விலை பேசப்படும் ஜெகத்குருக்கள் – சாமியார்கள்!

ஸநாதன தர்மத்தின்  உயரிய ஆன்மிகப் பதவியான ‘மகாமண்டலேஸ்வர்’ மற்றும் ‘ஜகத்குரு’ போன்ற பதவிகள், கோடிக்கணக்கான பணத்திற்கும் நிலத்திற்கும் விற்பனை செய்யப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

ஒரு தனியார் யூடியூப் ஊடகம் ஒன்றின் செய்தியாளர், அஜய் வாஜ்பாய் என்பவர் அமெரிக்காவிலிருந்து திரும்பிய முன்னாள் பொறியாளராகவும், தொழில் அதிபராகவும் நடித்து, நாட்டின் முன்னணி அகாடாக்களின் மூத்த ‘மகந்த்’களைச் சந்தித்து யாருக்கும் தெரியாமல் நடத்திய உரையாடலில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

புலனாய்வில் வெளிவந்த முக்கிய விவரங்கள்:

“சாதாரண சாதுவாக இல்லாமல் நேரடியாக மகாமண்டலேஸ்வர் நிலையை அடைய விரும்புகிறேன்” என்று செய்தியாளர் அணுகியபோது, நாட்டின் பிரதான சாமியார்கள் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகள்:

  1. ஸ்ரீ பஞ்சதஷ்நாம் ஜூனா அகாடா (மகந்த் ஹரி கிரி)

பதவி ஆஃபர்: மகாமண்டலேஸ்வர் பட்டம்.

நிபந்தனை: குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலத்தை ஜூனா அகாடா தலைவரின் பெயரில் ‘தானமாக’ப் பதிவு செய்ய வேண்டும். உஜ்ஜைன் மற்றும் மீரட்டில் உள்ள நிலங்களை வாங்கித் தருமாறு வலியுறுத்தல்.

இதர கோரிக்கைகள்: தங்க சிம்மாசனம், விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் மற்றும் சொத்துகள் அகாடாவின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

உறுதிமொழி: நாசிக் கும்பமேளாவில் பதவி வழங்கப்படும்; உலகம் முழுவதும் மதப் பிரச்சாரம் செய்ய அனுமதி.

  1. நிர்வாணி அனி அகாடா (ஸ்ரீ மகந்த் முரளிதாஸ்)

மகாமண்டலேஸ்வர் மட்டுமல்லாமல், ‘ஜகத்குரு’ பதவியும் வழங்கப்படும். நிபந்தனை: ரூ.4 கோடி பணம், ஒரு சிறிய ரக விமானம் (Private Jet) மற்றும் வெளிநாட்டில் மடம் கட்ட இடம் ஒதுக்க வேண்டும்.

“உங்களுக்கு நல்ல அறிவிருக்கிறது; ஜகத்குரு ஆனால் 200 முதல் 400 மகாமண்டலேஸ்வர்கள் உங்களுக்குக் கீழ் பணியாற்றுவார்கள்” என உறுதியளிக்கப்பட்டது.

  1. நிர்மோஹி அகாடா (மகந்த் ராஜேந்திர தாஸ்)

முதலில் சீடராக ஏற்றுக்கொண்டு, பின்னர் கும்பமேளாவில் பதவி உயர்வு.

அபிஷேக விழாவிற்கு ரூ.20 லட்சம் ரொக்கம்; நிலம் அகாடா பரிஷத் பெயரில் எழுதப்பட வேண்டும்.

ராமாயணம், கீதை படிக்க வேண்டும் மற்றும் மாலை ஜபம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமெரிக்கா செல்ல அனுமதி.

ஏற்ெகனவே கும்பமேளாவில், பாலிவுட் முன்னாள் நடிகையும், போதைப்பொருள் வழக்கு மற்றும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புபடுத்தப்பட்டவருமான மம்தா குல்கர்னிக்கு ‘மகாமண்டலேஸ்வரி’ பட்டம் வழங்கப்பட்டது – பெரும் புயலைக் கிளப்பியது.

2024-ஆம் ஆண்டு மும்பை காவல்துறை இவர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து நீதிமன்றம் இவரை விடுவித்தது. ஆப்பிரிக்க நாட்டிலிருந்து சுமார் ரூ.17 கோடி கைமாறிய பிறகே அவருக்கு இந்த ஆன்மிகப் பதவி வழங்கப்பட்டது என செய்தி உலா வந்ததுண்டு.

நாசிக் மற்றும் அரித்துவாரில் நடந்த இந்த சந்திப்புகளின் காட்சிப் பதிவு ஆதாரங்கள் மற்றும் உரையாடல்கள் தற்போது வெளியாகி, ஆன்மிகப் பதவிகள் வர்த்தகப் பொருட்களாக மாற்றப்படுவதைக் காட்டும் சான்றாக மாறியுள்ளன.  ஆன்மிகம் என்பதே வணிகப் பொருள்தானே! பல இடங்களில் அது முதலீடு இல்லாத வியாபாரம் அல்லது மிகக் குறைந்த முதலீடு தேவைப்படும் வியாபாரம்!

ஒரு கல்லோ, சிலையோ, மரமோ, மண் மேடோ, கரையான் புற்றோகூட போதுமானது. ஆனால் தொழிலை அடிப்படையில் இருந்து தொடங்க வேண்டும். அந்தப் பொறுமையில்லாவிட்டால் முதலீடு செய்வதற்குப் பணமிருந்தால், நேரடியாக பெரிய தொழிலாகப் பார்த்து விலைக்கு வாங்கி விடலாமே என்று அடுத்த கட்டத்திற்குச் சென்றிருக்கிறார்கள்!

இது நடைமுறையில் இருப்பதன் அடையாளம்தான், இந்தச் செய்தியாளர் போய் சந்தித்தவுடன், அதற்கான விலைப் பட்டியல் போல, நிபந்தனைகள் தரப்பட்டுள்ளன.

அப்படியும் இந்த  ‘ஜகத்குரு’ பட்டங்கள், ‘மகா மண்டலேஸ்வர்’ பதவிகள் எல்லாம் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தரப்படுமா? அதிலும் ஜாதி முதல் தகுதியாக இருக்கும்தானே! என்ன குற்றம் செய்தாலும் பரிகாரம் செய்தால், பாவ மன்னிப்புப் பெற்றால் தப்பித்துக் கொள்ளலாம் என்று வாய்ப்பு வழங்குவதுதானே இவர்களின் ஆன்மிகம்!

ஸநாதனத்தைப் பற்றிப் பேசினால் சண்டமாருதம் செய்கிறார்கள். வழக்குத் தொடுக்கிறார்கள்.

ஆனால் ஸநானத்தின் உச்சக் கட்டப் பதவிகள் என்று கூறப்படும் ஜெகத்குரு சங்கராச்சாரி போன்ற பதவிகள் விலை  பேசப்படுகின்றன என்பது எத்தகைய அவலம்!

சாமியார்கள் என்ற வேடமே மக்களை மயக்கி, ஊரை அடித்து உலையில் போடும் சங்கதி தான் என்பது புரியவில்லையா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *