சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, மக்கள் இயக்கம் – தீவிரப் பிரச்சாரத் திட்டங்கள்!

புவி வெப்பமயமாதல், இயற்கைப் பேரிடர்களிலிருந்து
மனித குலத்தைக் காக்க நிரந்தரத் தீர்வுகளை நோக்கிச் செயல்படவேண்டும்!
“சுற்றுச்சூழல் காப்பது பிறருக்காக அல்ல; நமக்காக!”

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

புவி வெப்பமயமாதல், இயற்கைப் பேரிடர்களிலிருந்து மனித குலத்தைக் காக்க நிரந்தரத் தீர்வுகளை நோக்கிச் செயல்படவேண்டும்! சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி,  மக்கள் இயக்கம் – தீவிரப் பிரச்சாரத் திட்டங்கள்! “சுற்றுச்சூழல் காப்பது பிறருக்காக அல்ல; நமக்காக!” என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு

Contents
புவி வெப்பமயமாதல், இயற்கைப் பேரிடர்களிலிருந்து மனித குலத்தைக் காக்க நிரந்தரத் தீர்வுகளை நோக்கிச் செயல்படவேண்டும்! “சுற்றுச்சூழல் காப்பது பிறருக்காக அல்ல; நமக்காக!”திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிநமது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியாக வேண்டியது நமது கட்டாயக் கடமை!‘சடங்காச்சாரமாக’க் கருதாமல், உயிர்க் கடமையாகச் செய்யவேண்டும்!அனைவரும் அறியவேண்டிய, ஒரு முக்கிய தகவல்அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரங்கள் எவை?கட்சி, ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு உருவாக்கிச் செய்ய வேண்டியது அவசர, அவசியம்!இயற்கை நுண்ணறிவை உருவாக்க உழைப்போம், வாரீர்! வாரீர்!!

இவ்வாண்டு நமது தமிழ்நாட்டில் மட்டுமல்ல ‘புவி வெப்பமயமாதல்’ காரணமாக உலகெங்கும் கோடைக் கொடுமையை நாம் அனைவரும் தாங்கொணாத துன்பத்துடன் தாங்கிக் கொண்டி ருக்கிறோம். இதற்கு தற்காலிகத் தீர்வுகள், சகிப்புடன் ஏற்றல் பற்றித்தான் நம் மக்களில் பெரிதும் பேசுகிறோம்.

நமது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியாக வேண்டியது
நமது கட்டாயக் கடமை!

கோடை வெப்பத் தாக்குதல், பருவ மழை குறைவான அளவு பொழிதல் மூலம் பற்றாக்குறை, திடீர் இயற்கைப் பேரிடர் போன்ற பலவற்றிற்கு சரியான தீர்வுகள் பற்றிய விழிப்புணர்வை நமது மக்களிடையே ஏற்படுத்தியாக வேண்டியது நமது கட்டாயக் கடமை என்பதை இயற்கை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டேயிருக்கிறது.

நமது இயக்கமான திராவிடர் கழகத்தின் சார்பிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வை – மக்கள் இயக்கத்தை இந்தக் காலகட்டத்தில் தீவிரப்படுத்துவது அனைவரது அன்றாடக் கடன் அல்லவா?

ஒத்த கருத்துள்ள ‘பூவுலகின் நண்பர்கள்’ போன்ற அமைப்பினரையும் ஒருங்கிணைத்து, முதலில் சீரிய பரப்புரையை நடத்திட வேண்டி யது அவசர, அவசியம் ஆகும்.

‘சடங்காச்சாரமாக’க் கருதாமல்,
உயிர்க் கடமையாகச் செய்யவேண்டும்!

காற்று மாசு அடைவதைத் தடுக்க ஆங்காங்கு மரம், செடிகளை ஏராளம் நடுவதை, வளர்ப்பதை ஏதோ ‘சடங்காச்சாரமாக’க் கருதாமல், உயிர்க் கடமையாகச் செய்யவேண்டும்.

வீட்டுக்கு வீடு, மரம், செடி வளர்ப்போம்! குறுகிய இட வசதி என்றாலும், அதற்கு ஏற்ப, தக்க ஆலோசனைகளை, உரியவர்களிடமிருந்து நாம் பெறுதல் முதல் கடமை.

இரண்டாவது, அவரவர் வசதி வாய்ப்புக்கேற்ப இந்தப் பணியை ஏதோ அரசு கட்டளையாகக் கருதாமல், நமது இன்றியமையாமைப் பாது காப்புப் பணிகளில் தலையாயது என்றே முடிவு செய்து, இப் பணியில் அனைவரும் உற்சாகம் காட்டவேண்டும்.

மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தீவிரப் பிரச்சாரத் திட்டத்தை, அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்திச் செயலில் இறங்க வைக்கும் முயற்சி வெற்றிகரமாக்கப்படல் வேண்டும்.

அனைவரும் அறியவேண்டிய,
ஒரு முக்கிய தகவல்

‘தினத்தந்தி’ நாளேட்டில், ‘தினம் ஒரு தகவல்’ என்ற தலைப்பில், நேற்று (2.5.2026) அனைவரும் அறியவேண்டிய, ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.

