தொகுதி சீரமைப்பு, தொகுதி எண்ணிக்கையை அதிகப்படுத்தும் மசோதாக்களை ஏற்கமாட்டோம் என்ற முடிவில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்கவேண்டும்!
தொகுதி சீரமைப்பு, தொகுதி எண்ணிக்கையை அதிகப்படுத்தும் மசோதாக்களை ஏற்கமாட்டோம் என்ற முடிவில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்கவேண்டும்! ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், உரிமையையும் தீர்மானிக்கும் பிரச்சினை இது! கவனம்! கவனம்!! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா முதலிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் முன்பு, அவசர அவசரமாக கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, அதில் நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகப்படுத்துவதையும், தொகுதி மறுவரையறையையும் ஏற்கெனவே கொள்கை அளவில் பா.ஜ.க. அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டையும் இணைத்து செயல்பாட்டுக்கு வருவதற்கு, அதுவும் 2029 ஆம் ஆண்டிற்கு அப்பால் மசோதாவை நிறைவேற்றிட ஒன்றிய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசு வெகுவாக முயற்சித்தது.
அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால்!
அதனுடைய உள்நோக்கத்தை அன்றே அறிந்த தி.மு.க. தலைவரும், அன்றைய தமிழ்நாடு முதலமைச்ச ருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியாலும், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் கட்டுப்பாடு காரணமாகவும், அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குத் தேவைப்படும் மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு (2/3 Majority in Lok Sabha) பெறாமல் (அதாவது 278 வாக்குகள் மட்டும் பெற்று) தோல்வி அடைந்தது.
எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த ஒரே குரல், ஒரே அணியாகத் திரண்டதால், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் முயற்சி தோற்கடிக்கப்பட்டது.
பல வியூகங்களை, கண்ணிவெடிகளை வைக்கிறது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஒன்றிய அரசு!
அன்றைக்கு அந்த மசோதா நிறைவேற்றத்திற்கு ஆதரவு திரட்ட முடியாத நிலையில், மீண்டும் அதே முயற்சியில், பலமான திட்டத்துடன், இப்போது ஆயத்தமாகின்றனர். இந்தத் தொடர் நடைபெறும்போதே எப்படியாவது எதிர்க்கட்சியில் சிலரது வாக்குகளை வாங்கியாவது நடப்பு நாடாளுமன்றத் தொடரிலேயே சர்ச்சைக்குரிய இம்மசோதா வெற்றி பெற பல வியூகங்களை, கண்ணிவெடிகளை வைக்கிறது
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஒன்றிய அரசு.
வழக்கமான ஆரிய நரித்தன முறையில், ‘‘உங்கள் மாநிலத்தில் உள்ள தொகுதி எண்ணிக்கையை குறைக்க மாட்டோம்; ஆனால், மற்ற மாநிலங்களின் எண்ணிக்கைகளைக் கூட்டுவோம்’’ என்று ஒரு சூழ்ச்சி வலையைப் பின்னி, அதில் முன்பு எதிர்த்த கட்சி களுக்குப் பலவித ஆசைகளைக் காட்டி, சரிப்படுத்திட முழு வீச்சில் தயாராகிவிட்டது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஒன்றிய அரசு.
அன்றும் முன்வைத்தோம்;
இன்றும் வைக்கிேறாம்!
முக்கியமாக இரண்டு கேள்விகளை அன்றும் முன்வைத்தோம்; இன்றும் வைக்க விரும்புகிறோம்.
தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கையைக் குறைக்காமல், ஜனத்தொகை பெருத்த வட மாநிலங்களில், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பெருக்கிவிட்டால், எதிர்காலத்தில் வாக்கெடுப்பு நடத்தி, அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே தலைகீழாக மிக எளிதாக மாற்றிவிட முடியும். அதற்குக் கால்கோள் விழா நடத்துவதற்கான முன் ஏற்பாடுகளே!
இதுதான், ஆதிக்கவாதிகளின் உள்நோக்கம் கொண்ட திட்டம் என்பதை முதலில் எல்லா எதிர்க்கட்சியினரும் உணர்ந்து கொண்டு, தங்களுக்குள்ள வேற்றுமைகளைப் புறந்தள்ளி, எந்த ரூபத்தில் இந்த அரசியல் சூழ்ச்சி வந்தாலும், அதனை முறியடித்தாகவேண்டும்.
மற்றொரு முக்கியக் கேள்வி – மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஏற்கெனவே பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தந்து, அம்மசோதா நிறைவேற்றப்பட்டும் விட்டதே! அதை யார் இனி தடுக்கப் போகிறார்கள்? உடனடியாகச் செயல்படுத்தலாமே!
‘‘கோயபெல்ஸ்’’ பாணி பிரச்சாரம் முறியடிப்பு!
தொகுதி சீரமைப்பு மறுவரையறை மசோதாவுடன், மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவையும் முடிச்சுப் போட்டு, மகளிரிடம், ‘‘பாருங்கள், பாருங்கள், நாங்கள் உங்களுக்கு ஒதுக்கீட்டை செய்ய எதிர்க்கட்சியினர் முட்டுக்கட்டை போடுகின்றன’’ என்று ஒரு ‘‘கோயபெல்ஸ்’’ பாணிப் பிரச்சாரத்தினை நடத்திடலாம் என்பதுதானே இவர்களின் திட்டம்! அதை முறியடித்தாகிவிட்டதே!
எனவே, எக்காரணத்தை முன்னிட்டும், தமிழ்நாட்டுக் கட்சிகள், ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி.யின் இன்றைய வடிவ மசோதாவை ஏற்கக் கூடாது என்பதில் ஊசலாட்டமின்றி, தெளிவான நிலைப்பாட்டுடன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வேண்டும்.
கவனம்! கவனம்!!
முக்கிய கவனம்!!!
‘முதலில் காலைப் பிடி; முடிவில் குடுமியைப் பிடித்தாட்டு’ என்பது ஆரியத்தினருக்கு பழகிப் போன மாயவலை நடத்தை!
எனவே, இவர்களது இந்த மசோதா நிலைப்பாடு என்பது ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், நிகழ்காலத்தில் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரு தலைமுறை சார்ந்த உரிமையையும் தீர்மானிக்கக் கூடிய முடிவு!
‘அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றம்’ என்ற நிலையில், எதிர்க்கட்சிகள் சறுக்கிவிடக் கூடாது!
கவனம்! கவனம்!! முக்கிய கவனம்!!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
7.8.2026
