‘கரப்பான்பூச்சி ஜனதா’ கொஞ்சகாலம் கண்காணிப்பிலேயே இருக்கட்டும்!

நாம் எதிர்க்கும் பா.ஜ.க.வை, தத்துவார்த்தப் பார்வையில் அல்லாமல் சில நடப்புப் பிரச்சினைகளுக்காக
சி.ஜே.பி. எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக எவரையும் ஆதரித்துவிட முடியாது!
இளைஞர்களின் எதிர்ப்புணர்வையும், போராட்டங்களையும் நாம் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை! அவற்றைத் தமதாக்கி லாபம் பெற எண்ணுவோர்பற்றி கவலை!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

‘‘நாம் எதிர்க்கும் பா.ஜ.க.வை, தத்துவார்த்தப் பார்வையில் அல்லாமல் சில நடப்புப் பிரச்சினைகளுக்காக சி.ஜே.பி. எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, அந்தக் குழுவை சமயோசிதமாக ஆதரிக்கலாம் என்று (Political Expediency) எவரையும் ஆதரித்துவிட முடியாது. இளைஞர்களின் எதிர்ப்புணர்வையும், போராட்டங்களையும் நாம் குறைத்து மதிப்பிட வேண்டிய தில்லை என்றாலும், அவசரப்பட்டு விழுந்து ஆதரிக்க வேண்டியதில்லை. ‘கரப்பான்பூச்சி ஜனதா’ கொஞ்சகாலம் கண்காணிப்பிலேயே இருக்கட்டும்’’ என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

Contents
நாம் எதிர்க்கும் பா.ஜ.க.வை, தத்துவார்த்தப் பார்வையில் அல்லாமல் சில நடப்புப் பிரச்சினைகளுக்காக சி.ஜே.பி. எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக எவரையும் ஆதரித்துவிட முடியாது! இளைஞர்களின் எதிர்ப்புணர்வையும், போராட்டங்களையும் நாம் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை! அவற்றைத் தமதாக்கி லாபம் பெற எண்ணுவோர்பற்றி கவலை!திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் புத்தகத்தைத் தூக்கிக் காட்டியபடி…‘தான் ஒரு தலித்’ என்று ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்திருந்தார்ஆர்.எஸ்.எஸ். எப்போதும் ஒரே வடிவில், ஒரே செயல்திட்டத்துடன் இருப்பதில்லை!எவ்வளவோ பார்த்துவிட்டோம்… இதைப் பார்க்கமாட்டோமா?

அவரது அறிக்கை வருமாறு:

கடந்த மாதம் 15 ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையற்ற இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என்றும், ஒட்டுண்ணிகள் என்றும், வேலையில்லாத காரணத்தால் தகவல் அறியும் உரிமைப் போராளிகளாகவும், பொது நல வழக்குத் தொடுப்பவர்களாகவும் கிளம்பிவிட்டார்கள் என்பதாகவும் நீதிமன்றத்திலேயே தெரிவித்தார் என்றொரு செய்தி வெளியானது. பின்னர் அடுத்த நாளே அதனை மறுத்து, ‘‘தாம் குறிப்பிட்டது போலிச் சான்றிதழ்கள் பெற்று வழக்குரைஞர்களாகவும், வேலையிலும் இருக்கும் இளைஞர்களைப் பற்றியே என்றும், பொதுவாக அனை வரையும் குறிப்பதல்ல’’ என்றும் ஒரு விளக்கம், நீதிபதி தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது.

‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’

ஆனால், அவரது இந்தக் கருத்து இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது உண்மை. குறிப்பாக கரப்பான்பூச்சிகள் – காக்ரோச்சஸ் என்று அவர் கூறிய வார்த்தையையே கொண்டு ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ என்ற பெயரில் சமூக ஊடகங்களில் ஒரு பக்கம் உருவாக்கப்பட்டு, அவரது கருத்தையும், நாட்டு நடப்புகளையும் எள்ளல் தொனியில் பரிகசிக்கும் பதிவுகள் வெளியிடப்பட்டன. இளைஞர்களை வெகு வாகக் கவர்ந்த இந்தத் தலைப்பு எதிர்ப்பு, ஒரே நாளில் பெரும் வரவேற்பைப் பெற்று, பல லட்சக்கணக்கானோர் விரும்பும் சமூக ஊடகப் பக்கமாக மாறிவிட்டது. பாரதிய ஜனதா கட்சிக்கு (பி.ஜே.பி) எதிராக சி.ஜே.பி. என்னும் பெயரில் உருவான இந்தப் பெயர் திடீரென இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி, அது ஓர் அமைப்பாக உருவாவதற்கான சூழல் எழும் முன்னே அந்தப் பெயரில் மதுரையில் ஒரு பேரணி எல்லாம்கூட நடைபெற்று முடிந்தது.