மரங்கள் மனித குலத்திற்குத் தரும் அருட்கொடை (அறிவியல்படி) இதோ:

அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரங்கள் எவை?

‘‘நன்றாக வளர்ந்த ஒரு மரம், ஒரு நாளைக்கு 2 முதல் 10 மனிதர்கள் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என கண்டறியப்பட்டு உள்ளது. ஒரு முதிர்ந்த மரம் ஓராண்டுக்கு ஏறக்குறைய 260 பவுண்டு ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். பொதுவாக, மரங்கள் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஆக்சிஜன் மற்றும் குளுக்கோசை உற்பத்தி செய்கின்றன. மரங்கள் பகல் நேரத்தில் ஆக்சிஜனை வெளியிடும். அதே வேளையில், இரவு நேரத்தில் சுவாசிப்பதற்காக அதில் சிறிதளவு பயன்படுத்துகின்றன. மரங்களைப் பொறுத்த வரை, அகன்ற இலை கொண்ட மரங்கள், அவற்றின் அதிக இலை மேற்பரப்பு காரணமாக சிறிய இலைகளைக் கொண்ட ஊசியிலை மரங்களை விட அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன.

இவற்றை எல்லாம்விட, ஒரு இடத்தில் மரங்கள் அதிக அளவில் இருந்தால் அந்த இடத்தின் வெப்பநிலை சுமார் 5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து குளிர்ச்சியாக காணப்படும் என்றும் ஆய்வுகள் தெரி விக்கின்றன. ஒரு புள்ளி விவரப்படி, ஒரு மனிதனுக்கு 699 மரங்கள் என்ற விகிதம் அமெரிக்காவில் காணப்படுகிறது. இதுவே ஆஸ்திரேலியா 3,266, பிரான்சு 203, எத்தியோப்பியா 143, கிரீன்லாந்து 4,964 என்ற அளவில் காணப்படுகிறது. இந்தியாவில் ஒரு நபருக்கான மரங்களின் எண்ணிக்கை உலகின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. எதிர்காலத்தில் இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலையின் தாக்கம் குறைய வேண்டும் என்றால், மேற்கண்ட நாடுகளை போல மரங்களை ஏராளமாக வளர்க்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.”

இதுதான் ‘தினத்தந்தி’ நாளேடு தந்துள்ள செய்தி!

கட்சி, ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு உருவாக்கிச் செய்ய வேண்டியது அவசர, அவசியம்!

பசுமைப் பரப்பை அதிகரிப்பது, காற்று மாசுபாடைக் குறைப்பது உள்ளிட்டவற்றோடு நம்மிடம் ஏற்கெனவே இருக்கும் இயற்கை வளங்களையும் நம்மைக் காக்கும் அரண்களாகக் கருதி அவற்றைப் பாதிக்கும் திட்டங்களையும், கொள்கைகளையும் அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்து, நாட்டின் தொழில் வளர்ச்சி என்ற கண்ணோட்ட மும் பாதிக்கப்படாமல், இரு வேறுபட்ட விஷயங்கள் ஒன்றோடொன்று அழகாகக் கலந்து, அமைதியாக இணைந்து செயல்படுவதைப் போன்ற Harmonious Blend Reconciliation திட்டங்கள்மூலம் மக்கள் நலனை முதன்மையாக்கி, ஒரு தொடர் இயக்கத்தைத் தன்னார்வ தொண்டர்கள் மூலம் – கட்சி, ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு உருவாக்கிச் செய்ய வேண்டியது அவசர, அவசியம்.

ஊடகங்கள், குறிப்பாக  தொலைக்காட்சிகள் – மக்களுக்கு இதன் தேவை பற்றிய விழிப்பு ணர்வூட்ட, ஒவ்வொரு நாளும் சுவையும், சுவாரசியமும் கொண்ட நிகழ்ச்சிகளை உரு வாக்கி, மக்களிடையே ஒரு புத்தெழுச்சியை உருவாக்குவது மிகவும் இன்றியமையாததாகும்.

இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) நுழைகிறது. இதன் பார தூர விளைவுகள், எதிர் விளைவுகள் – சுற்றுச்சூழல் கண்ணோட்டத்துடன் மக்களிடையே பரப்புரை, கருத்துரை மூலம் விளக்கி வருவது முக்கியம்.

அரசுகளையே எதிர்பார்க்காமல், மக்கள் அமைப்புகளே தங்களது இணக்கமான ஒருங்கிணைப்பின்மூலம் இதற்குத் தக்க பரிகாரம் காணவேண்டும்; காண முடியும்.

இயற்கை நுண்ணறிவை உருவாக்க
உழைப்போம், வாரீர்! வாரீர்!!

மனித குலம் சந்திக்காத சவால்களா? மனிதனின் ஒப்பற்ற பகுத்தறிவு இதற்கும் தக்க விடையைத் தீர்வாகத் தருவது உறுதி!

“சுற்றுச்சூழல் காப்பது பிறருக்காக அல்ல; நமக்காக” என்ற இயற்கை நுண்ணறிவை உருவாக்க உழைப்போம், வாரீர்! வாரீர்!!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை  

3.5.2026              

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *