கோவை, ஆக. 11- ஆரம்ப நிலை அறிவுத்திறன் பரிசோதனை (IQ Test) செய்து மருத்துவச் சான்றிதழ் பெற கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்திய மறுவாழ்வு ஆணையம் மாற்றுத்திறனை 21 வகைகளாகப் பிரித்துள்ளது. அரசுச் சலுகைகள், ஒருங்கிணைந்த நுண்அடையாள அட்டை (UDID) மற்றும் கல்வி உதவிகளைப் பெற IQ சான்றிதழ் மிகவும் அவசியமாகும். தற்போது மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக மனநலக் குறைபாடு, ஆட்டிசம் போன்ற பாதிப்புகளுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் 6 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 3,125 மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ளனர். இதில் 1,614 பேர் மனநலக் குறைபாடுள்ளவர்கள் (5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனி).
பொள்ளாச்சி, வால்பாறை என மாவட்டம் முழுவதற்கும் கோவை அரசு மருத்துவமனையில் இயங்கும் ஒரே ஒரு மாவட்ட ஆரம்பநிலை பயிற்சி மய்யத்தையே நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. அங்குப் பணியில் உள்ள ஒரே ஒரு தொகுப்பூதிய மனநல ஆலோசகரால், நாளில் குறைந்த அளவிலான குழந்தைகளையே பரிசோதிக்க முடிகிறது.
“வட்டார அளவிலான முகாம்களுக்குச் சென்றால், மருத்துவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு திருப்பி அனுப்புகின்றனர். அங்குச் சென்றாலும் மறுமதிப்பீடு என்ற பெயரில் அலைக்கழிக்கப்படுகிறோம். தவிர, அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனைகளில் தரப்படும் IQ சான்றிதழ்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஏற்பதில்லை.” எனப் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் உள்ளடங்கிய கல்விக்கான பன்னாட்டு ஆலோச கர் மருத்துவர் எம்.என்.ஜி.மணி தெரிவிக்கையில்: பொள்ளாச்சி, மேட்டுப் பாளையம் அரசு மருத்துவமனைகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பரிசோதனைக்கென வாரத்தில் இரண்டு நாட்களை தனிச் சிறப்பாக ஒதுக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு IQ மதிப்பீடு செய்வதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதன்மையர் (டீன்) கீதாஞ்சலி கூறுகையில்:
“குழந்தைகளை அலைக்கழிப்பது எங்கள் நோக்கமல்ல. புதிய நடைமுறை களின்படி ஒரு குழந்தையை மதிப்பீடு செய்து, குடும்பத்தினரிடம் விசாரிக்க 30 முதல் 40 நிமிடங்கள் ஆகின்றன. இதனால் தான் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் முயற்சியில் வட்டார அளவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன” என்றார்.
