“ஒருவரின் செலவு இன்னொருவரின் வரவு ஆகிறது” என்பது தான் பொருளாதாரத்தின் இயங்கு முறை! பொருளாதாரத்தின் அடிப்படையும் அதுதான். இந்த வருமானம் மீண்டும் செலவாக மாறும்போது பொருளாதாரச் சுழற்சி தொடர்ந்து இயங்குகிறது. மக்கள் செலவழிக்கும் திறன் குறைந்தால் தேவை குறைந்து பொருளாதார மந்தநிலை ஏற்படலாம். அதனால் அரசுகள் சில நேரங்களில் நேரடிப் பண உதவி அல்லது பிற ஊக்கத் திட்டங்கள் மூலம் நுகர்வை அதிகரிக்க முயல்கின்றன. கரோனா தொற்றுக் காலத்தில் கூட பல நாடுகளும் நேரடியாக மக்களுக்கு பணத்தை அனுப்பி செலவழிக்கச் செய்தன. அதிகரித்த நுகர்வு மூலம் நிறுவனங்களின் விற்பனை மற்றும் வருவாயை உயர்த்தி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க முடியும். நீண்ட காலத்தில் உற்பத்தித்திறன், விற்பனை, முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை உயரும்போது ஊதியமும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
ஆனால், இவையெல்லாம் வெறும் ஏட்டளவில் புள்ளிவிவரங்களாக நின்றுவிடக் கூடாது. நடப்பில் இருக்க வேண்டும். இந்தியாவில், ஜூன் 2025 முதல் மார்ச் 2026 வரையிலான காலத்தில், பதிவு செய்யப்பட்ட ஆண்டு கிராமப்புற ஊதிய வளர்ச்சி சீரான 6 சதவீதத்திலிருந்து 17-18 சதவீதமாக உயர்ந்ததாகவும், ஒரே மாதத்தில் சராசரி அன்றாட ஊதியம் 12.7 சதவீதம் அதிகரித்ததாகவும் இந்திய ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தொழிலாளர் நலப் பணியகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
“ஆனால், உண்மையில் தொழிலாளர் சூழலில் இதற்கான எந்தவொரு தெளிவான மாற்றமும் காணப்படவில்லை. இதை உற்றுநோக்கும்போது, இந்த உயர்வு கிராமப்புற செழிப்பைக் குறிப்பதாக இல்லாமல், புள்ளிவிவரங்கள் சார்ந்ததாகவே, குறிப்பாக தரவு சேகரிப்பு முறையில் செய்யப்பட்ட ஒரு மறைமுகமான மாற்றத்தின் விளைவாகவே தெரிகிறது“ என்று பொருளாதார வல்லுநர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
தொழிலாளர் நலப் பணியகம் (Labour Bureau) இது குறித்து எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை; பத்திரிகை அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. ஆனால், அதிகாரிகளிடம் நேரடியாக விசாரித்தபோது இதற்கான காரணம் தெரியவந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 1986-1987-அய் அடிப்படை ஆண்டாகக் கொண்டிருந்த பழைய முறைக்கு மாற்றாக, விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) தொடரின் மாதிரிக் கட்டமைப்பை (Sampling Framework) தொழிலாளர் நலப் பணியகத்தினர் கைக் கொண்டுள்ளனர்.
இதன்படி, மாதிரி சேகரிப்புக்கான பரப்பு 20 மாநிலங்களில் உள்ள 600 கிராமங்களிலிருந்து 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 787 கிராமங்களாக விரிவு படுத்தப்பட்டது; இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களும், டில்லி (NCT), கோவா ஆகிய யூனியன் பிரதேசங்களும் முதன்முறையாக இக் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டன. மாதிரி சேகரிப்பு நோக்கங்களுக்காக, ஏற்ெகனவே இருந்த சில மாநிலங்கள் பிரிக்கப்பட்டன (எ.கா., பீகார்/ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம்/உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம்/சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம்/தெலங்கானா).
இந்தியாவின் மொத்தப் பணியாளர்களில் இந்த புதிதாகச் சேர்க்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 1.2 சதவீதம் மட்டுமே என்றாலும், புதிய தரவு சேகரிப்புப் புள்ளிகளின் மொத்த மாதிரியில் (Sample Data) இது 11 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அதாவது அதிக மாதிரிகள் இப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாகத்தான் ஊதிய அளவு உயர்ந்ததுபோல தோற்றம் தருகிறது. மிக முக்கியமாக, புதிதாகச் சேர்க்கப்பட்ட பகுதிகளில் விவசாயம் சார்ந்த வேலைவாய்ப்புகள் மிகக் குறைவாகவும், உயர் திறன் கொண்ட வேறு தொழில் சார்ந்த பணியாளர்கள் அதிகமாகவும் இருப்பதால், அங்குள்ள சராசரி ஊதியம் பழைய மாதிரிப் பட்டியலை விட 50-55 சதவீதம் அதிகமாக உள்ளது. உண்மையில், ஊதியத் தரவுகளை ஆய்வு செய்து பார்க்கையில், உண்மையான ஊதிய வளர்ச்சி ஆண்டுக்கு சுமார் 4.3 சதவீதமாகவே இருந்திருக்கும் என்பது தெரியவருகிறது; இது கடந்த நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த வளர்ச்சியாகும் என்று அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதற்கெல்லாம் மேற்கு ஆசியப் போர்களைக் காரணம் காட்ட முடியாது. அதற்கு 10 மாதங்களுக்கு முன்பே இந்தப் பிரச்சினை இருந்து வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்புவதாகத் தரவுகள் சொல்கின்றன. இது மீண்டும் ஊதிய விகிதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். எரிவாயு உள்ளிட்ட செலவுகள் அய்ந்து மடங்கு ஏறியுள்ளன. இவற்றால் செலவு அதிகரித்துள்ளது; ஆனால், வருவாய் பெருகவில்லை. இந்த நிலையில் ‘சூப்பர் எல்நினோ’ என்னும் காலநிலைப் பிரச்சினை விவசாயத்தையும், விவசாயத் தொழிலாளர்களையும் என்ன நிலைக்குத் தள்ளும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்நிலையில் கணக்கீடுகளுக்கான முறையை மாற்றுவதன் மூலமும், புள்ளிவிவரங்களை உருவாக்குவதன் மூலமும் இந்தச் சூழலையெல்லாம் மாற்றிவிடலாம் என்று கருதுகிறதா ஒன்றிய அரசு? ‘சர்க்கரை’ என்று ஏட்டில் எழுதி வைத்துவிட்டால் இனித்து விடுமா? இதனை முழுதாக ஏழை, எளிய மக்கள் தான் அனுபவிக்கப் போகிறார்கள். அதன் விளைவு பொருளாதாரச் சுழற்சியை மந்தப்படுத்தும்.
‘‘கடந்த 2018ஆம் நிதியாண்டு முதல் 2024 வரை 16.8 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாக மோடி அரசு, அப்போதே ரிசர்வ் வங்கி மூலம் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கியது. அதனை நாங்கள் அப்போதே சுட்டிக் காட்டி னோம். பின்னர், அந்த முயற்சிகளுக்காக ரிசர்வ் வங்கியின் தலைமைக்கு மோடி அரசில் முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டு வெகுமதி அளிக்கப்பட்டது. அதேபோல இப்போது ஊதிய விகிதம் அதிகரித்திருப்பதாக மோடி அரசு தரவுகளை மாற்றிச் (Data doctoring) சொல்கிறது” என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
உடம்பில் பிரச்சினை இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளும்போதுதான், எப்படி அதைச் சரி செய்வது என்று மூளை சிந்திக்கும். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கும், மருத்துவரை ஏமாற்றுவதற்கும் ரத்தப் பரிசோதனை முடிவு களைத் திருத்தினால் நட்டம் யாருக்கு? புள்ளி விவரங்களை ‘உருவாக்கும்’ ஒன்றிய அரசுதான் சிந்திக்க வேண்டும்.
