் குறித்த கேள்விக்கு அய்யுஎம்எல் கட்சி, டிஒய்எஃப்அய், எஸ்எஃப்அய் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக பொதுக் கல்வி இயக்குநரகம் விசாரணை நடத்த பொதுக் கல்வித் துறை அமைச்சா்
என்.சம்சுதீன் உத்தரவிட்டார். மேலும் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அவா் உத்தரவிட்டதாக பொதுக் கல்வி அமைச்சகம் 8.8.2026 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