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்
புத்தகத்தைத் தூக்கிக் காட்டியபடி…

இச் சமூக ஊடகப் பக்கத்தை உருவாக்கி நடத்துபவர் யார் என்று தேடி, அமெரிக்காவில் பயிலும் மகாராட்டிராவைச் சேர்ந்த ஊடகவியல் மாணவர் அபிஜித் தீப்கே என்பவர் தான் என்பதை அறிந்து, அவரும் இணையம் வழியாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். இதனிடையே சி.பி.எஸ்.இ தேர்வு விடைத்தாள் திருத்தக் குளறுபடி, நீட் தேர்வு மோசடிகள் என்று எழுந்த பிரச்சினைகளையும் சி.ஜே.பி. கண்டிக்க, அதனையொட்டி டில்லியில் போராட்டத்தையும் அந்த அமைப்பு அறிவித்தது. போராட்டத்திற்கு அபிஜித் தீப்கே நேரில் வந்தார். பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் புத்தகத்தைத் தூக்கிக் காட்டியபடி அவர் விமான நிலையத்தை விட்டு வெளியில் வரும் காட்சி ஊடகங்களில் வெளியானது. இளைஞர்கள் பலர் பங்கேற்க, புது டில்லி ஜந்தர் மந்தரில் ‘‘போராட்டமும்’’ நடந்துள்ளது.

இளைஞர்களின் சமூகக் கோபமும், அது இப்படி பல வடிவங்களிலும் வெளிவருவதும் இயல்பானதே! தொடர்ந்து பல நாடுகளிலும், மாநிலங்களிலும் கூட அமைப்பு ரீதியாக அல்லாத இத்தகைய திடீர் போராட்டங்கள் பேருருக் கொள்வதையும் பார்த்து வந்திருக்கிறோம். எந்தவொரு போராட்டமும், அதற்கான உணர்வும் ஓரிரு பிரச்சினைகளுக்கான உடனடி எதிர்வினையாக அமைவதை மட்டும் வைத்து நாம் முடிவெடுத்துவிட முடியாது. ஏமாந்துவிடக் கூடாது!

இந்தியாவில் இத்தகைய திடீர் போராட்டங்களின் வரலாற்றுப் பின்னணி என்ன? அவர்களின் கருத்தியல் அல்லது கொள்கைத் தெளிவு என்ன என்பதைப் பொறுத்து தான், இத்தகைய போராட்டங்களை முன்னெடுப்போர் அல்லது அதன் வழி நடப்போரை மதிப்பிட முடியும்.

‘தான் ஒரு தலித்’ என்று
‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்திருந்தார்

‘இட ஒதுக்கீடு பற்றி சிஜேபி பேச மறுக்கிறதே, சமூக நீதி குறித்தும், ஒடுக்கப்பட்டோர் மீதான பிரச்சினைகள் குறித்தும் இந்த அமைப்பினர் என்ன நினைக்கிறார்கள்?’ என்ற கேள்வி எழுந்தபோது, இந்த சி.ஜே.பி. நிறுவனர் அபிஜித் தீப்கே, ‘தான் ஒரு தலித்’ என்றும், அதுவே போதுமான பதிலைச் சொல்லும் என்றும் ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்திருந்தார். உடனே, உயர்ஜாதியினர் பலர், அதற்கு மோசமான எதிர்வினைகளை வழக்கம் போல ஆற்றியிருந்தனர். “ஆக, தன்னைத் தானே தலைவராக முன்னிறுத்திக் கொண்ட இந்த ஜென் ஸீ (Gen Z) தலைவர், ‘‘தகுதி – திறமைக்கு எதிரானவர் அப்படித்தானே!” என்று தொடங்கி, இன்னும் ஏராளமான வசை மொழிகள் வரை பொழிந்துள்ளனர். ஒருவர் தான் என்ன சமூகத்தவர் என்று சொன்னதும், அதைக் கொண்டே அவரை இழிவுபடுத்தும் இந்த மோசமான போக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இளைஞர்களிடமும் ஏராளமாக இருக்கிறது இந்தியாவெங்கும்! முகமூடி புரிகிறதா?

அதே வேளை, 30 வயது கொண்ட அந்த இளைஞர் அபிஜித் தீப்கே, முன்பு டில்லியில் படித்தபோது 2020 முதல் 2023 வரை ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளராக, சமூக ஊடகங்களில் செயல்படுபவராக இருந்திருக்கிறார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஊழல் என்பதை முன்னிறுத்தி, ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் அன்னா ஹசாரே என்பவர் தொடங்கிய போராட்டத்தில் பங்கேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற சிலரால் தோற்றுவிக்கப்பட்டது தான் ஆம் ஆத்மி! அது எப்போதும் சமூகநீதிக்கு ஆதரவாக இருந்ததில்லை, அதன் தலைவர் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவராகவே ஆரம்ப காலத்தில் சொல்லப்பட்டது – கட்சி உருவாகி, ஆட்சியில் அமர்ந்துவிட்ட பின்னரும் கூட இட ஒதுக்கீடு குறித்து எதிரான நிலைப்பாடுகளையே அவர்கள் கொண்டிருந்தார்கள். பொருளாதாரத்தில் நலிந்துள்ள உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீடு என்ற பா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு ஆதரவாகத் தான் இருந்தார்கள். அத்தகைய அமைப்பை ஆதரித்த ஒருவரை, அவரது சமூகத்தை வைத்து மட்டும் முடிவு செய்துவிட முடியாது.

