கலைஞர் என்றும் வாழ்கிறார் – தத்துவங்களாய்! வருக அவர் விரும்பிய சுயமரியாதைச் சுக வாழ்வு, சமத்துவம் என்று ‘மானமிகு சுயமரியாதைக்காரர்’ கலைஞரது நினைவு நாள் சிந்தனையாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
இன்று (7.8.2026) திராவிட இயக்கத்தின் ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’ என்று தன்னை ஒரு வரி விமர்சனத்திற்குள் அடக்கி, பதிலளித்த வித்தகர் முத்தமிழறிஞர் கலைஞர் மறைந்து (2018) 8 ஆண்டுகள் ஆகிவிட்டன.
புத்தம் புதிய விளைச்சலைத் தரும் வீரிய விதையாகவே விதைக்கப்பட்டிருக்கிறார்!
கலைஞர் என்ற உடல் வேண்டுமானால் அண்ணா விற்குப் பக்கத்தில் புதைக்கப்பட்டிருக்கலாமே தவிர, மற்றபடி, திராவிட இன எழுச்சி, பெரியார், அண்ணா பாதையில் – நித்தம் நித்தம் புத்தம் புதிய விளைச்சலைத் தரும் வீரிய விதையாகவே விதைக்கப்பட்டிருக்கிறார்!
தனது இறுதி முடிவு எய்தும் வரை, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போலவே, காலத்தை வென்ற ஈரோட்டுக் குருகுலத்தின் தேரோட்டியாகவே பகுத்தறிவுக் கொள்கைக்கலனாய், கலையின் கருவூலமாய், லட்சியம், கொள்கைகளைத் தனது எழுத்து, பேச்சு, ஆளுமை ஆற்றல்கள், பரப்புரைப் பயணங்களால் செம்மையாக்கியத் தனி வரலாற்றைப் படைத்த ஒப்பற்றத் தனித்தன்மையாளர் கலைஞர்!
கலைஞர் என்றும் வாழ்கிறார் – தத்துவங்களாய்!
‘‘பதவிச் செங்கோல் என்னிடம் வந்து போகலாம்; ஆனால், எனது நாவையும், பேனாவையும் என்னிடமிருந்து எவராலும் பறிக்க முடியாது’’ என்று தனக்கு ஏற்பட்ட சோதனைகளை எதிர்கொண்டு, நெருப்பாற்றில் நீந்தி, புது வரலாற்றுப் பாடத்தை அடுத்த தலைமுறைகளுக்கும் கற்றுத்தந்த ஒரு பல்கலைக் கழகம் அவர். அவரால் செதுக்கப்பட்ட இன்றைய தி.மு.க. தலைவர், ‘திராவிட மாடலின்’ சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மு.க.ஸ்டாலினின் தலைமை, தற்போது ஏற்படும் சோதனைகளையும் வென்று, மலையென வரும் இன்னல்கள், அடக்குமுறைகள் பனியெனக் கரைந்து போகக்கூடிய அமைதியான அணுகுமுறையின் செயல்வடிவம்!
எனவே, கலைஞர் என்றும் வாழ்கிறார் – தத்து வங்களாய்!
வாழ்க கலைஞர்!
வருக அவர் விரும்பிய சுயமரியாதைச் சுக வாழ்வு, சமத்துவம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
7.8.2026
