வாசிங்டன், ஆக. 7- இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் கடந்த ஜூலை 14ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். மருத்துவரான அவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார்.
தற்போது பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் வெளிப் புறம் பொருத்தப்பட்டு இருக்கும் சூரிய மின் உற்பத்திக்கான சாதனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் எழுந்தது. இதற்காக நாசாவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஜெசிகாவும் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனனும் நேற்று (6.8.2026) விண்வெளியில் நடந்து சூரிய மின் உற்பத்தி சாதனத்தில் தேவையான மாற்றங்களை செய்தனர். இருவரின் விண்வெளிநடை, சுமார் 7 மணி நேரம் வரை நீடித்தது.
இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறியதாவது: பன்னாடு விண்வெளி நிலையத்தின் செயல்பாட்டுக்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படுகிறது. இதற்காக விண்வெளி நிலையத்தின் வெளிப்புறம் உள்ள 3பி பவர் சேனல் சாதனத்தில் நாசா விண்வெளி வீரர்கள் மாற்றங்களை செய்து உள்ளனர். இதன்மூலம் கூடுதல் சூரிய மின்சார தகடுகளை பதிக்க முடியும்.
இந்த ஆண்டு இறுதியில் 3பி பவர் சேனலில் கூடுதல் தகடுகளை பதிக்க திட்டமிட்டு உள்ளோம். அப்போதும் நாசா வீரர்கள், விண்வெளி நடையை மேற்கொள்வார்கள். விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக சென்றுள்ள அனில் மேனன் முதல்முறை வெற்றிகரமாக விண்வெளி நடையை மேற்கொண்டு உள்ளார். ஜெசிகாவுக்கு இது 6-வது விண்வெளி நடை ஆகும். இவ்வாறு நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கான விசா 62% சரிவு
புதுடில்லி, ஆக. 7- 2024ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2025இல் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க விசாவில் 62% சரிவு ஏற்பட்டுள்ளதாக சிஅய்எஸ் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிஅய்எஸ் (Center for Immigration Studies) ஆய்வு செய்த தரவுகளை மேற்கோள்காட்டி பிடிஅய் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: கடந்த 2024ஆம் ஆண்டில் மாணவர் விசா மூலம் அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 58,694 ஆக இருந்தது. இது 2025இல் 22,149 ஆக குறைந்துள்ளது. அதாவது, 62% சரிவு ஏற்பட்டுள்ளது.
சீன மாணவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க விசாவிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2024இல் 61,075 சீன மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கியது. இது 2025இல் 40,034 ஆக சரிந்துள்ளது. இது 34% சரிவைக் காட்டுகிறது.
பன்னாட்டு கல்விக்கான நிறுவனம் நடத்திய ஆண்டுக் கான கணக்கெடுப்பின்படி, 2024-2025 கல்வியாண்டில் அமெரிக்காவில் உயர்கல்வி படித்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 77 ஆயரத்து 766 ஆக இருந்தது. இதில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 63 ஆயிரத்து 019 ஆகவும், சீன மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 65 ஆயிரத்து 919 ஆகவும் இருந்தது. மொத்த வெளிநாட்டு மாணவர்களின் இது 53 சதவீத மாக இருந்தது. இந்த மாற்றம் அமெரிக்க மாணவர்களுக்கு சாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது.