ஆர்.எஸ்.எஸ். எப்போதும் ஒரே வடிவில்,
ஒரே செயல்திட்டத்துடன் இருப்பதில்லை!

இத்தகைய போராட்டங்களிலும், அமைப்புகளிலும், திடீர் ஈர்ப்பு காரணமாகப் பலர் இணைவதுண்டு. ஆனால், அவர்களின் கொள்கைப் பின்புலமும், பார்வையும் எப்படியிருக்கும் என்பதையும், அதை நெறிப்படுத்தக் கூடியதாக இத்தகைய அமைப்புகள் இருக்குமா என்பதையும் அவசரப்பட்டு முடிவு செய்ய முடியாது. கடந்த காலங்களில் இத்தகைய அமைப்புகள் வெகுஜனப் புத்திக்கு ஊட்டமளிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் பின்புலத்தில் தோற்றுவிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம். தமிழ்நாட்டிலும் கூட அப்படியொரு அமைப்பு ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் ‘ஆசீர்வாதத்துடன்’ ஆரம்பிக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம். ஆர்.எஸ்.எஸ். எப்போதும் ஒரே வடிவில், ஒரே செயல்திட்டத்துடன் இருப்பதில்லை என்பதையும் நாம் எச்சரிக்கையோடு நினைவு கொள்ள வேண்டும்.

முறையாகத் திரண்டெழுந்து ஒரு முழுமையான புரிதல் நிறைந்ததாக மாற வேண்டிய எதிர்ப்புணர்வுக்கு வடிகாலாகவும், இத்தகைய சூழலில் அரசுக்கும், ஆதிக்கத்திற்கும் எதிராக இளைஞர்கள் உண்மையான சமூகநீதி, திராவிட, பொதுவுடைமை இயக்கங்களுக்குச் செல்லாமல் மடை மாற்றவும் இத்தகைய அமைப்புகள் உருவாக்கப்படவோ அல்லது கொண்டு செல்லப்படவோ வாய்ப்புகள் நிறைய உண்டு. கடந்த காலங்களின் அனுபவம் அதுவே! பேரெழுச்சியுடன் வந்த சில அமைப்புகள் காலத்தால் காணாமல் போய்விடுகின்றன – அஸ்ஸாம் கண பரிஷத் போல!

ஏற்கெனவே இருக்கும் அமைப்புகள் மீது ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் பிம்பமும், இளைஞர்களுக்கு இருக்கும் சலிப்புமே இத்தகைய திடீர் அமைப்புகளை நோக்கி அவர்களைக் கொண்டு செல்கிறது. அது நெடுங்காலமாகப் பல்வேறு சூழல்களைப் பார்த்து, எதிர்கொண்டு, அமைப்பை நிருவகித்து, அதன் ஏற்ற இறக்கங்களை அனுபவித்து, கவனமாகச் செயல்பட்டு, பல சாதனைகளைப் புரிந்திருக்கும் அமைப்புகள் மீது ஊடகங்களும், ஆதிக்கவாதிகளும் உண்டாக்கியிருக்கும் திட்டமிட்ட சலிப்புணர்வு. இதையெல்லாம் எதிர்கொள்ளக் கூடியவர்களா? என்று யோசிக்கும் முன்பு, இதையெல்லாம் எதிர்நோக்கியிருப்பார்களா என்பதே சந்தேகம் தான்! ஆர்.எஸ்.எஸ். ஆக்டோபஸின் கரங்களின் அணைக்கவும், விழுங்கவும், அடிக்கவும், அழிக்கவும் நிரம்பப் பழக்கப்பட்டவை.

எவ்வளவோ பார்த்துவிட்டோம்
இதைப் பார்க்கமாட்டோமா?

நாம் எதிர்க்கும் பா.ஜ.க.வை, தத்துவார்த்தப் பார்வையில் அல்லாமல் சில நடப்புப் பிரச்சினைகளுக்காக அவர்களும் எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, அந்தக் குழுவை சமயோசிதமாக ஆதரிக்கலாம் என்று (Political Expediency) எவரையும் ஆதரித்துவிட முடியாது. இளைஞர்களின் எதிர்ப்புணர்வையும், போராட்டங்களையும் நாம் குறைத்து மதிப்பிட வேண்டி யதில்லை என்றாலும், அவசரப்பட்டு விழுந்து ஆதரிக்க வேண்டியதில்லை. கரப்பான்பூச்சி ஜனதா கொஞ்சகாலம் கண்காணிப்பிலேயே இருக்கட்டும்! எவ்வளவோ பார்த்துவிட்டோம்… இதைப் பார்க்கமாட்டோமா?

 

 

சென்னை        தலைவர்,

12.6.2026        திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *