‘வெள்ளுடை வேந்தரைப்’ போற்றுவோம்!

3 Min Read

சர். பிட்டி தியாகராயர் நீதிக்கட்சியின் மூத்த தலைவராகவும், சமூக நீதிக்கான அடித்தளத்தை அமைத்தவராகவும் போற்றப் படுபவர். நீதிக்கட்சியின் வரலாற்றில் அவரது பங்களிப்பு மிகவும் மகத்தானது.

1916-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் நாள், டாக்டர் டி.எம். நாயர் மற்றும் டாக்டர் சி. நடேசனார் ஆகியோருடன் இணைந்து தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தை தியாகராயர் தோற்றுவித்தார். பார்ப்பனரல்லாத மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அரசியல் உரிமைகளுக்காகப் போராடுவதே இக்கட்சியின் முக்கிய நோக்கமாகும்.

கட்சியின் கொள்கைகளைப் பரப்ப ‘ஜஸ்டிஸ்’ (Justice) என்ற ஆங்கில இதழைத் தொடங்கினர். இதனாலேயே இக்கட்சிக்கு ‘நீதிக்கட்சி’ என்ற பெயர் நிலைத்தது.

1916-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் (இப்பொழுது ‘திராவிட மாடல்’ ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டு பொலிவுடன் ஒளிர்கிறது) தியாகராயர் வெளியிட்ட ‘பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை’ (Non-Brahmin Manifesto) தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.

‘‘அரசுப் பணிகளில் பார்ப்பனர் அல்லாதாருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்’’ என்று அவர் முழங்கினார்.

கல்வி மற்றும் சமூக அந்தஸ்தில் பின் தள்ளப்பட்ட பெரும்பான்மை மக்களின் நிலையை இந்த அறிக்கை உலகிற்கு உரக்கச் சொன்னது.

சென்னையின் மேயராக  தியாகராயர் இருந்தபோது, கல்வித் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்.

1920-ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ஒரு மாநகராட்சிப் பள்ளியில் முதன்முதலாக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

வறுமையின் காரணமாகக் குழந்தைகள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்கக் கூடாது என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதுவே பின்னாளில் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்திற்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் காலைச் சிற்றுண்டி வழங்கும் அளவுக்கு நீட்சி பெற்றது.

1920-இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.

பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவராக இருந்தும், தியாகராயர் முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்தார். மாறாக, கடலூர் ஏ.சுப்பராயலு ரெட்டியாரை முதலமைச்சராக முன் மொழிந்தார்.

இவரது வழிகாட்டலில் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த போதுதான் ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ (Communal G.O.) அரசாணை முதலில் பிறப்பிக்கப்பட்டது. இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்குப் பெரும் பலமாக அமைந்தது.

“வெள்ளுடை வேந்தர்” என்று அன்போடு அழைக்கப்பட்ட சர். பிட்டி. தியாகராயர், அதிகாரத்தின் பின்னே ஓடாமல் கொள்கைக்காக வாழ்ந்தவர். சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் சமூக நீதிப் பயணத்திற்கும் அவர் இட்ட அடித்தளம் இன்றும் நிலைத்து நிற்கிறது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சர். பிட்டி தியாகராயருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம், தமிழ்நாடு வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகவும், அவர் ஏன் தீவிரமாக ‘பார்ப்பனரல்லாதோர்’ இயக்கத்தைத் தொடங்கினார் என்பதற்கான பின்னணியாகவும் கருதப்படுகிறது.

சர். பிட்டி. தியாகராயர் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் குடமுழுக்குப் பணி களுக்காக ரூ.10,000 (அக்காலத்தில் இது மிகப்பெரிய தொகை) அவர் நன்கொடையாக வழங்கினார்.

கோவிலின் குடமுழுக்கு நடைபெற்றபோது ஒரு அதிர்ச்சிகரமான பாகுபாடு நிகழ்ந்தது:

கோவிலுக்காக பெரும் பொருளுதவிகளையும் வழங்கிய தியாகராயரை, அவர் ‘பார்ப்பனர் அல்லாதவர்’ என்ற ஒரே காரணத்திற்காக, குடமுழுக்கின்போது அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் அமர அவர் அனுமதிக்கப்படவில்லை! அதே  நேரத்தில் சென்னை மாநகராட்சியில் அவருக்குக் கீழ் பணியாற்றிய சிப்பந்திக்குப் ‘பார்ப்பனர்’ என்ற காரணத்தால் மேடையில் இடம் கிடைத்தது.

கோவிலின் வளர்ச்சிக்கு நிதி வழங்கிய ஒரு தலைவரை, மாநகராட்சித் தலைவரை ஜாதி ரீதியான படிநிலையைக் காரணம் காட்டி ஒதுக்கியது அவரைப் பெரிதும் காயப்படுத்தியது.

இந்த அவமதிப்பு வெறும் தனிநபர் அவமதிப்பாக அவர் பார்க்கவில்லை. சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்திலும், அதிகாரத்திலும் இருப்பவருக்கே இந்த நிலை என்றால்,  பார்ப்பனர் அல்லாத சாமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்று அவர் சிந்திக்கத் தொடங்கினார்.

இந்த நிகழ்வுதான் ‘எவ்வளவு செல்வம் இருந்தாலும், கல்வி இருந்தாலும், ஜாதி என்ற பெயரால் ஒருவன் ஒடுக்கப்படு கிறான்’ என்ற உண்மையை அவருக்கு உணர்த்தியது.

இதுவே அவரை டாக்டர் டி.எம். நாயர் மற்றும் சி. நடேசனார் ஆகியோருடன் இணைந்து தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தை (நீதிக்கட்சி) தொடங்கத் தூண்டியது.

மத மற்றும் சமூகச் சீர்திருத்தம்: கோவில்களில் நிலவும் அதிகாரப்போக்கை மாற்றவும், அனைத்து சமூகத்தினருக்கும் சம உரிமை பெற்றுத் தரவும் அவர் அரசியல் ரீதியாகப் போராட முடிவெடுத்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் அவர் தனது வாழ்நாள் முழுவதும் பார்ப்பனர் அல்லாதோரின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உரிமைகளுக்காகப் போராடும் “வெள்ளுடை வேந்தராக” மாறினார்.

அவரின் பிறந்த நாளான இன்று (27.4.1852) அவர் தூக்கிப் பிடித்த சமூகநீதிக் கொடியை மேலும் உயர்த்திப் பிடிக்க சூளுரைப்போம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *